தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம்.
"இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளன என்று "இண்டி' கூட்டணி தரப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்; பாஜகவில் 40 ஆண்டு காலமாக ஊறித் திளைத்தவர் சிபிஆர் என்று திமுக விமர்சிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களில் இருந்துதானே ஒருவரை நியமிக்க முடியும் என்பதை நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. 2002- ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடைய ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரித்து வெற்றிபெறச் செய்தபோது, கொள்கை ஞானோதயம் திமுகவுக்கு ஏற்படாதது ஏன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பது ஒரு சித்தாந்த மோதல் என்று அவர்கள் தரப்பு சொல்வதை, எந்தவொரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் ஒரு தமிழனின் உயர்வைத் தட்டிப் பறிக்கிற தேர்தல் போட்டியை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
அணுகுண்டு வெடித்து அகிலத்தின் கவனத்தை ஈர்த்த ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் என்கிற மனிதநேயப் பண்பாளரை திமுக எதிர்த்ததை இத்தருணத்தில் நாம் மறந்து விட முடியாது. இனம், மொழி, தமிழர் என்று பேசுபவர்கள் தங்களுடைய லாப, நஷ்ட கணக்குகளுக்காகவே அவற்றைத் தீர்மானிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை திமுக எப்படி மறுக்க முடியும்? சிபிஆர் என்று அழைக்கப்படும் சந்திரபுரம் பொன்னுச்சாமி ராதாகிருஷ்ணன் என்ற தமிழர் தனது படிப்படியான வளர்ச்சியின் மூலமே இத்தகைய உயரத்தைத் தொட்டிருக்கிறார். தமிழக அரசியலில் தீவிரத் தன்மையோடு இயங்கி பாரதிய ஜனசங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் நதிகள் இணைப்பு, தீண்டாமை மற்றும் தீவிரவாத ஒழிப்பை தமிழகத்தில் வலியுறுத்தி 18 ஆயிரம் கி.மீ. தொலைவு 93 நாள்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
1998-இல் மக்களவை உறுப்பினராகவும், மீண்டும் 1999-இல் இரண்டாவது முறை மக்களவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். இப்படி தொடர்ந்த இவருக்குத்தான் 15-ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
குடியரசு துணைத் தலைவராக மூன்றாவதாகப் பதவி வகிக்க உள்ள தமிழர் சி.பிஆர். இவருக்கு முன்பாக தமிழர்களான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணியைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.
தற்போது, மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்பிக்கள் ஆதரவு தேவை. இதன்படி 391 எம்.பி.க்கள் ஆதரவைப் பெறும் வேட்பாளர் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 421 எம்பிக்களும், எதிர்க்கட்சிகளின் "இண்டி' கூட்டணிக்கு 312 எம்பிக்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்தக் கூட்டணியின் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையிலும், தமிழரை திமுக எதிர்ப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களான சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சுதர்சன் ரெட்டி இருவரும் மாறுபட்ட இரண்டு தளங்களில் இருந்து போட்டியாளர்களாக அறியப்படுகிறார்கள். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்தலை நடத்த பாஜக மேற்கொண்ட முயற்சி வீணாய்ப் போனது. எதிர்க்கட்சிகள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னிறுத்தியதால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி புகழ்பெற்ற சட்ட வல்லுநரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார். தனது பதவிக்காலம் முழுவதும் குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட இந்திய நீதித் துறையில் பல உயர் பதவிகளை வகித்தவர்.
மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த அரசியல்வாதி. அவரது வாழ்க்கை முழுவதும் அரசியல் களத்தில்தான் பயணித்து வந்திருக்கிறது. 2007 முதல் 2011 வரை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக சுதர்சன் ரெட்டி பணியாற்றிய காலம் அவர் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த காலகட்டம். பின்னர், கோவாவில் முதல் லோக் ஆயுக்தவாகவும் நியமிக்கப்பட்டார். அதே வேளையில், சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநராகவும், கோவை தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜக முன்னாள் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தவரை சுதர்சன் ரெட்டி உஸ்மானியாபல்கலைக்கழகத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றவர். அதுவே அவரது சட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் வணிக நிர்வாகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். சுதர்சன் ரெட்டி தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிறந்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தார்.
இரண்டு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தை முன்வைத்து ஒரு போட்டியை உருவாக்கலாம் என்ற முயற்சியை "இண்டி' கூட்டணி ஏற்படுத்தினாலும் அறுதிப்பெரும்பான்மை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது.
இரு போட்டியாளர்களின் தொழில்முறை மற்றும் கல்விப் பின்னணியில் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள். இருந்தாலும், சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல் மற்றும் நிர்வாகப் பின்னணியாகும். அதேநேரத்தில், சுதர்சன் ரெட்டி நீதித் துறை மற்றும் அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். இந்த நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
"இண்டி' கூட்டணிக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான நீதிபதி ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார் என்பது மட்டுமே எஞ்சி நிற்கும்.
சுதர்சன் ரெட்டியின் கடந்த கால நீதித் துறை வாழ்க்கை அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பையும், சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நீதியைப் பேணிக்காத்ததும், பின்தங்கியவர்களுக்கு ஆதரவாகவும், அரசமைப்பு மதிப்புகளைக் கட்டிக் காத்தவர் என்பதிலும் மாறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.
கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு, கோவையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததிலும், தொழில் வளர்ச்சியை மீட்டெடுத்ததிலும் சி.பி.ராதா
கிருஷ்ணனின் பங்கு அளப்பரியது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் ஜவுளித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராகவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். பங்குச்சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராகத் திகழ்ந்திருக்கிறார். நடாளுமன்றக் குழுவின் ஒரு பகுதியாக ஐ.நா.பொதுச் சபையில் உரையாற்றியிருக்கிறார் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது.
மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்; பாஜகவுக்கு மக்களவையில் 240 எம்பிக்கள் உள்ளனர். அதே நேரம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் மக்களவையில் 293, மாநிலங்களவையில் 128; இவை அனைத்தையும் சேர்த்து 421-ஆக உள்ளது. ஆந்திரத்தின் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். சி.பி. கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அந்த 11 எம்பிக்களின் ஆதரவையும் சேர்த்தால் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு 432-ஆக உயரும்.
மறுபுறம் "இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு மக்களவையில் 235 எம்பிக்களும், மாநிலங்களவையில் 77 எம்பிக்களும் உள்ளனர். அவர்களின் மொத்த பலம் 312. ஆம் ஆத்மியின் 11 எம்பிக்களின் ஆதரவுடன் அவர்களின் பலம் 325 மட்டுமே. ஆக, இந்தக் கணக்கின் அடிப்படையில் வெற்றி யாருக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.