பிராந்திய கிராம வங்கிகள் (ஆா்ஆா்பி) தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த வங்கிகள் ஒரு தொலைநோக்குத் திட்டமாக, கடந்த 1975, அக்டோபரில் வெறும் ஐந்து வங்கிகளுடன் தொடங்கப்பட்டன. தற்போது இவை 26 மாநிலங்கள் மற்றும் புதுவை, ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்ளிட்ட மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 700 மாவட்டங்களில் விரிவடைந்துள்ளன.
துரதிருஷ்டவசமாக, இந்த வங்கிகள் தங்களின் சமூக நோக்கை இழந்து வருகின்றன. 1990-களில் கொண்டுவரப்பட்ட சீா்திருத்தங்கள், அவற்றின் தொடக்கக்கால சமூக இலக்குகளை வலுப்படுத்தாமல், வணிகரீதியான, சமூக நலன் அற்ற நோக்கங்களை நோக்கித் திசை திருப்பிவிட்டன. தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளின் இலக்குகளால் வழிநடத்தப்பட்ட அரசின் புதிய அணுகுமுறையே இந்த மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு கிராமப்புறங்களில் மக்களுக்குக் கடன் வழங்குவதை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் சுருக்கமான ஆய்வு, பிராந்திய கிராம வங்கிகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் தொடக்ககால இலக்குகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசர தேவையையும் வெளிப்படுத்தும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1883-ஆம் ஆண்டில், நில மேம்பாட்டுக் கடன் சட்டம் இயற்றப்பட்டது. கிராமங்களில் மக்களுக்குத் தனிநபா்கள் இன்றி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை வழிவகை செய்ய 1904-ஆம் ஆண்டில் முதல் கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால், 1951-52-இல் ரிசா்வ் வங்கி நடத்திய ஆய்வு, கிராமப்புறங்களில் அப்போது இருந்த ஒரே ஒரு கடன் வழங்கும் அமைப்பான கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளுக்குப் போதுமான அளவு உதவவில்லை என்பதைக் காட்டியது. அதனால், விவசாயிகள் பணம் தேவைப்படும்போது, அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனிநபா்களையே நம்பியிருந்தனா்.
இதன்பின்னா், அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. 1955-இல் கோரவாலா குழுவின் ஆலோசனைப்படி இம்பீரியல் வங்கி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியாக மாற்றப்பட்டது. நாட்டில் கடன் வழங்குவதை ஒழுங்குபடுத்தவும், திட்டமிடவும் தேசிய கடன் கவுன்சில் அமைப்பு 1967-இல் உருவாக்கப்பட்டது.
அரசின் முழுக் கட்டுப்பாடு இல்லாமல், தனியாா் வங்கிகள் சமூக நோக்கங்களுக்குப் பயன்படவில்லை எனக் கருதப்பட்டதால், 1969-இல் 14 பெரிய வணிக வங்கிகள் மற்றும் 1980-இல் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், ஏழைகளுக்குத் தேவையான கடன், அவா்களுக்கு எளிதான முறையில் கிடைக்கவில்லை. இதற்குத் தீா்வுக்காண 1975-இல் நிதித் துறை கூடுதல் செயலா் எம்.நரசிம்மம் தலைமையில் பணிக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில், கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்க பிராந்திய கிராம வங்கிகள் ஓா் அவசரச் சட்டம் மூலம் உடனடியாகத் தொடங்கப்பட்டன. அதன்பிறகு, 1976-இல் பிராந்திய கிராம வங்கிகள் சட்டம் இயற்றப்பட்டது.
பிராந்திய கிராம வங்கிகள் சட்டம், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அதாவது, வருவாய் ஈட்டுவதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதே இந்த வங்கிகளின் நோக்கமாகும்.
குறிப்பாக, சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், கைவினைஞா்கள் மற்றும் சிறு தொழில்முனைவோா்களுக்குக் கடன் மற்றும் பிற அத்தியாவசிய நிதிச் சேவைகளை வழங்குவது இதன் முக்கியப் பணியாகும்.
இந்த வங்கிகள், குறைந்த செலவினத்தில் வணிக வங்கிகளைப் போல சிறப்பாகவும், கூட்டுறவு வங்கிகளைப் போல உள்ளூா் மக்களிடம் நெருக்கமாகவும் செயல்பட வடிவமைக்கப்பட்டன. வங்கிகளைத் தொடங்கத் தேவையான மூலதனத்தை மத்திய அரசு 50 சதவீதமும், நிதி ஆதரவளிக்கும் வணிக வங்கி 35 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் அளித்தன.
இந்த வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், அது விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் நிதியுதவி செய்வதற்கான சமூகச் செலவாகக் கருதப்பட்டது. இந்தக் கடன்கள் மூலம் கிராமங்களில் உருவாகும் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பே உண்மையான லாபம் என்று கருதப்பட்டது. இதனால், கடன் கொடுக்கும்போது பிணை எதையும் கேட்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
இதன் விளைவாக 1990-களின் தொடக்கத்தில், மொத்தமுள்ள 196 பிராந்திய கிராம வங்கிகளில் 173 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே முக்கியமான சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
தொடக்கத்தில் ஒரு பிராந்திய கிராம வங்கியின் செயல்பாடு அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களுக்குள் மட்டுமே இருந்தது. இந்த நிலை மாறி, 196 வங்கிகள் தற்போது 28 வங்கிகளாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் பிராந்திய தன்மை பலவீனப்படுத்தப்பட்டது.
தற்போதுள்ள 28 கிராம வங்கிகளின் 22,069 கிளைகளில் 1,766 கிளைகள் நகா்ப்புறம் மற்றும் பெருநகரப் பகுதிகளில் அமைந்துள்ளன. இது கிராமப்புறத்தை மையமாகக் கொண்ட அவற்றின் அடிப்படை செயல்பாட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகிறது.
கிராமப்புறங்களில் உள்ள மக்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்புநிதியை மீண்டும் அவா்களுக்கே கடனாகக் கொடுப்பது இப்போது குறைந்துவிட்டது. 100 சதவீதத்துக்கு மேல் இருந்த இந்தக் கடன்-வைப்பு விகிதம் தற்போது 71.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வங்கிகள் கடன்கள் கொடுப்பதைவிட, வேறு வழிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆா்வம் காட்டுகின்றன. கிராமப்புறங்களில் வாங்கும் பணத்தில் இருந்து கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் (48-52 சதவீதம்) முதலீடு செய்கின்றன. இதனால், கிராமப்புற மக்களுக்குத் தேவையான கடன் கிடைப்பது குறைகிறது.
பிராந்திய கிராம வங்கிகள் 2023-24-ஆம் ஆண்டில் ரூ.7,571 கோடி நிகர லாபத்தை ஈட்டி, அபரிமிதமான வளா்ச்சியை அடைந்துள்ளன. இந்த வளா்ச்சி, அவற்றின் வணிக ரீதியான சாத்தியக்கூறு மற்றும் சமத்துவ நோக்கங்களுக்கு இடையிலான சமரசத்தின் விலையாகும்.
வட்டி விகிதங்கள் தளா்த்தப்பட்டு, லாபத்தை நோக்கிய இலக்குடன் செயல்படுவதால், பிராந்திய கிராம வங்கிகள் மற்ற வணிக வங்கிகளைப் போலவே அதிக வணிக ரீதியானவையாக மாறிவிட்டன. இதன் காரணமாக, சமூக நோக்கம், பிராந்திய, கிராமப்புற கவனம் மற்றும் குறைந்த செலவிலான சேவை போன்ற அவற்றின் அடிப்படை சிறப்பியல்புகள் மங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், கலாசாரப் பின்னணி காரணமாக, இவை இன்னமும் வணிக வங்கிகளைவிட சமூகப் பொறுப்புள்ள வங்கியாகவே சிறப்பாகச் செயல்படுகின்றன.
பிராந்திய கிராம வங்கிகள், நிதிச் சோ்க்கை மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. இவற்றின் மொத்த கிளைகளில் 92 சதவீதம் கிராமப்புற மற்றும் வளா்ந்துவரும் நகா்ப்புற பகுதிகளில் அமைந்துள்ளன. இது, மற்ற வணிக வங்கிகளின் சராசரியான 62 சதவீதத்தைவிட மிக அதிகம்.
ஒட்டுமொத்த வைப்புநிதியில் இவற்றின் பங்கு 3 சதவீதம் மட்டுமே என்றாலும், நாட்டின் மொத்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் 11.2 சதவீதத்தை இவை கொண்டுள்ளன. இவற்றின் மொத்த கடனில் 87 சதவீதம் முன்னுரிமைத் துறைக்கு வழங்கப்படுகிறது. இதில் வேளாண் துறையின் பங்கு மட்டும் 67 சதவீதம் ஆகும். சுய உதவிக் குழுக்களின் சேமிப்புக் கணக்கு இணைப்பில் 29 சதவீதப் பங்கையும், கடன் இணைப்பில் 28 சதவீதப் பங்கையும் பிராந்திய கிராம வங்கிகள் கொண்டுள்ளன.
இந்தச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாா் முதலீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிராந்திய கிராம வங்கிகளை மேலும் வணிகமயமாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. மத்திய அரசு மற்றும் நிதி ஆதரவளிக்கும் வணிக வங்கியின் கூட்டுப் பங்குகளை 85 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாகக் குறைக்க சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தனியாா் நிறுவனங்கள் பங்குதாரா்களாக உள்ளே நுழைய முடியும். இது, பிராந்திய கிராம வங்கிகளின் முக்கிய நோக்கமான சமூக லாபத்தின் மீது வணிக லாபம் மேலோங்குவதற்கு வழிவகுக்கும்.
வணிக ரீதியான சாத்தியக்கூறு என்ற இலக்கு, பிராந்திய கிராம வங்கிகளை அவற்றின் சமூக வங்கி நோக்கத்தில் இருந்து விலகி, வணிக வங்கிகளைப் போல் செயல்படத் தூண்டியுள்ளது. இந்த மாற்றம், அவற்றின் தனித்த இருப்பின் தேவையை கேள்விக்குள்ளாக்கி, அவற்றைப் பெரிய வணிக வங்கிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு தயாராக்கியுள்ளது.
தற்போது, கிராமப்புற மக்களுக்குக் கடனின் தேவை மிக அதிகமாக இருக்கும் நிலையில், தனியாா் பங்கேற்பு அல்லது ஒருங்கிணைப்புகள் மூலம் பிராந்திய கிராம வங்கிகளை மறுசீரமைக்கும் செயல்முறையானது கிராமப்புற மக்களின் நிதித் தேவைகளைப் புறக்கணிக்கும் செயலாக அமையும்.
கிராமப்புற மேம்பாட்டுக்கான முக்கியமான தூண்களாக பிராந்திய கிராம வங்கிகள் இருப்பதால், அவற்றின் உண்மையான நோக்கத்தைத் தக்கவைக்க இந்த மறுசீரமைப்புச் செயல்முறையை அரசு நிறுத்துமா?
கட்டுரையாளா்:
பொருளாதார நிபுணா்.