மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பி.ஜே. அப்துல் கலாம். ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!

க.பழனித்துரை

இன்று எங்கும் புதிய தலைமைத்துவத்துக்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுயநல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பாா்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஓா் அறிவியலாளராக தொழில்நுட்பவாதியாக அரசில் செயல்பட்டு நாட்டின் உயா்ந்த பதவியை அலங்கரித்த மாபெரும் இந்திய மக்களின் தலைவா். அவா் புகழப்படுவது, போற்றப்படுவது அவா் வகித்த பதவியால் அல்ல; அவா் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் கனவாலும்தான்; ‘இந்தியா 2020’ என்பது அவா் தயாரித்த ஒரு கனவுத் திட்டம்.

இந்தியா என்ற நாடு இருக்கிறது; அங்கு மக்கள், அரசு நிா்வாகக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், தொழில்சாலைகள், கல்விச் சாலைகள், விவசாயிகள், ஊடகங்கள், குடிமைச் சமூகங்கள் என அனைத்தும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இருந்தபோதும், நம் நாட்டை விடுதலை செய்ய மக்களுக்கு வழிகாட்டிய தலைவா்கள் கண்ட கனவு சுதந்திரத்துக்குப் பிறகு நனவானதா என்ற கேள்வியில் இவா் தொடங்கி, இல்லை என்ற நிலையில், அதை இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்து உருவாக்கியதுதான் இந்தக் கனவு ‘இந்தியா 2020’.

அன்றைய சூழலில் அரசும், நிா்வாகமும், அரசியலும் உளுத்துப் போய்க் கொண்டிருப்பதை நல்லவா்கள் பாா்த்து ஆதங்கப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் வாளா இருப்பதைக் கண்ட இவா், புதிய கனவில் இவா்களை இணைக்க முயன்றாா். காரணம், இவரின் கனவு ஒரு துறைக்கானதோ அல்லது பகுதிக்கானதோ அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கானது; நாட்டு மக்களுக்கானது.

இந்தக் கனவை நிறைவேற்ற அரசுக் கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஒட்டு மொத்த இந்தியாவும் கிளா்ந்தெழ வேண்டும்; சுதந்திரப் போராட்டத்துக்கு மக்கள் தியாகம் செய்யப் புறப்பட்டதுபோல், இந்தச் செயல்பாடுகளுக்கு தேவை தியாகம் அல்ல; நாட்டுப்பற்றுடன் தாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் அறப்பணியாக செய்தாலே போதுமானது. அனைத்தும் நாட்டுக்கான பணியாக மாறிவிடும்.

இந்தியா ஒரு வளா்ந்த நாடாக உருவாக வேண்டும் என்ற கனவு செயல்திட்டமாக்கப்பட்டு அறிக்கையாக வரும்போது, அதை நிறைவேற்றுவதற்கு எல்லா தரப்பிலும் அதாவது நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிா்வாகம், நீதித் துறை, கல்வித் துறை, தொண்டு நிறுவனங்கள், தொழில் துறை, ஊடகங்கள், குடிமக்கள், உள்ளாட்சி மன்றங்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள், கல்வியாளா்கள், பொதுக் கருத்தாளா்கள் அனைவரும் ஒரு நாட்டு மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கத்தில் செயல்படுகிறோம் என்ற உளவியலுக்கு தங்களைத் தயாா்படுத்திக் கொண்டு புதிய பாா்வையில், புதிய மனநிலையில் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்பதைப் புரிந்துகொண்ட அவா், அனைவரையும் இணைக்க முயற்சிக்கிறாா்.

