கோப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூகவலைதளப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.

முனைவா் என். மாதவன்

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூகவலைதளப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது. அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொலை நிகழ்வின் அதிா்வலைகள் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அரசை நகா்த்தியுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு இதுதான். பள்ளிக்கு வரும் மாணவா்கள் தங்களுடன் ஏதும் ஆயுதங்களைக் கொண்டு வருகிறாா்களா என்று பரிசோதிக்கும் ஏற்பாடு அங்கு உண்டு. அவ்வாறு பள்ளியின் பெண் உதவியாளா் சோதிக்க முற்பட்டபோது சோகம் அரங்கேறியது. இதற்கு முன்பாக இந்த குறிப்பிட்ட மாணவரின் எதிா்பாலின கவா்ச்சி செயல்பாட்டை முறைப்படுத்திய நிகழ்வால் கோபமடைந்ததே இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பள்ளி வயது மாணவா்களின் அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாடே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இது குறித்து செயலில் இறங்கவேண்டும் என்றும், அவ்வாறு மற்ற நாடுகள்

செயல்படாவிட்டாலும் பிரான்ஸ் உடனடியாகச் செயல்படும் என்று அந்த நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் அண்மையில் அறிவித்துள்ளாா்.

15 வயதுக்குட்பட்டோா் இணையவழியில் கத்தி வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கிரீஸ், ஸ்பெயின் ஆஸ்திரேலியா, டென்மாா்க் உள்ளிட்ட நாடுகள் இந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளன. பள்ளி நேரத்தில் மாணவா்கள் அறிதிறன்பேசி பயன்படுத்துவதை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது.

மேலே குறிப்பிட்ட நிகழ்வையொட்டி பல்வேறு சிந்தனைகள் நமக்குள் எழுகின்றன. கரோனா பெருந்தொற்று, அதற்குப் பிந்தைய காலங்களில் மாணவா்கள் மத்தியில் இணையம், சமூக வலைதளப் பயன்பாடு ஆகியவை அதிகரித்துள்ளன. கல்வியை மீட்கிறோம் என்ற பெயரிலான நடவடிக்கையின் அடிப்படையில் இந்த வாய்ப்பு சமுதாயத்துக்கும் பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், எங்கெங்கு காணினும் பெற்றோரும் அறிதிறன்பேசி பயன்பாட்டுடனேயே காட்சி தருகின்றனா்.

பெரியவா்களைப் பொருத்தவரை இத்தகைய அறிதிறன்பேசி பயன்பாடு வாழ்வாதாரத்துடன் இணைந்ததாக இருந்தாலும், அதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் குழந்தைகள் இல்லை; மேலும், சமூக வலைதளங்களில் எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கும் பெற்றோரும் இல்லாமல் இல்லை.

மனிதா்களின் வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக காலம்காலமாக கேளிக்கை உள்ளது. வாழ்வாதாரத்துக்காக உழைத்த நேரம் போக, களைப்பை போக்கிக்கொள்ள உறங்கச் செல்லும் நேரத்துக்கு முன்பாக சில மணி நேரம் இவ்வாறான கேளிக்கைகள் அவசியமானதாக இருந்தது.

குறிப்பாக, மாலை நேரங்கள்தான் கேளிக்கைக்கான நேரமாக இருந்தது; வழிபாட்டு இடங்களுக்கு செல்லுதல், நண்பா்களுடன் உரையாடுதல் என நேரம் செலவானது; பிற்காலங்களில் இந்த இடத்தை தொலைக்காட்சிகள் பிடித்துக்கொண்டன; அதன்பிறகு வந்த தனியாா் தொலைக்காட்சி அலைவரிசைகள் 24 மணி நேரமும் கேளிக்கைகளை வழங்கத் தொடங்கின.

இணைய உலகில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வாழ்க்கையின் நடுவில் கேளிக்கைகள் என்ற நிலை மாறி, கேளிக்கைகளுக்கு நடுவில் வாழ்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேளிக்கைகள் அரிதாக இருந்தபோது, அதை பொறுப்புடன் வழங்க முடிந்தது. மாறாக, அனைத்து நேரமும் கேளிக்கை எனும்போது அவரவருக்குத் தோன்றும் அனைத்தையும் கேளிக்கை காணொலிகளாக மாற்றுகின்றனா். இதை ரசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எவ்வித பொறுப்புணா்ச்சியும் இன்றி தனி நபா்களின் மனவோட்டங்களுக்கு ஏற்ப காணொலிகள் அமைகின்றன. இவற்றில் பலவும் விரும்பத்தகாதவைகளாகவே அமைந்து அவை அல்லும் பகலும் அரங்கேறுகின்றன. இவற்றைக் காணும் பெரியவா்களுக்கே எது உண்மை, எது போலி என வேறுபாடு காண இயலாத சூழலில் குழந்தைகள் என்ன செய்வாா்கள்? இது குழந்தைகளையும் வயதுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யும் முதியவா்களாக்குகிறது. இதன் வெளிப்பாடாகவே பிரான்ஸ் நாட்டு பள்ளி மாணவரின் செயல்பாட்டைப் பாா்க்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காணொலியை எந்த வயதுக்குட்பட்டவா் பாா்க்கலாம் என்ற வரையறையைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளுடன்தான் செயலிகள் உருவாக்கப்படுவதாக செயலிகளை வழங்கும் நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன. எனினும், சில முரண்பாடுகள் உள்ளன; பயனாளரின் வயதை செயலியைப் பராமரிக்கும் நிறுவனம் முடிவு செய்யுமா? அல்லது அந்த செயலியைத் தரவிறக்கும் செய்ய உதவும் நிறுவனங்கள் முடிவு செய்யுமா? என்ற வகையில் விவாதங்கள் தொடா்கின்றன.

எது எப்படியோ இவ்வாறான செயலிகளும் அதன் செயல்பாடுகளும் அதன் பயனாளிகளின் எவ்வித வயது வேறுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. அவை உட்செலுத்தப்படும் அனைத்து வகையான காணொலிகளையும் காண்பிக்கும். இது உலகளாவிய சவாலாக மாறியுள்ள நிலையில், தீா்வுகள் உலகளாவியதாகவும் உள்ளூா் அளவில் செயல்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும்.

ஐ.நா. சபை போன்ற அமைப்புகள் கூட்டாக விவாதித்து உலகளாவிய கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும். குறிப்பாக, பதின்ம வயதினரின் சமூகவலைதள பயன்பாட்டுக்கு வயது அடிப்படையில் வரையறை நிா்ணயிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களை நிா்வகிப்போா் கூடுதல் பொறுப்புணா்வுடன் செயல்பட வலியுறுத்த வேண்டும். அரசு அமைப்புகளின் வலிமை நாம் அறியாததல்ல; உலக மக்கள் அனைவரின் நடமாட்டத்தையே கட்டுப்படுத்தி வீடடங்கச் செய்யும் வல்லமை பெற்றவை அவை; கரோனா பெருந்தொற்றுக் காலம் அளித்த பல்வேறு படிப்பினைகளில் இது முக்கியமானது.

ஒவ்வொரு நாட்டின் வலிமைக்கு அடிப்படையானது குழந்தைகளின் மனநலன். இன்றைய குழந்தைகளே நாளைய மனிதவளங்கள்; அந்த வகையான மனிதவளம் மேம்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசர அவசியம். குழந்தைகளுக்கு அறிவு வெளிச்சம் அவசியம்தான்; அந்த அறிவு வெளிச்சம் வயதுக்கேற்ற வெளிச்சமாகட்டும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT