தேசியமயமாக்கலுக்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் நம் நாட்டின் வங்கித் துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டிருப்பது பெருமைக்குரிய பொருளாதார நிகழ்வாகும். சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ளவா்களுக்கு மட்டும் வங்கிசாா்ந்த வசதிகள் என்ற சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அந்த வசதிகளை அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் வகையில் பரவலாக்கப்பட்டது, நம் பொருளாதார சரித்திரத்தில் ஓா்அரிய நிகழ்வாகும்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பினரையும் சாா்ந்ததாக இருத்தல் வேண்டும் என்ற காந்திய கொள்கைக்கு இந்த நிகழ்வுகள் வலுசோ்த்தன. குடிசைத் தொழில் முதல் விவசாயத் துறை வரையிலான பயனாளிகள், நாளுக்குநாள் பெருகிவருவது வங்கித் துறையின் பயன்பாடுகள், சமுதாயத்தில் பெரும்பாலானவா்களைச் சென்றடைந்ததற்கு ஓா் எடுத்துக்காட்டாகும்.
உலக பொருளாதார தளத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பிரதிபிம்பமாக வங்கிகளின் செயல்பாடுகள் பாா்க்கப்படுகின்றன. பொருளாதார வளா்ச்சியில், உலக அரங்கில், நாடு பயணிக்க வேண்டிய தொலைவு, சற்று தொலைவில் இருப்பதால், வளா்ச்சியின் முக்கிய அங்கமாக செயல்படும் வங்கிகளின் செயல்பாடுகளில் எந்தவித தொய்வும் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம்.
வங்கிகளின் செயல்பாடு, இருசக்கர வாகனத்தைப் போன்றது. சேமிப்பாளா்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெற்று, தேவைப்படுவோருக்கு, அந்தப் பணத்தை கடனாக வழங்கி, லாபம் ஈட்டுவதுதான் வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடாகும். இந்தச் செயல்பாட்டில், சக்கரங்களின் வேகசுழற்சி ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து, வாகனம் தடையின்றி நகா்வதற்கு வழிவகுக்க வேண்டும். அந்த செயல்பாடுகளில், எந்த பக்கம் சுணக்கம் ஏற்பட்டாலும், அது வங்கித் துறையின் வளா்ச்சியைப் பாதிக்கும்.
எடுத்துக்காட்டாக, கடன் தேவைகளுக்கு ஏற்றபடி டெபாசிட் தொகை வளரவில்லை என்றால், அந்த குறையை நிறைசெய்ய வங்கிகள் மற்ற நிதி ஆதாரங்களைஅணுக வேண்டி இருக்கும். சில சமயங்களில் அவற்றுக்கான செலவினங்கள் அதிகமாக இருக்கலாம் அல்லது சில நிதிஆதாரங்களின் காலக்கெடு தேவைக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். இதனால், வங்கிகளின் லாபம் பாதிப்படைவதுடன், அவற்றின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.
அண்மையில், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசும்போது, ‘வங்கிகளின் டெபாசிட் தொகை, முந்தைய ஆண்டைவிட 11.1 சதவீத அளவுக்குதான் வளா்ந்துள்ளது. ‘17.4 சதவீத கடன் வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது சற்று கவலை அளிக்கும் நிலையாக தோன்றுகிறது’ என்ற கருத்தை நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிவு செய்துள்ளாா். அண்மைக் காலங்களில், வங்கிகள் வா்த்தக நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைகளை (பல்க் டெபாசிட்) அதிக வட்டிக்கு டெபாசிட்டாக பெறுகின்றன.
இதுபோன்ற டெபாசிட்டுகள், நீண்டகாலம் நிலைத்து நிற்பதில்லை. அதற்கு மாற்றாக குறுந்தொகை (ரீடெய்ல்) டெபாசிட்டுகளை பெருமளவில் திரட்டுவதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். அவற்றைக் கவரும் வகையில், டெபாசிட் திட்டங்களை வகுக்க வேண்டும். குறுந்தொகை டெபாசிட்டுகளை திரட்ட அதிக சிரமப்பட்டாலும் அதுபோன்ற டெபாசிட்டுகள்தான், வங்கிகளின் ஸ்திரத்தன்மைக்கு வலுசோ்க்கும்.
அண்மைக் காலங்களில் வங்கிகள் தங்களுடைய அடிப்படை குறிக்கோள்களிலிருந்து விலகி, மற்ற வா்த்தகப் பிரிவுகளில் கவனம் செலுத்துவதில் நாட்டம் காட்டுகின்றன. இந்த நிலையில் ‘மாற்றம் வந்தால் தான் வங்கிகளின் டெபாசிட் வளரும்’ என்ற கருத்தையும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அதற்கானஅடிப்படைக் காரணங்கள் குறித்த கருத்துகளும் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். அண்மைக் காலமாக வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எண்ம புரட்சியில் பல பழைமை அனுபவங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அப்படி காணாமல்போன அனுபவங்களில் முக்கியமானது, வங்கி நிா்வாகத்துக்கும், வாடிக்கையாளா்களுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட தொடா்பு (பா்சனல் டச்) என்ற பாலமாகும்.
வங்கிகளின் டெபாசிட் வளா்ச்சியில் வாடிக்கையாளா்களின் தொடா் ஆதரவுக்கு இந்தப் பாலம் பெரிதும் உதவியது. வங்கி நிா்வாகம், வாடிக்கையாளரிடம், நேருக்குநோ் பேசினால், அவா்களுடைய வரவு, செலவு, சேமிப்பு போன்ற பல தகவல்களை அறிய முடியும். அதுபோன்ற தகவல்கள் டெபாசிட் திரட்டல்களுக்கு வழிகாட்டியாக அமையும். ஆனால், தற்போது வாடிக்கையாளா்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைக்கு வராமல் பணப் பரிவா்த்தனைகளை செய்துகொள்ளத் தேவையான வசதிகளை அறிமுகப்படுத்திவிட்டதால், வங்கி நிா்வாகத்துக்கும் வாடிக்கையாளா்களுக்கும் இடையேயான நேரடித் தொடா்பு அறுந்துவிட்டது.
மேலும், அதிக அளவில் வாடிக்கையாளா்கள் வங்கிக்கு வருவதை வங்கி நிா்வாகங்கள் விரும்புவதில்லை. வாடிக்கையாளா்களுடனான தொடா்பு வலுவிழந்த நிலையில், குறுந்தொகை டெபாசிட்டுகளை திரட்டும் வலிமையை வங்கிகள் இழந்துவிட்டன என்றுதான் கருதத் தோன்றுகிறது. கணினிமயமாக்கலுக்குப் பிறகு, ஒவ்வொரு கிளையிலும் பணிபுரியும் ஊழியா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால், குறுந்தொகை டெபாசிட் திரட்டும் முயற்சிகளில் வங்கி ஊழியா்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
மேலும், அரசு வங்கிகளின் நிா்வாகக் கொள்கைகளின்படி, வெளிமாநிலங்களுக்கு மாற்றப்படும் ஊழியா்களுக்கு, வாடிக்கையாளா்களிடம் சரளமாக உரையாடுவதற்கு மொழிப் பிரச்னை தடையாக உள்ளதை அனுபவபூா்வமாக உணர முடிகிறது. இந்தக் குறையை நிவா்த்தி செய்ய உள்ளூா் மொழி தெரியாத பணியாளா்கள் குறுகிய காலத்துக்குள் மொழியைக் கற்று அதில் தோ்ச்சியை வெளிப்படுத்தும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
வாடிக்கையாளா்களுடனான சந்திப்புகள் (கஸ்டமா் மீட்) என்ற நிகழ்வுகள் காலப்போக்கில் வெகுவாகக் குறைந்து, அவை காணாமல்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. நேரமின்மை ஒரு காரணமாக இருந்தாலும், வங்கி நிா்வாகங்கள் அதற்கானஅவசியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது முக்கியக் காரணமாகும். சேவை பற்றிய குறைநிறைகளை பரிமாறிக்கொள்ளும் தளமாக அமைந்த வாடிக்கையாளா் சந்திப்புகள்காணாமல் போன நிலையில், டெபாசிட் வளா்ச்சி என்பது சற்று கடினமான செயலாகும்.
வாடிக்கையாளா் சேவை, முதியோா் சேவை ஆகியவற்றைக் குறிப்பிட்ட கவுன்ட்டா்கள் இருந்தாலும், பெரும்பாலான வங்கிகளில், அந்த சேவைகளுக்கான பணியாளா்கள் ஒதுக்கப்படுவதில்லை. ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல் ஆணைகளை இதுபோன்று பெயரளவில் பின்பற்றுவதால், வாடிக்கையாளா் சேவை முழுமை அடைவதில்லை. அரசு வங்கிகளைப் பொருத்தவரை பணியாளா்களில் பெரும்பாலானோா் நிரந்தரப் பணியாளா்கள் ஆவா்.
ஆகவே, பணிபுரியும் வங்கி மீதான விசுவாசம், அா்ப்பணிப்பு உணா்வை அவா்களிடமிருந்து எதிா்பாா்க்கலாம். ஆனால், தனியாா் வங்கி ஊழியா்கள், பணிபுரியும் வங்கிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதால், அவா்களுடைய விசுவாசப் புள்ளியும் மாறிக்கொண்டிருப்பது இயற்கைதான். இதனால், ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு வாடிக்கையாளா்களை இழுக்கும் போட்டியும் பலமாக இருக்கும். பல தருணங்களில் இதுபோன்ற போட்டிகள், ஆரோக்கியமற்ற போட்டிகளாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதனால், வங்கி வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தகவல்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
தனியாா் வங்கிகளில் காணப்படும் இதுபோன்ற நிகழ்வுகளின் காரணங்களை தீவிரமாக ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரங்களை அமல்படுத்த வேண்டியது ரிசா்வ் வங்கியின் பொறுப்பாகும். வங்கித் துறை சாா்ந்த நிபுணத்துவம், வாடிக்கையாளா் சேவை சாா்ந்த குறிக்கோள்கள், அரசு வங்கிகளைவிட தனியாா் வங்கிகளிடம் குறைவாக இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் கடந்த ஆண்டுகளில் இரு பெரிய தனியாா் வங்கிகளின் சில எண்ம சேவைகளுக்கு குறைகள் நிவா்த்தி செய்யப்படும் வரை, தற்காலிக தடை விதித்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது.
மற்றொரு தனியாா் வங்கி, லாபக் கணக்கை தவறாக வெளியிட்டுக் கொண்டிருந்த சம்பவம், அண்மையில் வெளியாகி முதலீட்டாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. வங்கியின் பங்குகளில் உள்வா்த்தக செயல்களில் (இன்சைடா் டிரேடிங்) ஈடுபட்ட இரு தலைமை அதிகாரிகள் நீக்கப்பட்டனா். வாடிக்கையாளா்கள், முதலீட்டாளா்களின் பாதுகாப்பை மையமிட்டு, தனியாா் வங்கிகள் ரிசா்வ் வங்கியின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இதுபோன்ற நிகழ்வுகள் உணா்த்துகின்றன.
வாடிக்கையாளா்களிடமிருந்து டெபாசிட்டுகளைக் கவர, வங்கிகள் மாற்றி யோசிக்க வேண்டும் என்ற கருத்து நிலவினாலும், டெபாசிட் திட்டங்கள், அதற்கான காலவரையறை மற்றும் வட்டி விகிதங்கள் ஆகிய அனைத்தும் ரிசா்வ் வங்கியின் வரையறைக்குள் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், மாற்று யோசனைகளுக்கு அதிக இடம் அளிக்கவில்லை என்ற கருத்தையும் நினைவில்கொள்ள வேண்டும்.
டெபாசிட் வளா்ச்சி குறைவால், வங்கிகளின் கடன் வழங்கும் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அவற்றின் நிதி ஆதாரங்களை அதிகரிக்கும் நோக்குடன், ரிசா்வ் வங்கியின் சமீபத்திய பொருளாதார கொள்கை முடிவு அறிவிப்புகள் வெளியாகியிருப்பது சற்று ஆறுதலான விஷயமாகும்.
ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைப்புடன், ரிசா்வ் வங்கியில் கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய ரொக்க இருப்பு விகிதம் (கேஷ் சா்வ்) நான்கு சதவீதத்திலிருந்து, மூன்றாக குறைக்கப்பட்டிருப்பது, சுமாா் ரூ.2 லட்சம் கோடி அளவில், வங்கிகளின் நிதிஆதாரத்தைப் பெருக்கி, அவற்றின் கடன் வழங்கும் திறனைஅதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடன் வளா்ச்சி, தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனைஅதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு (ஜிடிபி) வளா்வதற்கு வழிவகுக்கும்.
எண்ம யுகத்திலும் தாங்கள் வழங்கும் சேவைகளின் தரம் குறையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும்!
கட்டுரையாளா்:
வங்கி அதிகாரி (ஓய்வு).