கோப்புப்படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம்!

நாம் ஒருவருடைய இல்லத்துக்குப் போனால், அந்த வீட்டின் அழகை, வடிவமைப்பை, செழுமையைப் பார்த்து வியந்து, ஒரு விநாடியாவது நம் வீட்டை நினைத்துப் பார்ப்போம்.

வெ. இன்சுவை

நாம் ஒருவருடைய இல்லத்துக்குப் போனால், அந்த வீட்டின் அழகை, வடிவமைப்பை, செழுமையைப் பார்த்து வியந்து, ஒரு விநாடியாவது நம் வீட்டை நினைத்துப் பார்ப்போம். வீடு மட்டுமல்ல, பிறரின் திறமைகள், நற்பண்புகள், பதவி, பணம் என எல்லாவற்றையும் ஒப்பிடுவது மனித இயல்பு. பொறாமை ஏற்படாது, சிறு ஏக்கம் இருக்கும். தற்போது, லண்டனில் இருக்கும் நான் ஏகப்பட்ட பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கிறேன். நம்மை ஒருகாலத்தில் ஆட்சி செய்தவர்களின் நாடு என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் நாட்டை விட்டுப்போகும் முன்பு, அவர்களுடையஒழுங்குமுறைகள், சட்டத்தை மதிக்கும் மாண்பு, பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது போன்ற அவசியங்களை நம் உதிரத்தில் ஊறவைத்துவிட்டுப் போயிருந்தால் இங்கும் எல்லாம் சரியாக இருக்கும். காரணத்தைச் சொல்கிறேன்.

"ப்ளேசஸ் லீஷர் ஈஸ்ட்லே' என்பது ஹாம்ஷயர் மாகாணத்தில் உள்ள ஈஸ்ட்லேவில் என்ற ஒரு சிறிய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய ஓய்வு, உடற்பயிற்சிக் கூடம். இதை உடல் நலம் பேணுபவர்களின் சொர்க்கம் என்று கூறலாம். உடற்பயிற்சி, பொழுதுபோக்கு தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள். எட்டுவழி பிரதான நீச்சல் குளம், ஒரு நகரும் தளம் கொண்ட கற்றல் நீச்சல் குளம், பெரிய உடற்பயிற்சிக் கூடம், பல்வேறு உடற்பயிற்சி வகுப்புகளுக்கான ஸ்டூடியோக்கள், ஸ்பின் ஸ்டுடியோ ஆகியவையும் உள்ளன.

மேலும் 15 களங்கள் கொண்ட விளையாட்டு அரங்கம், நான்கு விளக்குகள் பொருத்தப்பட்ட டென்னிஸ் களங்கள், நான்கு ஸ்குவாஷ் களங்கள், நீராவிக் குளியல் அறை, குழந்தைகள் விளையாடுமிடம், சிற்றுண்டி உணவகம், பெரிய கார் நிறுத்தம் என ஏகப்பட்ட வசதிகளுடன் உள்ளது. இந்த இலவச கார் நிறுத்தும் இடத்தில் 463 வாகனங்களை நிறுத்தலாம். 16 மாற்றுத்திறனாளி வாகனங்களை நிறுத்தலாம். வளாகத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட மரங்கள் உள்ளன.

இரவு ஏழு மணிக்கு அந்த வளாகம் நிரம்பி இருந்தது. மக்கள் உடற்பயிற்சி செய்து கொண்டு, நடந்துகொண்டு, விளையாடிக்கொண்டு, நீச்சல் பயின்று கொண்டு இருந்தார்கள். இரண்டு நீச்சல் குளங்களிலும் மக்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றில் நீச்சல் பயிற்சியும், மற்றொன்றில் நீச்சல் வகுப்பும் நடந்துகொண்டு இருந்தது. கற்றுக்கொண்டிருந்த அனைவருமே 50 வயது முதல் 70 வயது உள்ள பெரியவர்கள். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் ஒரே நீச்சல்குளம். ஒரு கண்காணிப்பாளர் நின்றிருந்தார். அவரின் முழுக் கவனமும் நீச்சல் கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் இருந்தது.

ஒவ்வொருவரும் தனக்காக வாழ வேண்டும் என்பதை இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே மாலை ஆறு மணிக்கு அந்த உடற்பயிற்சிக் கூடம் நிரம்பி வழிகிறது, நம் ஊரில்... பாதிபேர் அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருப்பார்கள். பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் கூட்டம் பிதுங்கும்.

இல்லத்தரசிகள் அவசர அவசரமாக வீட்டை அடைந்து, சமையல் அறைக்குள் புகுந்து கொள்வார்கள். பிள்ளைகளை தனி வகுப்புகளுக்கு அழைத்துக்கொண்டு போவார்கள்; பெரிய மால்களில் சுற்றுவார்கள்; ஓய்வு கிட்டினால் கைப்பேசியில் காலம் கழிப்பார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெரிய உடற்பயிற்சிக் கூடம் இருந்தாலும்கூட, அனைவரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள். மருந்து, மாத்திரைக்குப் பணம் செலவு செய்ய மனம் வருமே தவிர, விளையாட்டுக்குச் செலவு செய்ய யோசிப்பார்கள். விளையாட்டு வகுப்பை கணித ஆசிரியர்கள் வாங்கிக் கொள்வது நாம் செய்யும் முதல் தவறு. வீட்டிலும் பெற்றோர்களில் பலரும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பதில்லை. மதிப்பெண் முக்கியம். தனி வகுப்புகள், இசை, நடனம் என்று பல்வேறு வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

விளையாட்டைப் புறக்கணிப்பார்கள். விளையாடினால் நேரம் வீணாகிறது என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். உடல் ஆரோக்கியமும், வலிமையும் இல்லா வாழ்க்கை "பதர்' போன்றது. அடுக்கடுக்கான பட்டங்களும், கல்வித் தகுதியும், ஆகச் சிறந்த உயர் பதவியும் இருந்தாலும் உடல்நலம் கெட்டுப் போனால், எல்லாமே வீண். நாம் உயிர்வாழத் தகுதியான ஒரே இடம் நம் உடல்தானே. மேலும் உடல் நலனும், மனநலனும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடல் நலன் என்பது நாம் சிறப்பாக வாழவும், நம் இலக்குகளை அடையவும் வகை செய்கிறது.

பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. அத்தகைய பள்ளிகள் அருகில் உள்ள விளையாட்டுத் திடல் அல்லது கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். பிள்ளைகள் நன்கு விளையாட வேண்டும். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி எடுக்க வேண்டும். விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்பவர்கள் ஏராளம்.

பிரிட்டனில் மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். நம் ஊரைப்போல் இங்கே சந்துக்கு ஒரு மருத்துவர், தெருவுக்கு ஒரு சிறு மருத்துவமனை, ஊருக்கு பத்து தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை என்றெல்லாம் இல்லை.

புற்றீசல்போல் மருந்துக் கடைகளும் காணப்படவில்லை. காரணம், அவர்கள் உடல் நலத்துடன் இருக்கிறார்கள். தங்கள் உடல் மீது அக்கறை காட்டுகிறார்கள்.

நடுங்கும் குளிரில் ஜாகிங் போகிறார்கள். மூச்சிரைக்க ஓடுகிறார்கள். அனைவரும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், கால்பந்து, ரஃக்பி, டென்னிஸ் என ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆரோக்கியமான, சமச்சீரான உணவுப் பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஐந்து முறை பழங்கள், காய்கறிகள் என்ற அரசு விழிப்புணர்வு பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஈஸ்ட்லே உடற்பயிற்சிக் கூடத்தின் தூய்மை வியக்க வைக்கிறது. தினமும் நிறைய மக்கள் வருகிறார்கள். ஆனாலும், மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. அரசு எவ்வளவுதான் சிறந்த திட்டங்களை வகுத்தாலும், மக்களின் பங்களிப்பு இல்லாமல் அவை முழுமையாக வெற்றி பெறாது. பொதுச் சொத்துகள் அனைவருக்கும் சொந்தமானவை; தம் வரிப் பணத்தில் உருவானவை என்று அவர்கள் கருதி அதன் தூய்மையைப் பராமரிக்கிறார்கள்.

உடற்பயிற்சிக்குப் பிறகு கிருமிகள் பரவுவதைத் தடுக்க, உடற்பயிற்சிக் கருவிகள், பாய்கள், இருக்கைகள் போன்றவற்றைத் துடைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பின்னும் இது தொடர்கிறது. நீச்சல் குளத்தில் நீர் சுத்தமாக இருப்பதுடன், அதைச் சுற்றியுள்ள தரைகள் வழுக்காமல் இருக்கின்றன. பணம் செலுத்தி இதில் உறுப்பினராகலாம். தொடர்ந்து பயிற்சிக்குப் போக முடியாதவர்கள், என்றைக்குப் போகிறார்களோ அன்றைக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். அவ்வாறு நம் ஊரில் அனைவரும் பயன்படுத்திப் பயனடைவார்களா? விளையாட்டில் அதீத ஆர்வம் உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பார்களா? விளையாட்டுக்குப் பணம் செலவழிப்பார்களா? நம் பொது உடற்பயிற்சிக் கூடங்களின் தூய்மையில் கவனம் செலுத்துவார்களா?

சென்னை செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய விளையாட்டு அரங்கம் அமைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் விளையாட்டு மையம், சிட்னி ஒலிம்பிக் பூங்கா, லண்டன் ஒலிம்பிக் பூங்கா உள்ளிட்ட உலகின் சிறப்பு வாய்ந்த விளையாட்டு அரங்குகளை ஆய்வு செய்து அதே போன்ற வசதிகளுடன் இந்த விளையாட்டரங்கம் அமைய உள்ளது.

மாவட்டந்தோறும் இத்தகைய நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். பிற மாவட்டத்தின் திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசோ, தனியாரோ ஏற்படுத்தித்தரும் வசதிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது பொதுமக்களின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

பொது உடற்பயிற்சிக் கூடங்கள், அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு உடற்பயிற்சி வசதிகளை வழங்குகின்றன. இந்த ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ள 25 உடற்பயிற்சிக் கூடங்களை நவீனமயமாக்கத் திட்டமிட்டுள்ளது. நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்புகளை மேம்படுத்தவும் வழிகோலும்.

செம்மைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிக்கூடங்களை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் தூய்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். "விளையாட்டு' வெறும் விளையாட்டல்ல; அது காற்றைப் போல், நீரைப்போல், உணவைப்போல் அத்தியாவசியமானது. நோயுள்ள உடலின் புத்திக் கூர்மை வீண். விளையாட்டுக்கு முக்கியத்துவம் தராமல் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவில்லை என குற்றஞ்சாட்டினால் சரியா? கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கும் தரப்பட வேண்டும். காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி அல்லது மாலை முழுவதும் விளையாட்டு என்று நம் வாழ்க்கை முறை மாறினால் வாழ்நாளெல்லாம் வசந்தம் கவரி வீசும்; மந்திரத்தால் மாங்காய் காய்க்காது.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டி

கொடைக்கானலில் கலைத் திருவிழா

சென்னை - போத்தனூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT