ஒருமுறை அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து குறிப்பிடும்போது, அவையில் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் ஹிரேன் முகர்ஜி, ஹிந்தியில் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் அடல் பிகாரி வாஜ்பாய் என்று சான்றிதழ் வழங்கினார் 1957-இல் மக்களவைத் தலைவராக இருந்த அனந்தசயனம் ஐயங்கார்.
வாஜ்பாய் 1957-இல் ஜனசங்கம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். பாரதிய ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சி, 1951-இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாகத் தொடங்கப்பட்டது. அதன் வளர்ச்சி நிதானமாக இருந்தது. 1967-இல் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாநிலங்களின் உள்ள சட்டப்பேரவைகளில் 300 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக ஜனசங்கம் இருந்தது.
அவசரநிலைப் பிரகடனத்தின்போது வாஜ்பாய் போன்ற ஜனசங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பெங்களூரில் ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்துக்குச் சென்றபோது நான், வாஜ்பாய் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நிலைக் குழுக் கூட்டம் முடிந்துவிட்டதால், நான் (கட்டுரையாளர்) பெங்களூரில் இருந்து வேலூருக்கு புறப்பட்டு வந்துவிட்டேன். ஆனால், அன்று நள்ளிரவு இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தார். தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளரான வாஜ்பாயை நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்தனர். மறுநாள் செய்தித்தாள் மூலம் அதைத் தெரிந்துகொண்டேன்.
பெங்களூரில் முப்பது நாள்கள் சிறைவைக்கப்பட்டு இருந்தபோது, வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். பிறகு, அவரைச் சந்தித்தபோது சிறை அனுபவம் எப்படி இருந்தது என்று நான் அவரைக் கேட்டேன். "அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன் ஜாலியாக' என்று சிரித்தபடியே என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார்.
1977-இல் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்ததால் ஜன சங்கம் தலைவர்களுக்கும் ஆட்சி அதிகார வாய்ப்புக் கிடைத்தது. அப்போது 542 தொகுதிகளில் ஜனதா கட்சி 295 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், 90 இடங்களில் ஜனசங்கத்தினர் வெற்றி பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றவர்களாக இருந்தனர். அதற்காக அவர் பிரதமராக ஆசைப்படவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
1996-இல் அதிக இடங்களை வென்ற கட்சி என்பதால் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். பாரதிய ஜனதா அந்தத் தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வேறு கட்சிகள் ஆதரவு தரவில்லை. எனவே, பதின்மூன்று நாள்கள்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். ஆனால், பாரதிய ஜனதா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பதையும் நிரூபித்தார்.
அவர் ஆட்சி மீதான வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில், "நான் ஏன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்பதற்கான காரணத்தை எளிய முறையில் விளக்கி உரையாற்றினார். அந்த உரையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. பிரதமரின் நம்பிக்கை வாக்கெடுப்பு இப்படி நேரடி ஒளிபரப்பானது அதுதான் முதல்முறை; அதுதான் தொடக்கமும்கூட.
பாரதிய ஜனதாவால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று காங்கிரஸ், தேசிய முன்னணி, இடதுசாரிகள் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால், அது உண்மையில்லை என்பதை தனது வாதத்தால் பிரதமர் வாஜ்பாய் தெளிவுபடுத்தினார்.
ராஜிநாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கடைசி வரி இதுதான். "நாங்கள் திரும்பவும் வருவோம். சக்கர வியூகத்துக்குள் நுழைவது எப்படி என்று தெரிந்த எங்களுக்கு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதும் தெரியும்' என்று சவாலாகச் சொன்னார். ஆட்சி கலைந்தது. அவர் சொன்னபடி 1998 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமரானார்.
இப்போது, நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திட்டவர் வாஜ்பாய். வெளிநாட்டு வங்கிகள் துணை நிறுவனங்களாகச் செயல்பட அனுமதித்தது வாஜ்பாய் அரசு. வங்கிகளில் அந்நியச் செலாவணி 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்தது.
மே, 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் ஆட்சியின் ஒரு மறக்க முடியாத சாதனை. இந்த அணுகுண்டு சோதனையால் மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய் அரசை கடுமையாகக் கண்டித்தன; விமர்சித்தன. அப்போது, அணு ஆயுதத்தை ஆத்திரப்பட்டு பயன்படுத்த மாட்டோம் என்று வாஜ்பாய் சொன்னதை இன்றுவரை இந்தியா கடைப்பிடிக்கிறது.
இதேபோல், வாஜ்பாய் ஆட்சியில் தொலைத்தொடர்பு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கல்வி எனது உரிமை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வ சிக்ஷ அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் வாஜ்பாய். எல்லோரும் படிக்க வேண்டும் என்ற இந்தத் திட்டப்படி கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
1999- 2000-இல் இரண்டு பெரும் சூறாவளி தாக்குதல், 2001-இல் மிகப் பெரிய பூகம்பம். ஆனால், ஜிடிபியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் வாஜ்பாய். அதேபோல 1998-இல் தங்க நாற்கர சாலை என்ற பெயரில் உலகத் தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய்.
தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத் துக்கு ஒப்புதல் வழங்கியது வாஜ்பாய் தான். நிலவுக்கு 2008-இல் இந்தியா விண்கலம் அனுப்பும் என்று உறுதிபடச் சொன்னவர் பிரதமர் வாஜ்பாய். அதன் பிறகுதான், இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை உருவாக்கியது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு தனித் துறை ஏற்படுத்தியது வாஜ்பாய் காலத்தில்தான். வாஜ்பாய் ஆட்சி குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியைக் கண்டதற்கு அவரது அனுபவ அறிவு ஒரு காரணம். முதலில் நாடாளுமன்ற உறுப்பினர், பிறகு எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், பிரதமர் என்று அவரது வளர்ச்சி படிப்படியாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவம் தெரிந்தவர் பிரதமர் வாஜ்பாய் என்று சொல்லலாம். அதனால்தான், அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சிக்க யோசித்தன.
அவர் என் சக நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. வாஜ்பாயை நான் அறிந்த வரையில் அவர் தீவிரமான மதச்சார்பாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் அவர் இருந்தாலும் தன்னை அவர் மிதவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். கட்சித் தலைவராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மாற்றுக் கட்சியினருடனான அவரது உறவு சுமுகமாகத்தான் இருந்தது.
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் பேச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயைத்தான் அனுப்பி வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். ஐ.நா. சபையில் முதல்முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமை பெற்றார் வாஜ்பாய்.
காங்கிரஸ் இல்லாத ஒரு கட்சி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மத்தியில் முதல்முதலாக ஆட்சி செய்தது என்ற சாதனையை நிகழ்த்தியதும் வாஜ்பாய் தான்.
10 முறை மக்களவை உறுப்பினர், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எனது நெருங்கிய நண்பர். அவசரநிலைப் பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று நான், வாஜ்பாய், எனது நண்பர் சுதந்திரா கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பிலுமோடி ஆகியோர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்தோம். அப்போது, நான் எந்தக் கட்சியிலும் இல்லை. வாஜ்பாய் மற்றும் பிலுமோடி வற்புறுத்தல் காரணமாக சில காலம் ஜனதா கட்சியில் இருந்தேன்.
நான் தில்லிக்கு எப்போது சென்றாலும் நேரம் கிடைக்கும்போது வாஜ்பாயைச் சந்திக்கத் தவறியதில்லை. அவர் உடல்நிலை சரியின்றி நினைவாற்றல் இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தியறிந்து அவரைச் சந்திக்கப் போனேன். "அவருக்கு நினைவாற்றல் இல்லை. உங்களை எப்படி அவர் அடையாளம் காண்பார்' என்ற சந்தேகத்துடன் அவரது வளர்ப்பு மகள் என்னை அழைத்துச் சென்றார்.
நான் வாஜ்பாய் அருகில் சென்று அமர்ந்ததும் உன்னை எனக்குத் தெரியாதா என்பதுபோல் என் கையைப் பிடித்துக்கொண்டு புன்னகை செய்ததார்; கண் களில் தாரைதாரையாக கண்ணீர் வரத்தொடங்கியது. உண்மையிலேயே உணர்வுபூர்வமான சந்திப்பு அது. அவரது வளர்ப்பு மகள் உள்பட அங்கு இருந்த எல்லோரும் வியப்பாகப் பார்த்தனர்.
பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் தலைவர், பிரதமர் என்று அவரது பன்முகத்தன்மை விரிந்தது. இவை எல்லாவற்றையும்விட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மிதவாதியாக இருந்தார் வாஜ்பாய். பல்வேறு மொழி, கலாசாரம் அரசியல் கட்சிகள் கொண்ட இந்தியாவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகத் தனது 93-ஆம் வயதில் மறைந்தாலும், அனைவரது நினைவிலும் வாழ்பவர் வாஜ்பாய்.
இன்று (டிச.25) வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.