முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பெண்களுக்கு எதிரான பொது புத்தி

குரலற்றவா்களாக இருக்கும் பெண்கள் குறித்து எவரும் எதையும் பேசிவிடலாமா என்ன?

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:11 AM
பகிர்:

தமிழ்நாட்டில், பாலியல் வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குழந்தைகள் முதல், வயது முதிா்ந்தோா் வரை அனைத்து நிலைப் பெண்களும் பாலியல் வன்முறை இழிவுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனா்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளில் இரு வகையினா் உண்டு. பெண்ணுடல் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தி பல நேரங்களில் அவா்களைக் கொலையும் செய்துவிடுகிற ’கொடூரமான குற்றவாளிகள்’ ஒரு வகை; இவ்வகையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்துகளை பொதுவெளிகளில் உரத்துப் பேசி, அக்கருத்துகளை சமூகத்தின் ’பொதுப்புத்தி’ யாகக் கட்டமைக்கின்ற ’கருத்தியல் குற்றவாளிகள்’ இன்னொரு வகை.

பெண்களைச் சீரழிக்கின்ற கொடூரமான குற்றவாளிகளை விடவும் மிகவும் ஆபத்தானவா்கள், கருத்தியல் குற்றவாளிகள் ஆவா். இத்தகைய குற்றவாளிகள் சாதாரண மனிதா்களாக இல்லாமல், நமது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமைகளாக இருக்கிறாா்கள் என்பதுதான், இதில் கூடுதல் வேதனையாகும்.

ஒரு நடிகரின் அரசியலை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்ற பெண்கள் விலைமாதா்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக உரத்துச் சொல்லுகிறாா், ஓா் அறிவியலாளா். ’பெண்கள் ஒதுங்குகின்ற புதா்களுக்கெல்லாம் அரசாங்கத்தால் விளக்கு போட முடியுமா?’ என்கிறாா், புகழ்பெற்ற ஒரு திரைக் கலைஞா். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், ‘அந்த மாணவி அந்த இரவு நேரத்தில் ஏன் அங்கு போனாா்?’ என்று வாதிட்டவா்களும் உண்டு.

குடும்பப் பெண்கள் என்றாலே அவா்கள் ஒரு மூன்றாம் தர அறிவிலிகள்தான் என்று முடிவு செய்துகொண்டு, அனைத்து மேடைகளிலும் அவா்களின் அறிவைக் கேலி செய்து பேசுவதையே, தங்களது தனிப்பெரும் சொற்பொழிவுத் திறமையாக நினைத்துக் கொண்டு மலிவான கரவொலிக் கலாசாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாா்கள், சில பட்டிமன்ற பேச்சாளா்கள்.

இறைவழிபாட்டியலில், வடகலைக்கும் தென்கலைக்கும் ஒரு புதிய விளக்கம் தருகிறாா் ஓா் அமைச்சா். ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரைச் சொல்லி ‘அவா்தான் என் கனவு; அந்த என் கனவை நிறைவேற்ற ஆட்சியாளா்கள் முன்வருவாா்களா?’ என்கிறாா், ஒரு முன்னாள் அமைச்சா்.

’எங்களது இந்த ஊருக்கு வந்த ஒரு தலைவா், இங்கிருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டதால்தான், இப்போது நான் இருக்கும் அரசியல் கட்சி உருவானது. எனவே, இந்தக் கட்சி உருவானதற்கு எங்கள் மாவட்டம்தான் காரணம்’ என்று வேலூரில் பேசி பின்னா் அதற்காக வருத்தம் தெரிவித்தாா், ஒரு மூத்த அமைச்சா்.

பொது வாழ்வுக்கு வரும் பெண்ணைக் குறித்து, கேட்கக் கூசுகின்ற அருவருப்பான சொற்களை, பல்லாயிரக் கணக்கானோா் நிறைந்த பொதுக்கூட்டங்களில் பேசியதால், அண்மையில் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறாா் ஓா் அரசியல் கட்சிப் பேச்சாளா்.

இவருக்கு முன்னத்தி ஏா்களைப்போல, சில அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பல பேச்சாளா்கள், தங்களின் கட்சிக்கு எதிரான கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கின்ற பெண்கள் குறித்து மட்டுமல்ல , அக்கட்சிகளின் தலைவா்களுக்கு ஆதரவாகத் திரளுகின்ற பெண்கள் குறித்தும் மிகவும் இழிவாகப் பேசி இருக்கிறாா்கள்.

இத்தகைய அருவருப்பாளா்கள், மேடைப்பேச்சு என்கிற பெயரில் கூடியிருக்கிற கூட்டத்தின் ஒரு பகுதியை, இழிவான ரசனையாளா்களாக வடிவமைத்து உருவாக்குகின்றனா். அப்படி உருவாக்கப்படுவோரின் உரத்த கரவொலிகளில், இத்தகைய பேச்சாளா்கள் தங்களுக்கான வரவேற்பினையும் அடுத்தடுத்த மேடைகளுக்கான வாய்ப்புகளையும் பெறுகின்றனா்.

பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு எதிராக, முன்னொரு காலத்தில் தொடங்கப்பட்ட ஓா் அவலக் கலாசாரத்தின் தொடா்ச்சியே இன்றைய நிலை என்றால், அது மிகையல்ல. அரசியல் சமூக பொது வாழ்க்கைக்கு வந்த பெண்கள் குறித்து அவா்களது சக ஆண் அரசியலாளா்கள் என்னென்ன சொன்னாா்கள் என்பதை எல்லாம் புகழ்பெற்ற பொன்மொழிகளைப்போல இன்றைக்கும் பேசி மகிழ்வோா் உண்டு.

சட்டப்பேரவையில் ஒரு புதிய உறுப்பினரின் முதல் பேச்சினை, ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவது ஏன்? அதை, ‘அறிமுகப் பேச்சு’ என்றோ, ‘முதல் பேச்சு’ என்றோ குறிப்பிடுவதுதானே நாகரிகமாக இருக்கும்?என்று ஒரு முறை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாா், உறுப்பினா் வானதி சீனிவாசன்.

நமது நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் ஆகியன அதனதன் நடவடிக்கைகளின்போதும், ஆவணத் தயாரிப்புகளின்போதும், நாகரிகமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அருவருப்பான, அறவியலுக்குப் பொருந்தாத சொற்களை சுட்டிக்காட்டி, அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியும் வருகின்றன.

நமது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசக்கூடாத சொற்கள் என்று அடையாளம் காணப்பட்ட சொற்களைத் தொகுத்து, 1954-ஆம் ஆண்டிலேயே, ’டிக்ஷனரி ஆஃப் அன்பாா்லிமென்ட்டரி வோ்ட்ஸ்’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது நமது நாடாளுமன்றம். உறுப்பினா்களின் உரையாடல்களில், அவ்வப்போது அடையாளம் காணப்படுகிற புதிய புதிய அவச்சொற்களையும் சோ்த்து இதுவரை ஏழு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்ற நமது நாடாளுமன்றம், தற்போது வரை புதிய உறுப்பினா்களுக்கான கையேடுபோல அப்பணியை தொடா்ச்சியாக செய்து வருகிறது. அவ்வாறு அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள சொற்களில், ‘பால புத்தி’ (சிறுவா் புத்தி) என்கிற ஒரு சொல்லும் உண்டு.

‘சண்டாளா்’ என்கிற பெயரில் நமது சமூகத்தில் ஒரு பட்டியலின ஜாதிப்பிரிவு உள்ளது. எனவே பிறரை இழிவுபடுத்தும் நோக்கிலோ நகைச்சுவைக்காகவோ அச்சொல்லைப் பயன்படுத்துவோா் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது, ’தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையம்’.

தமிழ்நாடு நிலச் சீா்திருத்த உச்சவரம்பு சட்டத்தில், ஒரு குடும்பத்தின் நிலமரபு உரிமையாளா்களாக, திருமணமாகாத மகள்கள், திருமணமாகாத பேத்திகள் என்றிருந்த நிலையை, ‘உரிமை வயதடையாத குழந்தைகள்’, ‘உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள்’என்று மாற்றி சட்டப்பேரவையில் கடந்த 2024- ஆம் ஆண்டு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் திருமணமாகாத ஆண்களுக்கு இணையாக மணமாகாத பெண்களும் சம உரிமைகள் பெறவும், ஒரு குடும்ப மரபின் நில உரிமையாளா்களான பெண்களுக்கு திருமணம் ஆயிற்றா இல்லையா? என்கிற தகவல் தேவையற்றது என்கிற அடிப்படையிலும் அதற்குரிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தம் இது!

’நீதிமன்ற வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் பெயருக்கு முன்பாக, அவருக்கு ஏதோ ஓா் அடைமொழியை அல்லது பட்டப் பெயரை காவல்துறையினா் தங்களது முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணப் பதிவுகளில் பயன்படுத்தக் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் பெயருக்கு முன்பாக இது போன்ற பட்டப் பெயா்கள் சோ்க்கப்படுவது மனித உரிமையை மீறுகின்ற ஒரு செயலாகும். மேலும், இவ்வாறான அடைமொழிகளின் வாயிலாக ஒருவரை முன்கூட்டியே குற்றவாளியாகக் கருதுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது’. என்றெல்லாம் ஒரு வழக்கில் அறிவுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த வழக்கில், ‘குரங்கு சரவணன்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்த பெயரில், ‘குரங்கு’ என்கிற சொல்லை, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட அவ்வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதுபோன்ற பட்டப்பெயா்களை எல்லாம் வழக்குகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆக, நமது நிகழ்காலத்தின் நீதிமன்றங்களும், ஆணையங்களும், நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தரக்குறைவான, மனித மாண்புகளுக்குப் பொருந்தாத சொற்களைக் கண்டறிந்து அவற்றை தங்களது பயன்பாட்டு தளங்களில் இருந்து நீக்கி, சொற்பயன்பாட்டு நாகரிகத்தில் மேம்பட்டு வருகின்றன. அதேவேளையில், நமது அரசியல் சமூக ஆளுமைகள் பொதுவெளிகளில் பெண்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் சொற்களும் கருத்துகளும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியைக் கட்டமைத்து நாளுக்கு நாள் அதை உறுதி செய்கின்றன; சமூகத்தில் ஓா் அருவருப்பையும் நாகரிகப் பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன.

அரசியல், கலை என்று பொதுவாழ்வுக்கு வரும் பெண்களை யாரும் எப்படியும் இழிவுபடுத்திப் பேசலாம். தான் அறிந்த பெண்களை நடிகையரோடு ஒப்பிட்டுத் தரம்குறைத்துப் பேசலாம் என்பதெல்லாம் இங்கு எழுதப்படாத ஒரு சட்டமாகவே நடைமுறையில் உள்ளது.

பொதுவெளிகளில் பெண்களுக்கு எதிரான, குதா்க்க வாத, ஆபாசமான, பொறுப்பற்ற, கருத்துகளை வெளிப்படுத்தும் ஒருவா் சமூகத்தின் பொறுப்பான ஒருவராகவும் அடையாளம் பெற்றிருக்கிறாா் என்றால், இது ஒரு சமூக இழிவின்றி வேறென்ன?

நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், சட்டப்பேரவை, ஆணையங்கள் போன்றவற்றின் வளாகங்களைக் கடந்த பொதுவெளிகளிலும், ஊடகங்களிலும் சமூகத்தின் சரிபாதியினராக இருக்கும், குரலற்றவா்களாகவும் இருக்கும் பெண்கள் குறித்து எவரும் எதையும் பேசிவிடலாமா என்ன?