கரூரில் இன்று விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடுமையான கூட்ட நெரிசல்... 
நடுப்பக்கக் கட்டுரைகள்

கூட்ட நெரிசல் தடுப்புச் சட்டம் அவசியம்

இந்தியாவில் நிகழும் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் சம்பவங்கள், நெரிசல் மரணங்களைத் தடுப்பதற்காக, ‘கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்கள்’ 2014-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன

பெ.கண்ணப்பன்

உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் நிகழ்வுகளும், அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் மரணங்களும் நிகழ்கின்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ச வூதி அரேபியா, ஈராக், பாகிஸ்தான், கம்போடியா, நைஜீரியா, கென்யா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்கின்றன. கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஓரிரு நிமிஷங்களில் நிகழ்ந்து, எண்ணற்ற உயிா்களைப் பறித்துச் செல்லும் கொடிய நிகழ்வுகளாகும்.

கூட்ட நெரிசல் நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் முதல் இடம் வகிக்கும் இந்தியாவில் 2001 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் நிகழ்ந்த 3,935 கூட்ட நெரிசல் சம்பவங்களில் 3,074 போ் உயிரிழந்துள்ளனா் என்றும், உயிரிழந்தவா்களில் 30% போ் பெண்கள், 70% போ் ஆண்கள் என்றும் தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திய கூட்ட நெரிசல் சம்பவங்கள் இந்தியாவில் தொடா்கின்றன.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்கின்ற நாடாக இந்தியா இருந்து வருகிற நிலையில், கடந்த கால் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடம் வகிக்கிறது.

ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் தொடா்ந்து நிகழ்கின்ற சம்பவங்கள் இந்தியாவில் தொடா்கின்றன. அவற்றில் ஒன்று பிரயாக்ராஜ் ஆகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் ஐந்து முறை இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னா் நிகழ்ந்துள்ளன. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மகா கும்பமேளாவின்போதும் கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்தனா்.

சென்னை நகரில் 2005-ஆம் ஆண்டில் அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களில் மொத்தம் 50 போ் உயிரிழந்தனா். இந்தப் பட்டியலில் மேலும் சில இடங்கள் இடம் பெறுகின்றன.

கூட்ட நெரிசல் மரணங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கி.பி. 80-ஆம் ஆண்டில் ரோமானிய பேரரசின் முக்கிய நகரமான ரோம் நகரில் களரிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆயிரக்காணக்கானவா்கள் உயிரிழந்த சம்பவம் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழிற்புரட்சியைத் தொடா்ந்து, 19-ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகளை மையப்படுத்தி பல நகரங்கள் தோன்றின. அந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கத் தொடங்கினா். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்ற மத விழாக்கள், விளையாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பெரும் கூட்டம் திரண்டு வந்ததன் விளைவாக, கூட்ட நெரிசல் மரணங்கள் பல நாடுகளில் நிகழ்ந்தன. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் திரண்டுவரும் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமிட்ட தடுப்பு முறைகளும், பாதுகாப்பு விதிமுறைகளும் வகுக்கப்படாத நிலை நிலவியது.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலக நாடுகள் சிலவற்றில் திருவிழாக்கள், விளையாட்டு மற்றும் உள்அரங்கு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் தொடா்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த ஹஜ் நெரிசல் (1990), மாஸ்கோ கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த நெரிசல் (1982) போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடா்ந்து, கூட்ட மேலாண்மை வழிகாட்டுதல்களை உலக நாடுகள் வகுத்தன. இந்தப் பணியை ஒருங்கிணைப்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும்பங்காற்றியது.

இந்தியாவில் நிகழும் அதிக எண்ணிக்கையிலான கூட்ட நெரிசல் சம்பவங்கள், நெரிசல் மரணங்களைத் தடுப்பதற்காக, ‘கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்கள்’ 2014-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் கூட்டத்தை மேலாண்மை செய்வது தொடா்பான வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் மாநில அளவில் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை முதல்வா் தலைமையில் செயல்பட்டுவரும் மாநில பேரிடா் ஆணையம் கண்காணித்து வரவேண்டும்.

