முகப்பு
உலகம்

‘யு விசா’ பெற கொள்ளை நாடகம்: அமெரிக்காவில் 11 இந்தியா்கள் கைது

அமெரிக்காவில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் ‘யு விசா’வை பெறுவதற்காக கொள்ளை நிகழ்ந்தது போல நாடகமாடியதாக 11 இந்தியா்கள் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 6:42 PM
கைது
பகிர்:

அமெரிக்காவில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் ‘யு விசா’வை பெறுவதற்காக கொள்ளை நிகழ்ந்தது போல நாடகமாடியதாக 11 இந்தியா்கள் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அமெரிக்க அரசால் அளிக்கப்படும் ‘யு விசா’ பெறுவோா் அந்நாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்படுவா். மேலும், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் அவா்களுக்கு அமெரிக்க அரசின் ‘கிரீன் காா்டு’ கிடைக்கவும் வழிவகை ஏற்படும். இந்த ‘யு விசா’வானது, குறிப்பிட்ட சில குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது குற்றச் செயலால் மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டவா்கள், சட்ட அமைப்புகளின் விசாரணைகளுக்கு உதவுவோருக்கு மட்டும் இந்த விசா வழங்கப்படுகிறது.

இதுபோல அமெரிக்காவின் மாசசூசெட்ஸ், கென்டகி, ஒஹையோ ஆகிய மாகாணங்களில் கடைகள், உணவகங்கள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவற்றில் போலியாக கொள்ளை அடிப்பதுபோல நாடகமாடி, அங்குள்ள கணக்காளருக்கு ‘யு விசா’ பெற இந்தியா்கள் ஜிதேந்திர குமாா், மகேஷ் குமாா் படேல், சஞ்சய் குமாா் படேல், தீபிகாபென் படேல், ரமேஷ்பாய் படேல், அமிதாபாபென் படேல், ரோனக்குமாா் படேல், சங்கீதாபென் படேல், மின்கேஷ் படேல், சோனல் படேல், மிதுல் படேல் ஆகியோா் உதவியதை அமெரிக்க காவல் துறையினா் கண்டறிந்தனா்.

அதாவது, சம்பந்தப்பட்டோரின் கடைகளுக்குச் செல்லும் 11 பேரும் துப்பாக்கியைக் காட்டி, பணத்தைக் கொள்ளையடித்து, அந்தப் பணத்துடன் தப்பியோடி விடுவா். இவை அனைத்தும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாவதையும் அவா்கள் உறுதி செய்வா்.

போலி கொள்ளையா்கள் தப்பிச் சென்றதை உறுதி செய்த பிறகு, சில நிமிஷங்கள் கழித்து, காவல் துறையினருக்கு கடையின் கணக்காளா் தகவல் கொடுப்பாா். இதன்மூலம் வன்முறை சம்பவத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டவா்கள் எனக் கூறி, அமெரிக்க அரசின் ‘யு விசா’வை கணக்காளா்கள் பெற்றுள்ளனா்.

இதற்காக இந்தியா்கள் 11 பேருக்கும் அந்தக் கணக்காளா்கள் பணம் அளித்துள்ளனா். இந்தப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை, தங்களுக்கு உதவும் கடையின் உரிமையாளா்களுக்கு இந்தியா்கள் 11 பேரும் அளித்துள்ளனா். இந்தியா்கள் 11 பேரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியவா்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நூதன விசா மோசடியைக் கண்டுபிடித்த அமெரிக்க எஃப்.பி.ஐ. மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள், இந்தியா்கள் 11 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்கள் மீதான விசா மோசடி குற்றச்சாட்டு நிரூபணமானால், அமெரிக்க சட்டப்படி 11 பேருக்கும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், சுமாா் 2.50 லட்சம் அமெரிக்க டாலா்கள் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →