நடுப்பக்கக் கட்டுரைகள்

பாரதம் உலகுக்கு வழிகாட்டும்!

சுதந்திர நாளையொட்டி ஏப்ரல் 1947 முதல் ஆகஸ்ட் 15 வரை நடந்த அரிய நிகழ்வுகள் குறித்து..

முனைவா் அ. பிச்சை

இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947 ஆகஸ்ட் 15 அன்று; அனைவரும் அறிவோம் இதனை; ஆனால், ஏப்ரல் 1947 முதல் ஆகஸ்ட் 15 வரை நடந்த நிகழ்வுகள் பல நம் நெஞ்சத்தைத் தொடுவன: எவரும் எதிர்பார்க்காதவை. இந்தியா விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஜனநாயகப் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டு, உலகின் நான்காவது பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படும் நாம், நமது 79-ஆவது சுதந்திர தினத்தன்று, சில அரிய நிகழ்வுகளை அறிந்து கொள்வது அவசியம்.

ஏப்ரல் 1-ஆம் நாள் மாலையில், அண்ணல் காந்தி தங்கியிருந்த தூய்மைப் பணி தொழிலாளர்கள் வாழும் பங்கி காலனியில் தனது நடைப்பயிற்சியை முடிக்கிறார். அதன்பிறகு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோயிலின் முன் தனது பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடங்குகிறார். வழக்கம்போல், பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, குரான் வாசகத்தையும் படிக்கிறார் மனு காந்தி.

ஹிந்து கோயிலுக்குள் குரான் படிப்பது கூடாது என ஓர் இளைஞன் கூக்குரலிடுகிறார். கூடியிருந்தவர்கள் அவனை அப்புறப்படுத்துகிறார்கள். அது கண்ட அண்ணல், "எம் மதமும் எனக்கு சமமே! இச் செயல் என் கொள்கைக்கு எதிரானது; அஹிம்சைக்கு எதிரானது. அவனது மனமும் மாறும்; மனமாற்றத்துக்கு நான் பாடுபடுவேன். வெற்றியும் பெறுவேன்; அதற்கு அனைவரும் எனக்குத் துணை நிற்க வேண்டும்' என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். "மதச்சார்பின்மை' அவர்முன் நிறுத்திய கொள்கைகளில் முக்கியமான ஒன்று.

விடுதலை வேள்வியில் ஏப்ரல் 2 மிக முக்கியமான நாள். அன்றுதான் வைஸ்ராய் மவுண்ட் பேட்டனை அண்ணல் காந்தி சந்தித்து உரையாடுகிறார். அப்போது, வைஸ்ராய் அண்ணலிடம் ""சுதந்திரம் வேண்டும்; ஆனால், பிரிவினைக் கூடாது என்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன'' எனக் கேட்கிறார்.

அண்ணல் சொல்கிறார்; ""ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசை முதலில் பதவிநீக்கம் செய்யுங்கள்; அடுத்து, பாகிஸ்தான் கோரிக்கையை வைக்கும் ஜின்னாவை அழையுங்கள். ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரிடம் ஒப்படையுங்கள். அமைச்சர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாகவே இருக்கட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. இதுதான் என் தீர்வு'' என்கிறார். ஆனால், அந்தப் பதிலைக் கேட்ட மவுண்ட் பேட்டன் வியப்படைந்தார் என்பதைவிட, மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

""இதில் ஏதோ சூழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பதுதான் ஜின்னாவின் உணர்வாக, பதிலாக இருக்கும்!'' என்றார் மகாத்மா காந்தி. ""நான் உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்கிறேன். ஒன்றுபட்ட இந்தியா என்ற என் லட்சியத்துக்கு இதுவே வழி; முழுக்க உண்மை! இதில் சூதும் இல்லை; சூழ்ச்சியும் இல்லை. இதனை ஜின்னா உணர்ந்தால் பிரச்னைக்கு தீர்வு பிறந்துவிடும். சுதந்திரம் வந்துவிடும். ஒன்றுபட்ட இந்தியாவும் நிலைத்துவிடும்'' என்றார் அண்ணல் காந்தி.

""ஜின்னாவும் முஸ்லிம்களும் ஏற்க மாட்டார்கள் என்பது ஒருபுறம். அடுத்து உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸýம், நம்பிக்கைக்கு உரிய காங்கிரஸ் தலைவர்களும் ஏற்பார்களா?'' - என்பது வைஸ்ராயின் இரண்டாவது கேள்வி.

அதற்கு மகாத்மா காந்தி தந்த பதில்: ""என் சகாக்களுடன் கலந்து பேசிச் சொல்கிறேன்'' என்பதாகும். முதலில் நேருவும், படேலும் முற்றிலுமாக எதிர்த்தார்கள். அன்றைய காங்கிரஸ் தலைவர் கிருபளானியும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களும் ஆதரிக்கவில்லை. இருப்பினும், தேசப் பிரிவினையைத் தவிர்க்க தன்னம்பிக்கையோடு முயன்றார் காந்திஜி.

மவுண்ட் பேட்டன் மகாத்மா காந்தியிடம், ""காந்தி அவர்களே! வேறு மாற்று ஆலோசனை ஏதேனும் உண்டா?'' என மூன்றாவது கேள்வியை எழுப்பினார்.

"ஆட்சி அமைக்க நாம் அளிக்கும் வாய்ப்பை ஜின்னா ஏற்க மறுக்கிறார். அவர் எடுத்த முடிவு அது; ஜின்னாவுக்கு வாய்ப்பு அளித்ததுபோல், அவர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அதே வாய்ப்பை ஜவாஹர்லாலுக்கு கொடுங்கள். காங்கிரúஸ ஆட்சி அமைக்கட்டும். நாட்டை ஒருங்கிணைந்து வழி நடத்தட்டும்'' என்றார் மகாத்மா காந்தி.

"ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் ஒரு காலகட்டத்தில் ஹிந்து மன்னர்களும், அடுத்து முகலாய மன்னர்களும். அதன் பிறகு, இன்றுவரை ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்திருக்கிறார்களே! அதேபோல், சுதந்திர இந்தியாவில் காங்கிரúஸô, முஸ்லிம் லீக் கட்சியோ தனித்து ஆட்சி அமைத்துப் பார்த்தால் என்ன? அடிப்படையில் நாம் அனைவரும் இந்தியர்கள்தானே!

இந்தியர்களை இந்தியர்களே ஆள்வதை நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? இதுவே என் பதில்'' என்றார் காந்திஜி.இந்தச் சூழலில் மெüனி ஆனார் மவுண்ட் பேட்டன்.

"மகாத்மாவின் அறிவுரைகள் மானுட நலன் சார்ந்தது. ஆனால், அதனை யாரும் கேட்கத் தயாராக இல்லை. ஆகவே, தனிமனிதனாக நடக்கத் தொடங்கினார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தார் மகாத்மா'' என்கிறார் தலைவர் கிருபளானி.

இதற்கிடையில் இதுவரை வெளி வராத ஒரு தீர்வை சட்டமேதை அம்பேத்கர் தனது நூல் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதன் கருப்பொருள் வருமாறு:

இந்திய தேசம் என்றும்போல் ஒன்றாக இருக்கட்டும். அதற்குள் இரண்டு நாடுகள் இயங்கட்டும். ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதி "ஹிந்துஸ்தான்' என்று பெயரிடப்படும். இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி "பாகிஸ்தான்' என்று அழைக்கப்படும். அரசமைப்புச் சட்டம் இரண்டுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கட்டும்.சாவர்க்கர், ஜின்னா இருவரும் "இருநாடு, ஒரே தேசம்' கொள்கையை ஏற்ற போதிலும், அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வில் இருவரும் வேறுபட்டு நின்றனர். ஆகவே, இந்த ஆலோசனையும் எடுபடவில்லை. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்தது.

அந்தக் குழந்தைக்கு இன்று 79-ஆவது பிறந்த நாள்; பாரத தேசம்! உலகுக்கே வழிகாட்டும்! நம் தேசத்தை நேசிப்போம்! தேசப் பிதாவை வணங்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

SCROLL FOR NEXT