ம.பி. கோயில் திறப்பு விழாவில் கூட்ட நெரிசல்: பெண் பலி, 6 பேர் காயம்!
கோயில் திறப்பு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றி..
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாப்ரா நகரில் உள்ள கோயில் திறப்பு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 70 வயது பெண் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக குவாலியர் ஆட்சியர் ருச்சிகா சௌகான் கூறுகையில்,
தாப்ரா நகரில் நவக்கிரகம் கோயில் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது கலச யாத்திரைக்காக தாப்ரா திடல் அருகே பெண்களுக்கு கலசம் விநியோகம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கலச விநியோகத்தின்போது பெண்கள் ஒருவரையொருவர் முந்தியடித்துக்கொண்டு கலசத்தை வாங்க முற்பட்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் 70 வயது பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், சிறுமி, பெண்கள் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் குவாலியரிலும், நான்கு பேர் தாப்ராவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கலச விநியோகத்தின்போது பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதே இந்தக் கூட்டநெரிசலுக்குக் காரணம்.
அதன்பின்னர் நிலைமை சீர்செய்யப்பட்டது. கலச யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்று கலசங்கள் நவக்கிரக கோயிலை அடைந்ததாக அவர் கூறினார்.