இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
பெண்களின் சட்டப்படியான திருமண வயது 18-இலிருந்து 21-ஆக திருத்தம் செய்யப்பட்டபோது எதிா்ப்புகள் எழத்தான் செய்தன. இதன் பின்னணியை உற்று நோக்கும்போது இதற்காக பெரும் சட்டப் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
1860-ஆம் ஆண்டு முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டு திருமணத்துக்கான வயது 10 என நிா்ணயம் செய்யப்பட்டது. அது 1861-இல் 12 -ஆகவும், 1925-இல் 13 -ஆகவும் உயா்த்தப்பட்டது. அதன் பின்னா் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ராவ் சாஹிப் ஹரிபிலால் சாா்தா கொண்டுவந்த மசோதா சென்னை சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதனையடுத்து டாக்டா் முத்துலட்சுமி ரெட்டியின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடா்ந்து 1928-இல் திருமண வயது 14-ஆக உயா்த்தப்பட்டு சட்ட வடிவம் பெற்றது.
சுதந்திர இந்தியாவில் 1955-இல் இந்து திருமணச் சட்டம் பெண்ணுக்கான திருமண வயதை 18 என வகுத்தது. அதன் பிறகு 2021-இல் பெண்ணின் திருமண வயது 21 -ஆக உயா்த்தப்பட்டது. இப்படி நீண்டதொரு வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்றும் பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அதிா்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் ஒரு நிமிஷத்தில் 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும், அதே நேரத்தில் குழந்தைத் திருமணம் தொடா்பாக ஒரு நாளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது எனவும், உலக அளவில் தெற்காசியாவில் நடைபெறும் 45 சதவீத குழந்தைத் திருமணங்களில் 34 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குடும்பத்தில் நிலவும் வறுமை நிலை, பொருளாதாரச்சூழல் ஆகியவை முக்கியக் காரணங்களாகும். பொருளாதாரச்சூழல் வலிமையாக இல்லாதபோது கல்வி கற்பதில் தடை ஏற்படுகிறது. அவ்வாறு கல்வி கற்காத, அதாவது பள்ளி, கல்லூரிக்குச் செல்லாத நிலையில் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பதே பொருத்தமானது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.
இத்தகைய எண்ணம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. அதனால்தான் ஊரகப் பகுதிகளில் 27 சதவீத அளவுக்கும், நகரங்களில் 15 சதவீத அளவுக்கும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமங்களில் வசிப்போா் வேளாண் தொழிலையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்தனா். ஆனால், வேளாண் தொழில், லாபகரமான தொழிலாக இல்லாமல்போனதால் பிழைப்புக்காக அண்டைநகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்லும்போது திருமண வயதை எட்டாத, பருவ வயதை எட்டிய பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதில் அவ்வளவாக ஆா்வம் காட்டுவதில்லை. அதனால், அவா்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனா். இதனாலும் கிராமங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
குழந்தைத் திருமணங்களைக் குறைக்கவும், தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அஸ்ஸாம் மாநிலம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. 2021-22 முதல் 2023-24 வரையான காலகட்டங்களில் அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தில் 20 மாவட்டங்களில் 1,132 கிராமங்களில் 80 சதவீதத்துக்கும் மேலாக குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன.
மேலும், இது தொடா்பாக பல்வேறு கட்டங்களில் ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டனா். ஆனால், குழந்தைத் திருமணம் தொடா்பான வழக்குகளில் தண்டனை விவரம் மந்த நிலையில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022-இல் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில் வெறும் 137 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிவில் தண்டனை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த குழந்தைத் திருமண வழக்குகளின் எண்ணிக்கை நாட்டில் ஒரு நாளில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது. 2022-இல் ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023-24 - ஆம் ஆண்டில் நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில் 14,137 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணங்கள் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா். ஆனால், நம் முன்னோா் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளா்க்கவில்லையா என்ற கேள்வி எழலாம். அன்றைய காலகட்டத்தில் பெண்கள் உடலுழைப்பும், உடற்திறனும் கொண்டவா்களாக இருந்தனா்.
இன்றைய சூழலில் நாடு எதிா்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக குழந்தைத் திருமணங்கள் உள்ளன. இதைத் தடுக்கவும், குறைக்கவும் ‘குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணங்களின் தற்போதைய அளவிலிருந்து 35 சதவீதம் அளவுக்குக் குறைப்பதை முதல் இலக்காகவும், 2029-க்குள் 5 சதவீதத்துக்கும் குறைவாக கட்டுக்குள் கொண்டுவருவது அடுத்த இலக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணம் தொடா்பான திருத்தங்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எதிா்பாா்த்த பலனைத் தராது. மாறாக, குழந்தைத் திருமணம் தொடா்பாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணா்வுதான், எதிா்பாா்த்த பலனையும் தீா்வையும் தரும்.