சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை, மனிதக் கழிவுகளால் 1858-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் தேம்ஸ் நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பெரும் துர்நாற்றத்தால் (கிரேட் சிடிங்க்) லண்டன் நகரம் திணறியது.
பொது சுகாதாரத்தைப் பேணவும், கழிவு நீர் வெளியேற்று வடிவமைப்பை கட்டமைக்கவும் சர் ஜோசப் பாசல்கெட் என்ற பொறியாளரைக் கொண்டு விக்டோரியா மகாராணி நவீன கழிவுநீர் அமைப்பை உருவாக்கினார். பிரிட்டிஷார் ஏகாதிபத்தியத்தின் கீழ் இந்தியா இருந்ததால் மும்பையிலும் லண்டனைப் போன்ற நிலத்தடி கழிவுநீர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக நகரமாக மும்பை உருவெடுக்கத் தொடங்கியது. அதிகமான மக்கள் மும்பையில் குடியேறியதால் கழிவு நீர், மாசு, துர்நாற்றம், கொசுக்கள், குடிநீர் மாசுபாடு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கத் தொடங்கியன. 1830-1860- ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவில் பரவிய காலரா, பிளேக் போன்ற தொற்று நோய்கள் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப் பறித்தன.
தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு, திறந்தவெளி கழிவுநீர் வெளியேற்று அமைப்பிற்கு மாற்றாக நிலத்தடி கழிவுநீர் அமைப்பின் தேவை ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசின் பொறியாளர் ஹெக்டர் டுல்லோச் தலைமையிலான குழுவினர் நிலத்தடி கழிவுநீர் வெளியேற்று திட்டத்தை உருவாக்கினர். இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நிலத்தடி கழிவுநீர் வெளியேற்று திட்டம்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் தினசரி சுமார் 7,236.8 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 642.1 கோடி லிட்டர் கழிவு நீர் உற்பத்தியாகிறது.
இந்தியாவின் பெரு நகரங்களில் நிலத்தடி கழிவுநீர் அகற்று அமைப்பு உள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரும்பாலும் கழிவு மக்கல் தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் கழிவு நீர்ப்போக்குக் குழி (சோக் பிட்) போன்ற கழிவுநீர் அகற்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நிலத்தடி கழிவுநீர் அகற்று அமைப்பு மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர் பல கட்டங்களாக சுத்திகரிக்கப்படுகிறது. திண்மக் கழிவுகளை நீக்கும் முதல் நிலைச் சுத்திகரிப்புக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக பாக்டீரியாவை பயன்படுத்தி கரிமப் பொருள்கள் களையப்படுகின்றன. மூன்றாம் கட்டமாக நுண்ணுயிர்களை அழிக்கும் ரசாயன சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. நமது நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் அடிப்படையில் ஒரு நாளைக்கு சுமார் 3184.1 கோடி லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தேசிய கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. இதன்படி சுத்திகரிப்பின்றி 57% கழிவுநீர் நேரடியாக ஆறுகள், குளங்கள், கடற்கரைப் பகுதிகள், நிலப் பகுதிகளில் விடப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப்படாத 244.6 முதல் 492.9 கோடி லிட்டர் கழிவுநீர் தமிழ்நாட்டு ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீரில் கலக்க வாய்ப்புள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நீரில் உள்ள கரிமப் பொருள்களைச் சிதைக்க நுண்ணுயிர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவைக் குறிக்கும் 'உயிரி வேதிகளின் ஆக்சிஜன் தேவை' (பயோ கெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்) சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் தமிழ்நாட்டு ஒரு நாள் கழிவு நீரில் 612-1,232 டன் இருப்பதாகவும் நீரில் மிதக்கும் திடப் பொருள்களின் மொத்த அளவு (டோட்டல் சஸ்பென்டெட் சாலிட்ஸ்) 856-1,725 டன் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உயிரி வேதிகளின் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்போது நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால், நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.
தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்பாடு செய்வதற்கான கொள்கைகளை வகுத்துள்ளன. இந்தக் கொள்கைகளின்படி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தொழில் துறை பயன்பாடு, தோட்டச் செடிகள் வளர்ப்பு, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் மறுசீரமைப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தேவையில் பாதிகூட இல்லாத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், முழுத் திறனில் செயல்படாத சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீர் மேலாண்மைக்கான நிதிப் பற்றாக்குறை, நகர்ப்புற மேம்பாட்டில் முறையாகத் திட்டமிடப்படாத கழிவுநீர் அமைப்பு, ஆறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களில் கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற கழிவுநீர் மேலாண்மை சவால்களுக்கு உடனே தீர்வு காண வேண்டிய சூழலில் நாம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சவ்வு உயிரி-உலை (மெம்பரைன் பயோ ரியாக்டர்), வரிசைமுறை தொகுதி உலை (சீக்வன்சிங் பாட்ச் ரியாக்டர்) போன்ற மேம்படுத்தப்பட்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்த கட்டாய விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவைப் பொருத்து பெரிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் பதிலாக சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வுப் பரிந்துரைகள் கூறுகின்றன.
கங்கை செயல் திட்டம், தேசிய நதி பாதுகாப்புத் திட்டம், நமாமி கங்கை மிஷன், தமிழ்நாடு அரசின் கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், நதி பாதுகாப்புத் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க நீர் பயன்பாட்டுத் திட்டங்கள் போன்ற செயல்பாடுகளும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்கும் மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம், தொழிற்சாலைகளுக்கான பூஜ்ய திரவ வெளியேற்றத்தை உறுதி செய்யும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகள், நீர்வழி மாசுபாட்டைக் கண்காணிக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிமுறைகள் போன்ற சட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளன.
மாசுக் கட்டுப்பாடு சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதலும், கழிவு நீர் மறு பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் கழிவுநீர் மேலாண்மை குறித்த புரிதலை சமுதாயத்திலும் தனி நபர் மனதிலும் ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.