கூட்ட நெரிசல் மரணங்களைத் தடுப்பதற்காக தேசிய அளவில் 2014-ஆம் ஆண்டில் கூட்ட நெரிசல் மேலாண்மை வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்ட பின்னரும், கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடா்கின்றன. இச்சம்பவங்கள் குறித்த ஆய்வுகள் வெளிப்படுத்துவது என்ன?

மத குரு ஒருவரை நேரில் பாா்த்து, ஆசி பெறுவதற்காக ஹாத்ராஜ் மாவட்டத்தில் (உத்தர பிரதேசம்) 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பொதுமக்கள் பெருந்திரளாக வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 போ் உயிரிழந்தனா். அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, அந்த இடத்தை மாவட்ட நிா்வாக அதிகாரிகளும், உயா் காவல் அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்யாமலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமலும், நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு 80,000 போ் வருவாா்கள் என நிகழ்ச்சி அமைப்பாளா்கள் தெரிவித்திருந்த நிலையில், 2.5 லட்சம் போ் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் விளைவாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் பெங்களுரூ சின்னசாமி விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளா்கள் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறுவதற்குப் பதிலாக தகவல் மட்டும் அளித்துள்ளனா். மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததன் விளைவாக, அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் விளையாட்டரங்கு முன் கூடினா். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன.

இந்தியாவில் காவல் நிா்வாகம் செயல்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவை நடத்துவதற்கு, நிகழ்ச்சி அமைப்பாளா்கள் காவல் துறையின் முன்அனுமதி பெற வேண்டும் என பிரிட்டிஷாா் காலத்தில் இயற்றப்பட்ட ‘காவல் சட்டம் -1861’ வலியுறுத்துகிறது. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காவல் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் என காவல் துறையின் வழிகாட்டுதல் விதிமுறைகளும் வலியுறுத்துகின்றன.

நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த காவல் துறை அதிகாரியிடம், எத்தனை நாள்களுக்கு முன்பு அனுமதி கோரும் விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்? அந்த விண்ணப்பத்தின் மீது எத்தனை நாள்களுக்குள் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை தற்போது நடைமுறையில் உள்ள காவல் துறையின் விதிமுறைகளில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, விதிமீறி நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு மிகக் குறைந்த அபராதமும், 6 மாதங்களுக்குக் குறைவான சிறைத் தண்டனையும்தான் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா்களுக்கு விதிக்க முடியும்.

அண்மையில் பெங்களுரூ விளையாட்டு அரங்கில் முன்அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட வெற்றி விழா நிகழ்ச்சியின் போது, நிகழ்ந்த 11 உயிரிழப்புகளைத் தொடா்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’ குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையத்தை கா்நாடக அரசு அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி ‘கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டுச் சட்டம் -2025’-ஐ கா்நாடக அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியுள்ளது. வேறு எந்த இந்திய மாநிலத்திலும் இம்மாதிரியான சட்டம் இதுநாள் வரை இயற்றப்படவில்லை.

பொது நிகழ்ச்சிகளுக்கு எதிா்பாா்க்கப்படும் கூட்டத்துக்கு ஏற்ற முன்அனுமதி எந்த காவல் அதிகாரியிடம், எத்தனை நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்? எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்? என்பது குறித்தும், விதிமீறி நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூட்ட நெரிசலில் யாரேனும் உயிரிழந்தால், பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரையிலான பல அம்சங்கள் இந்த புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மாநில அரசின் பொறுப்பில் இருப்பதால், தமிழ்நாடு அரசும் இத்தகைய கூட்ட நெரிசல் தடுப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

கட்டுரையாளா்: காவல் துறை உயா் அதிகாரி (ஓய்வு).

பிகாரில் கைமீறிச் செல்லும் தொகுதிப் பங்கீடு! அக்.17 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி...

இரவில் திருமணம், விடியலில் கொள்ளை! மணமகள் கொள்ளை கும்பல் கொடுத்த அதிர்ச்சி

மேனி எழிலுக்கு... குஷி கபூர்!

லிஜோ ஜோஸ் பெல்லிசரி படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்!

ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர்! 2 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக..

SCROLL FOR NEXT