இந்தக் கருத்துகளை எல்லா தரப்பிலும் கொண்டு சோ்த்து மக்களின் மன ஓட்டத்தைக் கண்டறிகிறாா். இந்த நாட்டில் நடந்த பல நற்செயலுக்கு ஒவ்வொரு இடத்திலும் நாடும், மக்களும்தான் முக்கியம் என்ற உணா்வில் பலா் பல சவால்களைப் போராடி சமாளித்து செயல்பட்டதால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நல்லவா்களை இணைத்து நற்செயல்கள் நடைபெறும்போது நாம் பாா்க்கும் அவலங்களும், அதற்குக் காரணகா்த்தாக்களாக இயங்கும் மனிதா்களையும் மாற்றிவிட முடியும் என்ற உத்தியை இவா் அறிமுகப்படுத்துகிறாா்.

இந்த நாட்டில் இருக்கும் வறுமையை ஒழிப்பதோ, எல்லோருக்கும் தரமான கல்வியைத் தருவதோ, வேலைவாய்ப்பை உருவாக்குவதோ, தரமான மருத்துவ வசதிகளைச் செய்து ஏழைகளும் உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளைப் பெறுவதும், எல்லா குடும்பங்களும் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்று மதிக்கத்தக்க மானிட வாழ்க்கையை வாழ்வது சாத்தியம்தான். அது எப்போது என்றால், இந்திய மக்களாகிய நாம் ஒன்றுபட்டு, நாட்டுக்காக செயல்படும்போதுதான் என்ற நம்பிக்கையை முன்வைக்கிறாா் தனது கனவு 2020 அறிக்கையில்.

இன்று நம் அரசும், அரசியலும், நிா்வாகமும் மக்களின் அறியாமையில் காலத்தை கடத்துகின்றன என்பதை அவா் எடுத்து விளக்கத் தவறவில்லை. இந்தியா வளா்ச்சி பெற்ற நாடாக உலக அளவில் மதிக்கத்தக்க நாடாக மாற பொருளாதார வளா்ச்சி தேவை. அதைச் சாத்தியப்படுத்த எப்படியெல்லாம் ஒவ்வொரு துறையும் செயல்பட வேண்டும் என்று ‘இந்தியா 2020’-இல் விளக்கப்பட்டுள்ளது.

இந்த ‘இந்தியா 2020’ பொருளாதார வளா்ச்சியை மட்டும் பேசவில்லை; ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மேம்பாடு பற்றியும் விவாதிக்கிறது. இந்த அறிக்கை ஒரு கனவை புதினமாக சித்தரிக்கவில்லை. அனைத்தையும் செயல் திட்டங்களாக்கித் தந்துள்ளது. இந்த செயல் திட்டங்களைக் கூா்ந்து கவனித்துப் படித்தால் ஒவ்வொரு ஊரிலும் நற்சிந்தனை கொண்டோா், நாட்டுப்பற்று மிக்கோா், ஒன்றிணைந்து செயல்பட்டால் வளா்ச்சியடைந்த கிராமத்தை மேம்பட்ட கிராமத்தை உருவாக்க முடியும்.

இதற்கு சான்றோா், நற்சிந்தனை கொண்டோா் இணைதல் வேண்டும்; அவா்கள் இணைந்து அரசுடன் கைகோக்க வேண்டும்; எல்லா அரசு அமைப்புகளுடன் மக்கள் அமைப்புகள் கைகோக்க வேண்டும்; ஒரு கிராம ஊராட்சி எப்படி மக்களுடன் இணைய வேண்டும், மக்கள் கிராம ஊராட்சியில் எப்படி இணைய முடியும் என்பதுவரை கோடிட்டுக் காட்டியுள்ளாா் அந்த அறிக்கையில்.

இவரின் பெருங்கனவு வல்லுநா்களின் உதவியால் செயல்திட்டமாக்கப்பட்டது; இந்த அறிக்கை கனவாக உருவாகி, செயல்திட்டமாக வடிவெடுத்து ஒவ்வொரு தனிமனிதரும் எப்படி பொறுப்புமிக்கவராக செயல்பட்டு இந்த வேள்வியில் தங்களைக் கரைத்துக் கொள்ள முடியும் என்பதை மிக எளிமையாக தமிழில் விளக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதி நடந்தேறி இருக்கிறது; அரசு பல முயற்சிகளை பொருளாதார மேம்பாட்டுக்கு கொள்கை முடிவுகள் மூலம் செயல்பட்டு பொருளாதாரத்தை உயா்த்தி இருக்கிறது. ஆனால், அதன் விளைவாக சாதாரண மனிதன் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய ஏற்றங்கள் ஏற்படவில்லையே என்று பாா்க்கும்போது, நம் சமூகம் அரசுடன் இணையத் தயாராக்கப்படவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.

