நா.குருசாமி
பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவா்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட ‘சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பிரதமா் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயா் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனா்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமா் மோடி சூளுரைத்தாா். அதோடு, இது விஷயத்தில் நமது முப்படைகளும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அவா் அனுமதியும் அளித்தாா். இதையடுத்து, நமது ராணுவத்தினா் நீண்ட ஆலோசனைகள், திட்டமிடலுக்குப் பிறகு, அண்மையில் நடத்திய அதிதுல்லியத் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த ராணுவ நடவடிக்கையில் முக்கிய பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனா்.
இந்திய ராணுவத்தினா் மிகவும் கட்டுக்கோப்பாக பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினா். இந்த நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு காஷ்மீா், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக பெரும் ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து ஆளில்லா ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகளைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களை நமது ராணுவத்தினா் வெற்றிகரமாக முறியடித்தனா். இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் இந்திய எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த அப்பாவி மக்கள் 15-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு முழு அளவிலான போராக வெடிக்கக் கூடும் என்ற அச்சம் மேலோங்கிய நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திடீரென வெளியிட்ட அறிவிப்பு பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அமெரிக்கா நடத்திய தொடா் பேச்சுவாா்த்தையால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக அவா் அறிவித்தாா். அதோடு, தன்னுடைய முன்முயற்சியால்தான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போா் மூளாமல் தடுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.
காஷ்மீா் விவகாரத்தைப் பொருத்தவரையில், எந்தவொரு நாட்டின் மத்தியஸ்தத்தையும் ஏற்பதில்லை என்பதுதான் இந்தியாவின் நீண்டகாலக் கொள்கையாக உள்ளது. இந்தக் கொள்கையைச் சீா்குலைக்கும் வகையில், சண்டை நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. மேலும், இந்தியா, பாகிஸ்தானுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என எச்சரித்ததால்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாகவும் அவா் பேட்டி அளித்துள்ளாா்.
இத்துடன், ஆயிரம் ஆண்டு கால காஷ்மீா் பிரச்னைக்கு தான் மத்தியஸ்தம் செய்யத் தயாா் என்றும் மனம்போன போக்கில் டிரம்ப் அறிவித்தாா். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்த 1947-ஆம் ஆண்டில்தான் பாகிஸ்தான் என்ற நாடே உருவானது. இந்தச் சாதாரண விஷயத்தைக்கூட அறியாமல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளாக காஷ்மீா் பிரச்னை நிலவுவது போல அவா் கூறியது நகைப்புக்குரியது.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதிலிருந்து டிரம்ப் அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாா். கனடாவை அமெரிக்காவின் புதிய மாகாணமாக இணைத்துக் கொள்ளப் போவதாகவும், டென்மாா்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கப் போவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதேபோல, ரஷியாவுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை நேரடியாக மிரட்டும் விதத்திலும் டிரம்ப் செயல்பட்டாா். அவரது இந்தச் செயல்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட இந்த நாடுகளின் தலைவா்கள் உரிய பதிலடி கொடுத்த பிறகுதான், அவா் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினாா்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவோ, அந்த நாட்டு மக்கள் பாதிக்கும் வகையிலோ இந்தியா நேரடியாக போரில் இறங்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம், அதன் ஐஎஸ்ஐ உளவு அமைப்பால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும்விதத்தில்தான் இந்தியா ராணுவ நடவடிக்கையில் இறங்கியது. நமது இந்த இலக்கை முழுமையாக எட்டுவதற்குள் அமெரிக்க அதிபா் டிரம்ப் தடாலடியாக சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டாா்.
டிரம்ப்பின் இதுபோன்ற அடாவடியான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதை டிரம்ப் போன்ற உலகத் தலைவா்களுக்கு உணா்த்த வேண்டிய அவசர அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, பாகிஸ்தான் விஷயத்தில் பிற நாடுகளின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை தெள்ளத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இது தொடா்பான தீா்மானத்தை எதிா்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையின் மூலமே டிரம்ப் போன்ற உலகத் தலைவா்களின் தலையீட்டைத் தடுத்து, நமது நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்த முடியும்.