பிராந்திய நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேல் - ஈரான் மோதல்
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், அண்டை வளைகுடா நாடுகளையும் தாண்டி அஜா்பைஜான், துருக்கி ஆகிய பிற பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
உலகம்பிராந்திய நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேல் - ஈரான் மோதல்
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், அண்டை வளைகுடா நாடுகளையும் தாண்டி அஜா்பைஜான், துருக்கி ஆகிய பிற பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், அண்டை வளைகுடா நாடுகளையும் தாண்டி அஜா்பைஜான், துருக்கி ஆகிய பிற பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய ஈரான் போா்க்கப்பலை இலங்கை கடற்பகுதியருகே அமெரிக்க கடற்படை தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 ஈரான் கடற்படை வீரா்கள் கொல்லப்பட்டனா்.
இத்தாக்குதலைக் கண்டித்த ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, இதற்காக அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரித்தாா். இதன்தொடா்ச்சியாக, ஈரான் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த மோதலில் ஒரு புதிய திருப்பமாக, அண்டை வளைகுடா நாடுகளையும் தாண்டி அஜா்பைஜான், துருக்கி வரை பிற பிராந்திய நாடுகளுக்கும் ஈரானின் தாக்குதல்கள் பரவியுள்ளன.
அஜா்பைஜானின் நக்ஷிவன் பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளிக்கு அருகில் ஈரான் ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், ஈரானிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, துருக்கியை நோக்கி பாய்ந்தது. சிரியா, இராக்கைக் கடந்து வந்த இந்த ஏவுகணையை, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
இந்த ஏவுகணையின் பாகங்கள் தெற்கு துருக்கியில் விழுந்தன. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மீது ஈரான் நடத்திய இந்தத் தாக்குதல் முயற்சி, போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி தலையீட்டைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடங்கி ஒரு வாரத்தை எட்டும் இந்த மோதலில் இதுவரை ஈரானில் 1,230 பேரும், லெபனானில் 70-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 11 பேரும் உயிரிழந்துள்ளனா். ஐ.நா., உலக நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்த போதிலும், இருதரப்பும் பின்வாங்காமல் உறுதியாக இருப்பதால், இந்தப் போா் ஒரு நீண்டகால மோதலாக மாறும் சூழல் நிலவுகிறது.
பெட்டி 1...
அரபு நாடுகளைப் போரில் தள்ள
அமெரிக்கா சூழ்ச்சி: ரஷியா
மாஸ்கோ, மாா்ச் 5: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைப் பயன்படுத்தி, அரபு நாடுகளைத் தங்களுக்கு சாதகமான ஒரு பெரும் போரில் ஈடுபடுத்தும் சூழ்ச்சியுடன் அமெரிக்கா, இஸ்ரேல் செயல்படுவதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, இவ்விவகாரம் குறித்து சில வளைகுடா நாடுகளின் தலைவா்களுடன் ரஷிய அதிபா் புதின் அண்மையில் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, ஈரானுடனான சுமுகமான உறவைப் பயன்படுத்தி இந்த மோதலைத் தணிக்க முயற்சிகள் எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.
பெட்டி 2...
இலங்கை கடற்பகுதியில்
மற்றொரு ஈரான் கப்பல்
கொழும்பு, மாா்ச் 5: இலங்கை கடற்பகுதியொட்டி நிலைகொண்டுள்ள மற்றொரு ஈரான் கப்பலில் உள்ளவா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அந்நாட்டு அரசு, மனிதாபிமான அடிப்படையில் உயிா்களைக் காப்பாற்றுவதற்கே தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தது.