திருப்பரங்குன்றம் EPS
நடுப்பக்கக் கட்டுரைகள்

அரசு போய் விடும்! பிளவு போகுமா?

திருப்பரங்குன்றத்தில் முருகனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதியரசர் சாமிநாதன் அதற்கு இசைவாக ஒரு தீர்ப்புரைத்தார்.

பழ . கருப்பையா

திருப்பரங்குன்றத்தில் முருகனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதியரசர் சாமிநாதன் அதற்கு இசைவாக ஒரு தீர்ப்புரைத்தார். அவ்வாறு தீர்ப்புரைத்த நீதியரசரை நாடாளுமன்றப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மதவாதி என்று பலபடப் பழியுரைத்தனர்!

அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக ஒரு விண்ணப்பம் வைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்று திரண்டன!

ஒவ்வொரு தீர்ப்புக்கும் ஒவ்வொரு நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதென்றால், கடைசியில் நீதிமன்றங்களெல்லாம் கழுதைகள் மேயும் பாழ் நிலமாகிவிடாவா!

அது முருகனின் மலை; அவன் "பரங்குன்றத்து முருகன்' என்றே அழைக்கப்படுகிறான்! அவனைக் குறிஞ்சி நிலக் கடவுள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது! சங்க இலக்கியங்கள் அவனைப் பாடுகின்றன! கார்த்திகை தீபம் அவனுக்குரியது.

அன்றைக்கு எல்லா வீடுகளிலும் வீடு முழுவதும் விளக்கேற்றப்படுகிறது. வீடு முழுவதும் விளக்கேற்றிவிட்டு, மலையில் ஏற்றுவதில்லை என்றால் அந்தப் பண்டிகைக்கே பொருளில்லையே!

இது நூறாண்டு காலமாக வழக்கத்தில் இல்லை என்பது ஒரு வாதமாகாது!

முருகன் மலைக் கடவுள் என்பதும், கார்த்திகை தீபம் அவனுக்குரிய விழா என்பதும் ஈராயிரம் ஆண்டு ஒழுக்கலாறுகள்! விட்டுப் போன ஒன்றைப் புதுப்பிப்பது புதிய வழக்கமாக ஆகாது!

எல்லா மதப் பண்டிகைகளும் சடங்குகளின் வழியாகவும் கொண்டாட்டங்களின் வழியாகவுமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன!

ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்துச் சண்டையிட்டு வாழும் மனிதர்களுக்கு, இத்தகைய பண்டிகைகள் சமூகம் முழுவதையும் ஒருமைப்படுத்துவதோடு, அவை ஒரு மாறுதலாகவும் ஆறுதலாகவும் அமைகின்றன!

இறைவன் ஒருவனே என்று எல்லாச் சமயங்களும் உடன்பட்டாலும், அவரவர்களின் வாழ்க்கை முறை வேறுபாட்டால், வழிபடும் முறைகளும், அவற்றின் வாயில்களான பண்டிகைகளும் வேறுபடுகின்றன.

நம்மிடையே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மகான்களால் தோற்றுவிக்கப்பட்ட சமயங்கள் வரையறை உடையவை! ஒரு சிறு அளவு மாறுபாட்டைக் கூட உடன்படாதவை! ஏனெனில் எந்த மாறுபாடும் அந்தச் சமயங்களைச் சிதைத்துவிடும்!

ஆனால், மண்ணில் இயற்கையாகத் தோன்றிய சமயங்கள் ஏராளமான வேறுபாடுகள் உடையவை! வரையறைகள் இல்லாதவை. ஒவ்வொரு காலப் பழக்கத்தையும் இத்தகைய சமயங்கள் சேர்த்தே சுமக்கும்!

தமிழர்கள் மொழியாலும், இனத்தாலும், வாழ்ந்த எல்லைகளாலும் ஒன்றாகவே அறியப்பட்டிருந்தாலும், அவர்கள் பலவாரியாகப் பிரிந்து கிடந்தனர். தமிழனுக்கான ஒரு பேரரசு கட்டப்படுவதற்கு முன்னோடியாகத் தமிழர்களை இணைப்பதற்கான வரலாற்றுத் தேவையே, பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தது என்று ஆய்வாளர்கள் கூறுவர்!

சிவன் முதன்மைப்படுத்தப்பட்டான்; முருகன் உள்ளடக்கப்பட்டான். எனினும், தமிழர்களின் பழைய வழக்கங்களான குலதெய்வ வழிபாடுகளும் ஏற்கப்பட்டன! ஒவ்வொரு சிறு கூட்டமும் குலதெய்வ வழிபாட்டில் தனித்து அடையாளப்படுத்திக் கொண்டு, பெருந்தெய்வ வழிபாட்டில் ஒன்றிணைந்தது!