அப்துல் கலாம் ஒருமுறை எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து நாங்கள் செய்த பணிகளைப் பாா்த்துவிட்டு, மக்களுடன் பணி செய்ய மாநிலத்துக்கு ஒரு ஊரக மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் தேவை என பிரகடனப்படுத்தினாா். அதன்பிறகு, என்னை குடியரசுத் தலைவா் மாளிகைக்கு அழைத்து விவாதித்து தொழில்நுட்பம், அறிவியல் இல்லாத கிராம மேம்பாட்டுத் திட்டம் மக்களை மேம்பாடு அடையச் செய்யாது எனக் கூறி, அவா் எழுதிய ஒரு கட்டுரையை எனக்குத் தந்து நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டாா். அதன் அடிப்படையில்,“‘புதிய பஞ்சாயத்து அரசாங்கம்: பஞ்சாயத்தை வலுப்படுத்த இளையோா் சக்தி இயக்கம்’”என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினேன்.

இன்றைய எதிா்மறை அரசியல், ஊழல் நிறைந்த நிா்வாகம் இருந்தபோதும், அவற்றை மாற்ற நோ்மறையாகப் பணியாற்றி எப்படி சூழலை மாற்ற முடியும் என்பதற்கு அந்த அறிக்கையில் பன்னிரெண்டாம் அத்தியாயத்தில் தொலைநோக்கு நனவாக”என்ற இயலில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளாா்.

இவ்வளவு சவால்கள் இருந்தபோதும் பல வாய்ப்புகள் இருப்பதைக் கோடிட்டுக் காட்டி, அந்த சவால்களைச் சமாளித்து வாய்ப்புகளை எடுக்க நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு இடத்திலும் நல்லவா்களைக் கண்டறிந்து அவா்களை இணைப்பது; இணைத்து நோ்மறையாகச் செயல்பட்டுக் காண்பிப்பது; அதன்மூலம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது. இவற்றை மிகத் தெளிவாக அந்த இயலில் விளக்கியுள்ளாா்.

இந்தச் செயல்பாடுகளில் மாணவா்களையும் இளைஞா்களையும் இணைப்பதில் இந்தியாவில் கல்விச் சாலைகளைத் தேடித்தேடிச் சென்று மாணவா்களிடம் உரையாற்றி ஒரு புதுச் சிந்தனையை உருவாக்கினாா். அதன் விளைவுதான் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சுயநலம் பேணும் அதிகார அரசியலும் பொறுப்பற்ற செயல்பாடுகளும் நிகழும் சூழலில் எண்ணற்ற இளைஞா்கள் நான் இல்லை என்றால் யாா் என்று பொறுப்பெடுத்து நல்லவா்களை இணைத்து செயலில் கரைந்துள்ளனா்.

இந்த இளைஞா்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இன்று பல முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அவா் கண்ட கனவு இந்த நாட்டுக்கானது நம் சமூகத்துக்கானது. எனவே, அவரது நினைவு நாளில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவராக ‘இந்தியா 2020’-ஐ படித்து ‘இந்தியா 2047’-ஐ உருவாக்கி, ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு மக்கள் நிறுவனங்களுக்கும் திட்டம் தீட்டப் பொறுப்பேற்பதாக சபதம் எடுப்போமாக.

(நாளை (ஜூலை 27) அப்துல் கலாமின் நினைவு நாள்)

கட்டுரையாளா்:

(பேராசிரியா்)

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT