தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்கள் மழைப் பொழிவைப் பெற்று வருகின்றன.
மழையால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வீடுகளில் மழை, வெள்ளம் புகுந்ததால் பல இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முக்கிய சாலைகள், வீடுகளைச் சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் இத்துயர நிலை காணப்பட்டது.
மழை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மிக பலத்த மழை எச்சரிக்கையின் போது, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் சற்று தாமதம் நிலவியது. மழைக்காலம் என்பதால், அந்த நாள்களில் மாணவர்கள் படிக்காமல் இருக்கவும் முடியாது; பள்ளி செல்வதிலும் எண்ணற்ற இடர்ப்பாடுகள் உள்ளன.தமிழகத்தைப் பொருத்தவரை, பள்ளிக்கல்வியாண்டு என்பது பொதுவாக, ஜூன் 1}ஆம் தேதி தொடங்கி அடுத்தஆண்டு ஏப்ரல் 30}ஆம் தேதி வரையிலான காலமாகும். ஆண்டுக்கு ஆண்டு சில தேதிகள் மாறுபடலாம்.
ஓராண்டுக்கான பள்ளி வேலைநாள்களும் 216 முதல் 230 நாள்கள் வரை இருக்கும். எஞ்சிய நாள்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு அறிவிக்கும் பொதுவிடுமுறை நாள்களில் அடங்கும்.
அதிகபட்சம் 184 வேலை நாள்களைக் கொண்ட கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இரு பருவப் பாடத் தேர்வு முறையைக் கொண்டுள்ளன. நவம்பர், மே என இருமுறைகள் தேர்வு நடைபெறுகின்றன. பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை, கோடைக்காலத்தைவிட, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்தான் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் சிறார்கள் பள்ளிக்குச் சென்று வருவதில் நிறைய சிரமங்கள் உள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் கணிப்புகள் மாறி மழைப்பொழிவு இருப்பதில்லை. சில நேரங்களில் அதை மீறி பலத்த மழை பெய்கின்றன. இதனால், விடுமுறை அறிவிப்பில் குழப்பம், தாமதம் நிலவுகிறது.அவ்வப்போது போக்குக் காட்டும் நிச்சயமற்ற வானிலையை நம்மால் வெற்றி கொள்ள இயலாது. ஆனால், அதற்கேற்ப நாம் மாறிக் கொள்ள இயலும்.
இந்தக் கோணத்தில் ஆட்சியாளர்களும், கல்வித் துறையினரும், கல்வியாளர்களும் சிந்தித்து பள்ளிகளுக்கான விடுமுறை நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும்.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பது, அக்டோபர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரைதான். இதில் தொடர் மழை அல்லது பலத்த மழை என்பது 20 நாள்களுக்கு மட்டுமே இருக்கும். ஆதலால், இந்த 20 நாள்களுடன் 10 நாள்களைச் சேர்த்து, ஒருமாத காலம் மழைக்கால விடுமுறையாக அறிவித்துவிட்டால், பள்ளி செல்லும் மாணவர்கள் தற்போது எதிர்கொள்ளும் எல்லாவகை துன்பங்களும் இல்லாமல் போகும்.
தற்போது பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பரில் நடத்தப்பட்டு, தேர்வு விடுறைக்குப் பிறகு அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படுகின்றன.டிசம்பரில் நடைபெறும் அரையாண்டுத் தேர்வு முடிந்தவுடன், தேர்வு விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2 அல்லது அதற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வையும், அதற்குப் பிந்தைய விடுமுறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. இந்த நடைமுறையே தொடரலாம்.
காலாண்டுத் தேர்வை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தலாம். அதன் பிறகான விடுமுறையை சனி, ஞாயிறு என்ற இரண்டு நாள்களை ஒட்டிய 4 நாள்கள் என அமைக்கலாம். அரையாண்டுத் தேர்வை அக்டோபர் 21}ஆம் தேதிக்குள் முடித்திடலாம்; அதன் பிறகு நவம்பர் 21}ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தை அரையாண்டுத் தேர்வு, மழைக்கால விடுமுறையாக அமைக்கலாம்.
மழைக்கால விடுமுறையான இந்த 30 நாள்களை, காலாண்டுத் தேர்வு விடுமுறையில் குறைக்கப்பட்ட 6 நாள்கள், தீபாவளி விடுமுறை நாள் 2, சனி, ஞாயிறு உள்ளிட்ட பொது விடுமுறை நாள்கள் 8, கோடை விடுமுறையில் சரிசெய்ய வாய்ப்புள்ள
14 நாள்கள் என்று அமைத்திடலாம். இவற்றை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தச் செய்யலாம். வாட்டியெடுக்கும் தொடர் வெயிலால் பாதிக்கப்படாத பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைகூட, தொடர் மழையால் முடங்கிப் போய்விடுகிறது.
இதுபோன்ற நடவடிக்கையால் மாணவர்கள் மழைக்கால விபத்துகளில் சிக்குவது தவிர்க்கப்படும். மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பர். மழைக்கால நோய்த்தொற்றுகளில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கலாம். பல்கலைக்கழகத் தேர்வுகளையும் டிசம்பர், மே என மாற்றி அமைக்கலாம்.
கல்வி நிறுவனங்களுக்கு விடப்படும் இந்த மழைக்கால விடுமுறையில், இங்கெல்லாம் அமைக்கப்படும் மழைக்கால நிவாரண முகாம்கள் எவ்விதத் தடையுமின்றி இயங்கும் வாய்ப்பு ஏற்படும். அரசின்நிவாரணப் பணிகள் எளிமையாகும்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் சுமார் 28 மாவட்டங்கள் வடகிழக்குப் பருவமழையைப் பெற்றுள்ளன. 10 மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதற்காக மழைக்கால விடுமுறை தேவையில்லை என்று கூறுவது பொருத்தமானதல்ல.
மழையால் ரயில், பேருந்து சேவைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், இந்த மழைக்காலம் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், சிறார்களையும் பெரிதும் துன்புறுத்துகிறது என்றே சொல்லலாம். பெற்றோர்களும் சொல்லொணாத் துயரம் அடைகின்றனர். எனவே, கோடை விடுமுறை என்பதை மழைக்கால விடுமுறையாக மாற்றியமைக்க பரிசீலிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.