இந்தக் குணம் தமிழர்களின் குணம். இதை உட்கொண்டால்தான் சைவம் நிலைபெற முடியும்! எந்த மக்களிடம் அது நிலைபெற வேண்டுமோ, அந்த மக்களின் அடிப்படைக் குணத்தை அந்தச் சமயம் ஏற்றாக வேண்டும்!

நுணுகி வேறுபடல்; பெருகி ஒன்றுபடல்! இதன் வெளிப்பாடே தமிழர் சமய வெளிப்பாடு!

ஓர் உருவம், ஒரு நாமம் ஒன்றுமிலார்க்கு, ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டோமோ என்று மாணிக்கவாசகர் பரந்துபட்டுப் பாடுவது தமிழனின் அடிப்படைக் குணாம்சத்தை மனத்தினில் கொண்டுதான்! பன்மைத்தன்மை உடையவர்களின் போக்குகளுக்கு ஏற்ப, இசிவு கொடுக்கும் தன்மையோடு சைவம் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டது!

ஒருவனின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு இறைவனை வழிபட்டுக் கொள்ளலாம்! தெளிவு போதாதவனுக்கு நடராசரைப் போல், தெளிந்த மனித வடிவில் கடவுட் காட்சி ஏற்கப்பட்டது!

தெளிந்த வடிவம் தேவையில்லை; ஆயினும், ஓர் அடையாளம் வேண்டும் என்பானுக்கு இலிங்கம் பரிந்துரைக்கப்பட்டது!

எனக்கு எந்தக் குறியும் தேவையில்லை என்பானுக்கு, வெட்ட வெளி பரிந்துரைக்கப்பட்டது!

அருவ நிலை வெட்டவெளி; அருஉரு நிலை இலிங்கம்; உருநிலை கூத்தன்!

இந்தப் பன்மைத்தன்மை தமிழனின் இயல்பான கூறு என்பதால்தான், வேற்று மதத் தலங்களான நாகூரிலும், வேளாங்கண்ணியிலும், அந்தச் சமயங்களைச் சாராத இந்த மக்கள் வெகுவாகக் கூடுகின்றனர்! எதையும் வேறுபடுத்தி விலக்குவதில்லை!

என்னுடைய தாயார் தன்னுடைய பிள்ளைகளுக்கு உடல்நலம் இல்லை என்றால், நாகூர் ஆண்டவருக்குப் பணம் முடிந்து வைத்துத் தெரிந்தவர்களிடம் கொடுத்து, நாகூரில் சேர்க்கச் சொல்லுவார்கள்!

இத்தகைய இயல்புடைய மக்களால் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கோ, திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவுக்கோ எந்தக் காலத்திலும் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட முடியுமா? பாதிப்பு ஏற்படுத்துவது என்றால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தர்கா நீடித்திருக்க முடியுமா?

"அதுவும் உடனிருக்கட்டும்' என நினைத்த தமிழர்களின் பெருந்தன்மைக்கு மாறாக, அவர்களில் பெருவாரியான பேர் உயிராக நினைக்கும் பரங்குன்றத்தில், முருகனுக்குக் கார்த்திகை தீபம் ஏற்றினால் தர்காவுக்கு ஊறு நேரிட்டுவிடும் என்று தானாகத் தன் மூப்பாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, ஊரடங்கு உத்தரவை ஓர் அரசு பிறப்பிக்குமா?

ஏற்படாத கலவரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பேதைமையை வரலாறு கேலிக்குள்ளாக்கும்! அது வேறு!

வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இந்த ஊரடங்கு உத்தரவை, எந்த ஆளும் நடமாடாத, ஆகவே எந்தக் கலவரமும் ஏற்பட முடியாத ஒரு பகுதியில் பிறப்பிப்பது பேதைமையிலும் பேதைமையான செயல்பாடு அல்லவா!

ஆட்சி அதிகாரத்தை எந்த வகையிலும் மீண்டும் அடைந்துவிடுவது என்னும் கொள்கையுடையவர்கள் எந்த எல்லைக்கும் போவர்! அதிலே இந்த ஊரடங்கு உத்தரவு ஒன்று!

இந்த உத்தரவு நகைப்புக்கு உரியது என்பது வேறு! அதுவும் அந்த நீதியரசர் மீது பதவி விலக்குத் தீர்மானம் கொண்டு வருவது அதைவிட நகைப்புக்குரியது!

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை உடன்பட்டுத் தீர்ப்புச் சொன்ன ஐந்து நீதியரசர்கள் தீர்ப்புக்காக இந்த "இம்பீச்மெண்ட்' எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லையே... அப்படி உடன்பட்டுத் தீர்ப்புரைத்த நீதியரசர்களில் ஒருவர் இசுலாமியர். அவரை மதவிலக்கம் செய்தார்களா?

