பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி மையம் கட்டாயமா?

குடிமைப்பணி தேர்வெழுதி வெற்றி பெற ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்வது கட்டாயம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.

இரா.மகாதேவன்

குடிமைப்பணி தேர்வெழுதி வெற்றி பெற ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்வது கட்டாயம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற பயிற்சி மையங்கள் கிடையாது. பெருநிறுவன பயிற்சி மையங்கள் இல்லாமலேயே அன்றைய இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வெற்றிபெற்று அதிகாரிகளாகப் பரிணமித்தனர்.

இன்றைய மாணவர்கள் அதுபோன்று வெற்றிபெற்ற முன்னோடிகளை தேடிச் சென்று உரையாட வேண்டும். அவர்களின் திட்டமிடலை தெரிந்துகொண்டு, அந்த வழிகளைப் பின்பற்ற வேண்டும். எதையும் எளிதாக அடைந்துவிட வேண்டும் என்ற சிந்தனையைப் புறந்தள்ளி, ஒரு சாதனையை நிகழ்த்த எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்வுக்கான முன்தயாரிப்பு குறித்து தற்போதுள்ள மாணவர்கள், இளைஞர்கள் சிலவற்றை அறிந்துகொள்வது அவசியம். அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் வழக்கமாக, நாளிதழ்கள், சிற்றிதழ்கள் வாசிக்கும் இடம்தவிர, போட்டித் தேர்வுக்கு இளைஞர்கள் தயாராவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு நாள்முழுவதும் அமர்ந்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகலாம்.

அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையிலான அதிக விலை கொண்ட புத்தகங்களும், மேலதிக தகவல் பெற இணைய வசதி, நகலெடுக்கும் வசதி போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்கள் தங்கள் வகுப்பறை பாடங்களைத் தாண்டி எதையும் வாசிப்பதில்லை. இன்று முக்கியப் பாடங்கள் அனைத்தும் பல உட்பிரிவுகளாக பிரிந்துவிட்ட நிலையில், ஏதேனும் ஓர் உட்பிரிவை மட்டும் எடுத்துப் படிக்கும் மாணவர்கள், அதில் மட்டும் தேர்ந்தவர்களாக மாறுகிறார்களே தவிர பொது அறிவில் பின்தங்கியே உள்ளனர்.

அவர்களுடைய ஓய்வுநேரத்தை பிற தகவல்களை அறிந்துகொள்வது, நிறைய வாசிப்பது போன்றவற்றுக்காகப் பயன்படுத்தாமல், சமூக ஊடகங்கள் ஓடிடி போன்ற செயலிசார் பொழுதுபோக்குத் தனங்களில் செலவிடுகின்றனர். அவை இவர்களின் உடல்நலன், பொருள், காலம் ஆகியவற்றைப் பறிக்கின்றன.

தற்போது மத்திய, மாநில அரசுப் பணி கள், வங்கிப் பணிகள் உள்ளிட்ட பலவற் றுக்கும் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியே அடிப்படை கல்வித் தகுதியாக உள்ளது. இருப்பினும், ஒருவர் பட்ட படிப்பை முடித்துவிட்டு, இந்தப் போட்டித் தேர்வுகளை எழுத அதன்பிறகுதான் தயாராக வேண்டுமா? பெரிய பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பெரும் பொருட்செலவில் மேலும் ஓரிராண்டு வகுப்பறை பயிற்சி பெற்றால் தான் இந்தத் தேர்வுகளை எழுதமுடியுமா? இவற்றைத் தவிர்க்க, நாம் ஏன் முன்கூட்டியே திட்டமிடக் கூடாது?

பத்தாம் வகுப்பு படிக்கும்வரை மாணவர்களிடம் புதியதை கற்கவேண்டும் என்ற ஆர்வம், படைப்பாற்றல் போன்றவை இருக்க நியாயமில்லை. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு செல்லும்போது, அது மேல்நிலைக் கல்வி: பதின்பருவத்தின் மையப் பகுதி: இந்த வயதில் மனதும், உடலும் சுறு சுறுப்பாக இயங்கும். எதையாவது புதிதாகச் செய்யவேண்டும் என்ற அலைமோதலும், துடிப்பும் உருவாகும். இந்தநேரத்தில் வகுப்பு பாடங்களை மட்டுமே படித்து, அதில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையோடு மாணவர்கள் தங்களைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது.

புதிய சிந்தனைகள் தோன்ற பள்ளி பாடங்களைத் தாண்டி புதியதாக நிறைய படிக்கவேண்டும். பொழுதுபோக்குதிரைப் படங்களை மட்டுமே பார்க்காமல், சர்வ தேச அளவில் விருதுகள் வென்ற திரைப் படங்கள், குறும்படங்களைப் பார்க்க வேண்டும். புதிய கலைகளைக் கற்கவேண்டும். ஆங்கிலத்தில் உரையாட, எழுத தீவிர பயிற்சி பெறவேண்டும். கூடுதலாக ஹிந்தி, ஃபிரஞ்ச் மொழிகளைக் கற்பதில் கவனம் செலுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரம் தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்க வேண்டும். அதேபோல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளைப் பார்ப்பது உலக அறிவையும், மொழி அறிவையும் கூட்டும். வெறுமனே செய்திகளைப் பார்ப்பது, படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் குறிப்பெடுப்பதும் அவசியம்.

இந்த குறிப்பெடுக்கம் பழக்கத்தை பிளஸ் 1 வகுப்பு முதலே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் குறிப்புகளை மாதம் ஒருமுறை நேரம் ஒதுக்கி திருப்பிப் பார்க்கவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் குறிப்பில் உள்ள செய்திகள், சம்பவங்கள் நம்மனதில் ஆழப் பதிந்துவிடும். தொடர்ந்து பட்டப் படிப்பை முடிக்கும் வரை இவ்வாறு செய்தால், முந்தைய 5 ஆண்டுகளின் செய்தித் தொகுப்பு நம் கணினி மூளையில் நிரந்தரமாகப் பதிவேற்றம் செய்யப்படும். தேவையானபோது அவற்றை மீளப்பெறுவது எளிது. இவற்றோடு இயன்றபோது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வதும் பலன் அளிக்கும்.

இதுபோன்று பிளஸ் 1 வகுப்பில் இருந்தே தன்னை தயார்செய்துகொள்ளும் ஒரு மாணவர், பட்டம் பெற்ற பிறகு நூலகங்கள், அரசு அளிக்கும் இலவச பயிற்சிகளில் சேர்ந்து சிறிது பயிற்சி பெற்றாலே போட்டித் தேர்வுகளில் எளிதாக வென்று விடமுடியும்.

பெருந்தொகை செலவுசெய்து புகழ்பெற்ற தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் சிறுக சிறுக கற்றதை, அங்கு சில மாதங்கள் அளிக்கும் பயிற்சியில் மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள முடியாது. திட்டமிடலும், நீண்டகால தயாரிப்பும்தான் நம்மை எளிதாக தேர்ச்சி அடையவைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

தெய்வீக அனிமேஷன்: ரூ.53 கோடி வசூலித்த மகாவதாரம் நரசிம்மா!

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

SCROLL FOR NEXT