நண்பர் ஒருவர் தமது பெண்ணுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தார். வரப்போகும் மாப்பிள்ளை சுயதொழில் செய்து கௌரவமான வருமானம் ஈட்டக்கூடிய இளைஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அந்த நண்பர்.
நண்பரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இளைஞர் ஒருவர் அவரிடம் பெண் கேட்டு வந்தார். சுயதொழில் செய்பவராகிய அந்த இளைஞர் உணவகங்களில் பல்வேறு உணவுவகைகளை பொட்டலம் போட்டு வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் "பேக்கிங் மெட்டீரியல்' எனப்படும் கட்டுப்பொருள்களை விற்று வருமானம் ஈட்டுபவராம்.
நகரிலுள்ள பிரபல உணவகங்களுக்கு அந்தப் பொருள்களை விநியோகம் செய்வதன் மூலமே மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் லாபம் ஈட்டுவதாகக் கூறினார்.
இந்தத் தொழிலில் நிலையான வருமானத்துக்கு வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, உணவகங்களிலிருந்து உணவுப் பொருள்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் இருப்பிடத்துக்கே கொண்டு வந்து தருகிற தனியார் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் இருக்கும் வரை எனது வருமானம் குறித்து பயப்படவே தேவையில்லை என்று உறுதியாகச் சொன்ன அந்த இளைஞருக்கே தம்முடைய மகளைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் என்னுடைய நண்பர்.
நண்பரின் இல்லத்தில் விரைவில் கெட்டிமேளச் சப்தம் கேட்க வாழ்த்துகிற அதே வேளையில், தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் வருகை நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை எனது மனம் அலசத் தொடங்கியது.
பசித்தவர்களுக்கும், நடைப்பயணமாக பயணிப்பவர்களுக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் தருமசத்திரங்கள் எனப்படும் அன்னசத்திரங்களும் தண்ணீர்ப் பந்தல்களும் பல நூற்றாண்டுகளாக இயங்கிவந்த தேசம் நம்முடையது.
அப்பூதியடிகள் தம்முடைய மதிப்பிற்குரிய திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தலை அமைத்து தருமம் செய்ததாகச் சரித்திரம் கூறுகிறது. நாகப்பட்டினத்தில் இயங்கிய அன்னசத்திரம் ஒன்றில் ஓரிரவு தங்கிய காளமேகப்புலவர், அங்கே உணவு கிடைக்கத் தாமதமானதை விமர்சித்துத் தமக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய வெண்பா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவருட்பிரகாச வள்ளலாரால் வடலூரில் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை பசிப்பிணி போக்கும் அருந்தொண்டை புரிந்து வருகிறது.
பசிப்பிணியைப் போக்குகின்ற உணவினைக் காசுக்கு விற்காமல், இலவசமாகவே வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் நமது பாரத தேசத்தினரின் வாழ்வோடு காலம்காலமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அவரவர் இல்லத்து விழாக்களானாலும் சரி, திருக்கோயில் உற்சவங்களானாலும் சரி, அவற்றின் ஓர் அங்கமாக அன்னதானம், அன்னம் பாலித்தல், விருந்து, ததீயாராதனை, சமாராதனை என்று பல பெயர்களில் ஊரார்க்கு உணவு வழங்குதலை ஒரு கடமையாக நமது சமூகம் செய்துவந்துள்ளது.
மாறிவரும் சமூகச் சூழல் காரணமாக காசுக்கு உணவுப் பண்டங்களை விற்கும் உணவகங்கள் கஃபே, கிளப், பவன், விலாஸ், ஹோட்டல் ஆகிய ஒட்டுப்பெயர்களுடன் கூடிய உணவகங்கள் கடந்த நூற்றாண்டில் ஆங்காங்கே தொடங்கப்பட்டு நாளடைவில் பல்கிப் பெருகத் தொடங்கின.
தத்தமது குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக வசிப்பவர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தத்தமது இல்லங்களில் சமையல் செய்து சாப்பிட இயலாதவர்கள், வெளியூர் பயணிகள் ஆகியோரின் பயன்பாட்டுக்கென தொடங்கப்பட்ட உணவகங்கள் நாளடைவில் நமது அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணையத் தொடங்கிவிட்டன.
தற்போது தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு அவரவர் இருப்பிடத்தில் இருந்தபடியே அவரவருக்கு விருப்பமான உணவுப் பண்டங்களை உள்ளூர் உணவகங்களிலிருந்து வரவழைத்து உண்பது பலருடைய வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியிருக்கிறது.
இதே நிலை மேலும் தொடர்ந்தால், அவரவர் வீடுகளில் சமைத்து உண்ணுவது என்பதே வழக்கொழிந்து போகும் என்றால் அது மிகையாகாது. தாயொடு அறுசுவை போம்! என்ற ஔவையாரின் கூற்று மிகவும் பொருள்வாய்ந்த சொற்றொடராகும்.
குடும்பத் தலைவிகள் சமையல் செய்ய, குடும்ப உறுப்பினர்கள் உண்டு பசியாறுதல் என்பது இவ்வுலகம் முழுவதும் காலம் காலமாக உள்ள மரபாகும். தாயாரின் கைப்பக்குவத்தில் அமைந்த உணவின் சுவையை அனுபவித்த எவர் ஒருவரும் வேறொருவரின் சமையலை விரும்ப மாட்டார்.
தாயாருடைய கைப்பக்குவம் மட்டுமின்றி அவரது அகத்தில் பொங்கித் ததும்புகின்ற தாய்ப்பாசமும் கலந்து பரிமாறப்படுகிற காரணத்தால் அந்த உணவே அமிர்தமாகிறது. அத்தகைய உணவு நமது உடலை மட்டும் வளர்க்காமல், உறவுகளிடையிலான பாசப்பிணைப்பையும் சேர்த்தே வளர்த்தது. கூட்டுக் குடும்பங்கள் செழித்தன.
உணவகங்களிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்கி, அவற்றை நமது வீட்டின் வாசலுக்கே கொண்டுவந்து கொடுக்கும் நிறுவனங்களின் சேவை உன்னதமானதுதான். அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுடைய வாழ்வாதாரமும் முக்கியமானதுதான். ஆனால், சமைத்து உண்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
அதே சமயம், அவரவர் வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிட முடியும் என்ற நிலையிலிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது உணவகங்களிலிருந்து வரவழைத்து உண்பது என்பது தேவையற்ற செலவுக்கு வழிவகுப்பதுடன், காலப்போக்கில் நம்முடைய குடும்ப உறவுகளிடையிலான பாசத்துக்கும் பிணைப்புக்கும் சேதாரத்தை உண்டாக்கக்கூடியது என்பதை நாம் அனைவரும் அவசியம் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.