நாள்தோறும் பரங்குன்றத்து முருகன் கோயில் மணி ஓசைக்கிடையே செயல்படும் இசுலாமியர்களையும், பள்ளிவாசலில் பாங்கு சொல்வதைக் கேட்டு கண் விழிக்கும் பிற மக்களையும் உள்ளடக்கிக் காலங்காலமாக வாழும் ஓர் ஊரில், அவர்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்கும் அரசின் முயற்சி இழிவானதாகாதா?

"பரங்குன்றத்து முருகனுக்குக் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தவர் ஓர் இந்துத்துவவாதி அல்லவோ' என்பது முசுலிம்களின் வாதமாயின், அவர் முன்னின்ற காரணத்தினால் உண்மை இன்மையாகிவிடுமா?

உண்மையிலேயே ஒரு முசுலிம் மதுரை உயர்நீதிமன்றத்தில், "நாங்கள் ஒருமித்து வாழும் மக்கள்; தமிழர்களின் சமயம் ஒரு பழைய சமயம்; அங்கு கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவதில் எங்களுக்கு ஒரு தடையுமில்லை'' என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருப்பாரேயானால், தமிழ்நாடே சிலிர்த்திருக்கும்!

கார்த்திகை தீபத்தன்று மலை ஏறுகிறவர்கள் முருகனுக்கு அரோகரா பாடி விட்டுப் பின்னோரு நாள் உங்கள் தர்காவுக்கும் வந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கும்! அந்தத் தர்கா நாகூர் ஆண்டவர் சமாதிக்கு அடுத்த புகழினைப் பெற்றிருக்கும்!

இதற்கெல்லாம் வழிகாட்டக் கூடியவர்கள் இன்றைக்கு அங்கு இல்லை! காயிதே மில்லத் இருந்தால், அப்படி வழிகாட்டியிருக்கக் கூடும்!

பரங்குன்றத்திலுள்ளது தீபத் தூண் அன்று; அது "சர்வே கல்' என்றது அரசு! மறுநாள் அது "சமணக் கல்' என்றது! இன்னொரு நாள் அது வெறும் "மைல் கல்' என்றும் அரசு சொல்லும்!

சிறுபான்மை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, "உன்னுடைய தர்காவைக் காப்பாற்ற இந்த அரசுக்கு நீ வாக்களிப்பது கட்டாயம்' என்னும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, சிறுபான்மைச் சமூகத்தைப் பிளவுபடுத்தி அதை வேறாக்குவது அவர்களுக்கு நல்லதா?

அன்று அந்தத் தீபம் ஏற்றப்பட்டிருந்தால், மறுநாள் காலை அணைந்து விடும்! வழக்கம்போல பொழுது விடிவதற்கு முன்னர் பள்ளிவாசலிலிருந்து தொழுவதற்கு அழைக்கின்ற பாங்கு ஒலிக்கின்ற ஓசை கேட்டிருக்கும்! நீரில் எய்த அம்பு கிழித்ததனால் ஏற்படும் வடு, அப்போதே நீங்கிவிடுவது போல் நீங்கி இருக்கும்!

இல்லாத கலவரத்திற்கு ஊரடங்கு உத்தரவு போட்டு, ஒரு தீர்ப்புக்காக ஒரு நீதியரசரின் மீது "இம்பீச்மெண்ட்' கொண்டு வந்து, இந்தியப் பெருநாட்டின் கவனத்தைப் பரங்குன்றத்தில் குவியச் செய்தது யார்? நேரிய நீதியரசர்கள் அருகிக் காணப்படும் காலத்தில், நேர்மையைத் தண்டனைக்குள்ளாக்க முயல்வது கேவலமான செயலில்லையா?

என்றைக்கு ஏற்பட்டது முருகனின் திருப்பரங்குன்றம்? என்றைக்கு ஏற்பட்டது சிக்கந்தரின் தர்கா? அந்தத் தர்கா நிற்பதே கோயிலின் தூண்களின் மீதுதானே! அதை ஒளிப்படமாகப் பிடித்துக் காட்டும் நிலை யாரால் ஏற்பட்டது? முருகனின் மண்டபம்தானே தர்காவாக மாற்றப்பட்டிருக்கும் போலிருக்கிறது என்பது வரை இந்த விவாதத்தை வளர்க்க யார் காரணம்? இந்த அரசுதானே!

தமிழ்நாட்டில் இந்துத்துவ ஏற்படுத்த முடியாத பிளவை, இந்தப் பேதைமை

ஏற்படுத்திவிட்டதே!

அரசு போய் விடும்! பிளவு போகுமா?

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT