இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் அண்மையில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி தரப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை அவர் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்.
இனி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு "ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையையும், கொள்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை விளக்கிய அவர், அந்தக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துரைத்தார்.
இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும்; பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து முளைத்தாலும், அந்த இடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல் கூறாகும்.
எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது; அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையின் கீழ் உருவாகும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும், தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும் என்பது இரண்டாவது கூறாகும்.
அரசின் நிதியுதவியைப் பெறும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களையும் வெவ்வேறாக இந்தியா வித்தியாசப்படுத்தி பார்க்காது என்பது மூன்றாவது கூறாகும். அதாவது, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ., அரசு ஆகியவை ஒரே கண்ணோட்டத்தில்தான் இனிமேல் பார்க்கப்படும் என்பதுதான் பிரதமர் அளித்திருக்கும் செய்தி (எச்சரிக்கை).
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, "பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒருசேர நடைபெற முடியாது', "ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து பாயமுடியாது' என்றார். இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு அவர் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன என்பதை தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிடவில்லை. இதேபோல சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக வெளியான தகவல் குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.
ஆனால், அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் கவனத்தில் வைத்தே அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக்கொள்ளாது; பயங்கரவாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர வேறு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று பிரதமர் கூறினார் என்பது தெளிவுபடத் தெரிகிறது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பொதுவான ஓரிடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ கடந்த மே 10-ஆம் தேதி தெரிவித்தார். அதை பாகிஸ்தானும் உடனடியாக வரவேற்றது.
இதைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இந்தியா கொண்டுள்ள கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை பிரதமர் மோடியின் பேச்சு தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
எனவே, சண்டை நிறுத்தத்துக்குப் பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு சிறிதளவே வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் சுமுகமாக இல்லாமல் இறுக்கமாகவே இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம், யாத்திரைகள், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகள் மற்றும் கலந்துரையாடல்கள், பரஸ்பரம் நுழைவு இசைவுகள் அளித்தல் ஆகியவை குறைவாகவே இருக்கும்.
மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளதால், அந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனிக்கும். பின்னர் சிந்து நதிநீரைப் பெறுவதற்கு சர்வதேச அளவில் சட்டம் மற்றும் ராஜீய வழியில் போர்புரிய அந்நாடு தயாராகும்.
நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களில் இருந்து தவறுதலாக அணுக்கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் தளத்துக்கு அருகில் உள்ள இடத்தை இந்திய ஏவுகணை தவறுதலாகத் தாக்கியது போன்ற தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான் அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக்கொள்ளாது என்று பிரதமர் மோடி கூறியதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
அணு ஆயுத நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்தால், அது பெரும் அணுக்கதிர் வீச்சு அபாயத்துக்கு வித்திடக்கூடும் என்ற அச்சமூட்டும் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. இதுவே இரு நாடுகளுக்கு இடையிலான மோதலில் தலையிடமாட்டோம் என்று கூறிய அமெரிக்கா, ஒரே நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மத்தியஸ்தத்தில் ஈடுபட முன்வந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.
எனினும், இதுதொடர்பான தகவல்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அணுக்கதிர் வீச்சு நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்மையில் இருப்பதால், அந்த அச்சத்தை பிரதமர் மோடியின் கருத்துகள் மேலும் அதிகரிக்கும்.
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் "ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையாக இருக்கும் என்கிற பிரகடனம், பாகிஸ்தானுக்கு வெளியிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் தெளிவான எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. இந்தியாவில் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அண்மையில் அளிக்கப்பட்டதைப் போன்ற பதிலடிகளுக்கு அந்தக் குழுக்களும், பாகிஸ்தான் அரசும் தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.
தனது கொள்கையை இந்தியா தெளிவாக எடுத்துரைத்ததன் மூலம் பயங்கரவாதக் குழுக்களும், பாகிஸ்தானில் உள்ள அந்தக் குழுக்களின் ஆதரவாளர்களும் தீங்கிழைப்பதைத் தடுக்கவே இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் உறுதி மற்றும் திறன்களை "ஆபரேஷன் சிந்தூர்' எடுத்துரைத்தது. பாகிஸ்தானுக்குள் வெகுதொலைவு வரை சென்று தாக்குதல் நடத்த முடியும், அந்நாட்டில் ராணுவத் தளங்கள், பயங்கரவாதிகள், அவர்களின் முகாம்களை துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் திறனையும் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
எனினும், அடையாளம் தெரியாத சில பயங்கரவாதிகளின் செயல்கள், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தும் என்பதே "ஆபரேஷன் சிந்தூர்' ஏற்படுத்தியுள்ள புதிய அணுகுமுறையின் அர்த்தம். இதுமட்டுமின்றி தெற்காசியாவில் உள்ள ஸ்திரமற்ற நிலை, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் துப்பாக்கிச்சூடும் குண்டுவீச்சும் நடைபெறும் என்ற அச்சத்துடன் இருநாட்டு மக்கள், குறிப்பாக எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் வாழவேண்டிய நிலை நீடிக்கும் என்பதும் இதன் அர்த்தமாகும்.
அணுகுண்டு வீச்சால் ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்ட பேரழிவை உலகம் இன்றளவும் மறக்கவில்லை. உலகில் உள்ள எவரும் அணு ஆயுதப் போரை அல்ல, அணுக்கதிர் வீச்சு விபத்தைக்கூட விரும்பமாட்டார்கள். அண்மைக்கால வரலாற்றில் அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் வெளிப்படையாகவும், நேரடியாகவும் மோதலில் ஈடுபடுகின்றன. அணு ஆயுதத் தாக்குதல் ஏற்படுத்தும் அழிவு மிகப் பெரியதாக இருக்கும். எனவே, இரு நாடுகளும் தமது அணுகுமுறையை மாற்றி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைதியான முறையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் அளிக்கும். அது நியாயமும்கூட.
"ஆபரேஷன் சிந்தூர்' இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை உலகம் வரவேற்க வாய்ப்பில்லை. அதை பாகிஸ்தான் நிராகரிக்கும். எனினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதில் உள்ள ஆபத்துகள், தெற்காசிய பிராந்தியத்தில் அணு ஆயுத மோதல் ஏற்பட்டால் உருவாகும் அபாயங்கள் குறித்து சர்வதேச சமூகம் கவலைப்படாமல் இருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை நிறுத்திக்கொள்வதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.
கட்டுரையாளர்:
முன்னாள் இந்திய தூதர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.