அண்மையில் பேருந்து பயணத்தின் போது, உரையாடல் ஒன்றைக் கேட்க நேர்ந்தது. பேருந்தின் இரைச்சலையும் மீறி எதிர்முனையில் பேசுவோருக்கு கேட்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த உரையாடல் நிகழ்த்தப்பட்டது. அதனால், பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவருக்கும் கேட்டது அந்த உரையாடல்-
இவ்வாறு நிறைவு பெற்றது. "காலையிலே 10 மணிக்கெல்லாம் போயிடாதே; அவங்க எல்லாம் வர்றதுக்கு 11 மணியாகிவிடும்'. அரசு அலுவலக அதிகாரி ஒருவரைச் சந்திக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் கேட்கப்பட்ட ஆலோசனை என்பதும் புரிந்தது. 10 மணிக்கு இன்று வரவேண்டிய அதிகாரி 11 மணிக்கு ஏன் வருகிறார் என்றோ, இதே அதிகாரி நேற்று வீட்டுக்கு எத்தனை மணிக்கு திரும்பச் சென்று சேர்ந்தார் என்பதை யாரும் பேசப்போவதில்லை. அதில் அவர்களுக்கு அக்கறையும் இருக்கப் போவதில்லை.
அதுபோல், வீட்டுக்குச் சென்ற பிறகும் தனது வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் மூலம் வந்த எத்தனை செய்திகளை அவர் பார்த்துப் பதிலளித்திருப்பார். காலையில் எழுந்த நேரம் முதலே மெய்நிகர் வழியாக (வர்ச்சுவல்) அலுவலகம் வந்துவிட்டிருப்பார் என்பதையும் யோசிக்க வாய்ப்பில்லை. இதுபோலவே அலுவலக நேரத்திலும் சொந்தப் பணிகள் இதே பாணியில் குறுக்கிடுவதும் தவிர்க்க இயலாததே.
விதிவிலக்காக நேர்த்தியாக பணிகளைத் திட்டமிடும் அதிகாரிகளும் பணியாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், பெரும்பான்மை நேர்வுகளின் அடிப்படையில் இந்தக் கருத்தோட்டம் குறித்து அலசி ஆராய்வது அவசியமாகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் நெரிசலான சாலைகளில் பயணிப்போர் நிலையைக் கவனித்துப் பார்த்தால் போக்குவரத்து என்பது எவ்வளவு சவாலானது என்பது விளங்கும். இதுபோன்ற நகரங்களில் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டால் தவிர அலுவலகங்களுக்கு நேரத்துக்குச் செல்ல இயலாது. அதுபோலவே மீண்டும் வீட்டுக்குச் சென்ற பிறகு முழுமையாக அலுவலகப் பணிகளை மறந்திருக்கும் வாய்ப்பும் இல்லை.
ஒருகாலத்தில் வார இறுதிநாள்களில் கோப்புகளைக் கொண்டு சென்றனர். இப்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் கோப்புகளுடனேயே அலைகின்றனர். ஆனால், பணிகளின் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பல்வேறு அலுவலகப் பணிகளும் பெருமளவில் எண்மமயமாகி விட்டது.
இதனால், பொதுமக்கள் இருந்த இடத்திலேயே அனைத்து விதமான சேவைகளுக்கும் விண்ணப்பிக்க முடிகிறது. இந்த எண்ம நிர்வாகம் மிகவும் வரவேற்புக்குரியது.
பொதுமக்கள் தங்கள் உரிமைகளை எவ்விதப் பாகுபாடுமின்றி பெற வழிவகை செய்யும் அரிய வாய்ப்பை அளிப்பது; அனைத்து விதமான தரவுகளையும் விரல் நுனியில் வைத்துக்கொள்ள உதவுவது; சரியான தரவுகளின் மூலம்தான் அரசோ, தனியார் நிறுவனம் ஒன்றோ நேர்த்தியாக திட்டம் வகுக்க இயலும் என்பதும் மறுக்க முடியாது. ஆனால், இவ்வாறு அனைத்து அலுவல்களும் எண்மமயமாவதால் அலுவலகப் பணியாளர்களின் வாழ்வு எந்தக் கதியாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முந்தைய காலங்களைப்போல் 10 முதல் 5 மணிவரைதான் அலுவலகப் பணி என்றால் எந்த அலுவலகங்களும் இன்று செயல்பட இயலாது. நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கமும், சேவைகளின் தேவை அதிகரிப்பும் வேலைநேர அதிகரிப்பைக் கூட்டியுள்ளது. சேவைகள் தேவை அதிகரிப்பை ஈடுகட்டும் அளவிலான பணியாளர்களும் அலுவலகங்களில் இல்லை.
ஆனால், அதே நேரம் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளை ஒவ்வொரு நாளும் எடுத்துவிட இயல்கிறது. இதை அடிப்படையாக வைத்து ஒவ்வோர் உயர் அதிகாரியும் அடுத்தகட்ட பணியாளர்களை மீளாய்வு செய்வதும் நடைபெறுகிறது.
சரி என்னதான் செய்யலாம்? பணிகள் நடைபெற வேண்டாமா? முன்னேற்றம் வேண்டாமா? என்று கேட்பது புரிகிறது. எல்லாவற்றுக்கும் ஒழுங்கு இருப்பதுபோல் மின்னணு யுகத்தில் மனிதர்கள் பணி செய்வதிலும் ஒருவகை ஒழுங்கு என்பது தேவையாகிறது. வேறு வகையில் கூறுவதானால் வாழும் வகையில் ஒழுங்கு.
இந்த ஒழுங்கே உடல் நலனிலும் ஒழுங்கை நிர்வகிக்க உதவும். அவ்வாறான உடல்நல ஒழுங்கே பணித் திறனையும் அதிகரிக்கும். பணித் திறன் அதிகரிப்பே நாட்டின் மனிதவளத்தைக் கூட்டி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் உயர்வை உறுதிசெய்யும்.
எண்ம நிர்வாகத்தோடு பணியாளர்களின் உடலோம்பல் நிர்வாகத்துக்கும் இன்றைய நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல நிறுவனங்கள் உடலோம்பலை அலுவலகத்திலேயே மேற்கொள்ளும் வகையில், அங்கு ஓர் அறையில் உடற்பயிற்சிக் கூடங்கள்கூட அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளன. இது ஒரு வகையில் பார்த்தால் ஆரோக்கியமான போக்குதான்.
அதேநேரம் பணியாளரின் தனிப்பட்ட வாழ்வு மேம்பாட்டில் சவால்களைக் குறைக்கும் விதமாக நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். பணியாளர்கள் உரிய நேரத்துக்கு வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதையும் உறுதி செய்யவேண்டும்.
நிர்வாகத்தின் அனைத்து நிலையில் இருப்போரும் ஒருவிதமான ஒழுங்குக்கு வரவேண்டிய தேவை அதிகரித்துள்ளது. எல்லா நேரமும் எல்லோரும் எல்லாப் பணிகளையும் செய்துகொண்டிருப்பதைவிட குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மிகவும் கவனத்தோடும், நேர்த்தியோடும் அமர்ந்து திட்டமிட வேண்டும். அந்தப் பணிகளின் நிறைவை குறிப்பிட்ட காலவரையறை வைத்துக்கொண்டு மட்டும் மீளாய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறான நேர்த்தியை கடைநிலை அலுவலகம் வரை கொண்டு சென்று, அந்த அலுவலர்களும் அலுவலகப் பணியாளர்களும் இந்த நேர்த்திக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அடுத்தடுத்து திட்டமிட்டு எல்லா நேரமும் எல்லோரும் பணி செய்துகொண்டேயிருப்பது போன்ற மாயை ஏற்படுத்துவது தனி மனிதர்களுக்கும், அலுவலக நடைமுறைகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல.
ஒருவகையில் செடியை பூமியில் நட்டுவிட்டு ஒவ்வோர் நாளும் அதன் வேரைப் பிடுங்கி, அதன் வளர்ச்சியின் அளவை அளப்பது போன்ற செயல்பாடாகவே அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.