ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.
அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாகும். இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் மக்கள்தொகையில் சுமார் 1.5% மட்டுமே இருந்தபோதிலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்காக தொழில்நுட்பம், தொழில்
முனைவு மற்றும் அறிவியல் துறைகளில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, பல இந்திய அமெரிக்கர்கள் "ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களில் யூனிகான்களை உருவாக்குவதிலும், தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டு
பிடிப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். தொழில்நுட்பத் துறையில் பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினரின் தலைமுறையின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. "சிலிகான் வேலி' போன்ற பகுதிகளில் புதிய வணிகங்களை ஏற்படுத்துவதிலும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அறிவியல், ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வித் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு, குறிப்பாக துணிச்சலான மூலதனம் மற்றும் புதுமைகளை உருவாக்குவதன் மூலம் வலுச் சேர்க்கின்றனர்.
இந்த நிலையில், ஹெச்-1பி விசா கட்டண உயர்வு இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இழைக்கப்படுகிற மிகப் பெரிய துரோகமாகும். டிரம்ப்பின் இந்த உத்தரவு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு இருக்கிற இந்தியர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்த இந்த ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை, "புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இது ஒரு முறை தானே தவிர, ஆண்டுதோறும் அல்ல' என்று விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே, ஹெச்1-பி விசா வைத்திருந்து தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள், நாடு திரும்பும் போது ஒரு லட்சம் டாலர் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் தரவுகளின்படி, 2024-ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71% இந்தியர்களே பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 11.7 சதவீதத்துடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்த விதியால் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியப் பொறியாளர்கள், மருத்துவர்கள், தரவு ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகம் முழுவதும் அவர்களின் திறமைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு ஹெச்-1பி விசா முக்கியம். அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் முதுகெலும்பாக இந்திய வல்லுநர்கள் இருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
தற்போது, அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்தி வெளிநாட்டுப் பொறியாளர்களைக் கொண்டுவருவது பொருளாதார ரீதியில் உகந்த முடிவாக இருக்குமா அல்லது அவர்களைத் திரும்ப அனுப்பிவிட்டு, ஓர் அமெரிக்கக் குடிமகனை நியமிக்க வேண்டுமா என முடிவு செய்ய வேண்டும். இந்தியாவுக்கு இழப்புகள் உண்டு; ஆனால், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய இழப்புகள் உண்டு. இவற்றைச் சிறிது காலம் கழித்த பிறகுதான் அமெரிக்கா உணரத் தொடங்கும்.
அமெரிக்காவில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கெனவே 50 முதல் 80 சதவீதம் வரை உள்ளுர் மக்களைத்தான் பணிக்குச் சேர்க்கின்றன. தற்போது ஏற்பட்டிருக்கிற இந்தப் பிரச்னைகளால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகாது. இதனால், எந்தப் பலன்களும் ஏற்படப் போவதில்லை; இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவது அமெரிக்க குடிமக்களை வேலைக்கு வைப்பதைவிட அதிக செலவானதாக மாறும்.
இத்தகைய மாற்றங்கள் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகளையும், வேலைவாய்ப்பு கட்டமைப்புகளையும் பாதிக்கும். அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் வேலை செய்யும் இந்தியக் குடிமக்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புராஜெக்டுகள் பாதிக்கப்படும். அதற்கு புதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள், ஐ.டி. பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு நெருக்கடியை உருவாக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களான அமேசான், காக்னிசன்ட், டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், இன்போசிஸ், மெட்டா, ஹெச்சிஎல் மற்றும் கூகுளும் இந்திய வல்லுநர்களை அதிக அளவில் பணியமர்த்தி உள்ளன. யுஎஸ்ஜிஐஎஸ் தரவுகளின்படி இந்த நிறுவனங்கள்தான் அதிகமான ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளன. இவ்வளவு அதிகமான கட்டணம் விதிப்பது அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கடினமாக்கும்.
அமெரிக்காவில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஐ.டி. மேலாளர் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். ஆனால், ஹெச்-1பி விசாதாரர்களுக்கு ஊதியம் 40% குறைவாக இருக்கும். அதுவே இந்தியாவில் 80% குறைவாக உள்ளது.
அதிகமான கட்டணத்தால் நிறுவனங்கள் இந்தியாவிலேயே வேலையை முடிக்க விரும்பும். இதன் மூலம் ஹெச்-1பி விண்ணப்பங்கள் குறைந்து, உள்ளுர் வேலைவாய்ப்புகளும் குறைந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான திட்டச் செலவு அதிகரிக்கும். புதிய ஆய்வுகளும் குறையும்.
இந்தியப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமெரிக்காவின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை அதிபர் டிரம்ப் ஏனோ மறந்துவிட்டார். ஹெச்-1பி விசா கட்டணத்தை டிரம்ப் உயர்த்தியிருப்பது அமெரிக்க ஆய்வுகளைப் பாதித்து, இந்தியாவின் வளர்ச்சிகளை மேம்படுத்தும். உலகளாவிய திறமைசாலிகளின் கதவுகளை அடைப்பதன் மூலம் அமெரிக்காவின் அடுத்தகட்ட ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதிய ஆய்வுகள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் இந்திய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், புணே நோக்கி நகரத் தொடங்கும்.
இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கும், வளர்ந்த இந்தியாவுக்கும் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அமெரிக்காவின் இழப்பு இந்தியாவில் லாபமாக மாறும்.
டிரம்ப்பின் இந்த உத்தரவு அமெரிக்க வல்லுநர்களுக்கு இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அதிகப்படியான கட்டணம் வெளிநாட்டுப் பணியாளர்களின் வரவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் அச்சப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் வரலாற்றிலேயே சட்டபூர்வ குடியேற்றத்துக்கு மிகவும் எதிர்ப்பானதாக உள்ளது இந்த அரசு. இவை நாட்டின் வளத்தையும், சுதந்திரத்தையும் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. ஹெச்-1பி விசாக்களை ஒழித்துக் கட்டுவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் மிகவும் சக்திமிக்க பணியாளர்களை வெளியே அனுப்புகிற இந்த நிலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவை பின்னோக்கித் தள்ளிவிடும்.
இவை அமெரிக்கப் பணியாளர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஏனென்றால், அவர்களின் ஊதியங்களைக் குறைத்து விலைவாசியை அதிகரிக்கச் செய்து விடும். சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, தொழில்நுட்பத் துறை மூன்றும் பேராபத்தில் இருந்து தப்பிக்க இயலாது.
அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 ஹெச்-1பி விசாக்கள் வழங்கப்படும். இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85 ஆயிரம் ஹெச்-1 பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்தியர்கள் 7.5% பேர் இந்த விசாவைப் பெற்றவர்கள். அவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணியாற்றலாம். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் சுமார் 7.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஹெச்-1பி விசா அடிப்படையில், அமெரிக்கா முழுவதும் 13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த விசாவைப் பெற்றவர்களில் சுமார் 71% பேர் இந்தியர்கள்; இவர்களின் நிலை என்னவாகும்?
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.