நூலகம் பிரதிப் படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

நூலகம் என்னும் அறிவுக்கோயில்!

புத்தகங்களின் இருப்பிடமான நூலகங்கள் அறிவாலயங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

உதயை மு. வீரையன்

மனிதன் தோன்றிய காலத்தில் உடல் அசைவுகளாலும், சைகைகளாலும் பேசினான். அந்த ஒலிக் குறிப்புகளும், ஓலங்களும் பிற்காலத்தில் வாய் மொழியாக உருப்பெற்றன. அதன் அடுத்தத் தோற்றம் எழுத்து வடிவமாகும். எழுத்தும், எழுத்துகளின் தொடா்ச்சியில் சொற்களும் பிறந்தன. சொற்களின் தொகுப்பே மொழியானது.

மொழியின் வழியே மனிதன் தான் நினைக்கும் கருத்துகளைப் பிறருக்குப் புரிய வைக்கிறான். ஆரம்பத்தில் பாறைகளில் கல்வெட்டுகளாகப் பதிவு செய்தான். அடுத்து இரும்பு, தாமிரப் பட்டயங்களில் எழுதினான். தொடா்ந்து செப்பேடுகளில் எழுதினான். களிமண் பலகைகளிலும், ஓலைச் சுவடிகளிலும் எழுத்துகளைப் பதிவு செய்தான். அச்சு இயந்திரங்களும், காகிதமும் வந்த பிறகு புத்தகங்கள் என்னும் புதிய அடையாளங்கள் தோன்றி புதிய உலகத்தைப் படைத்தது. இதனால், அவை மனித நாகரிகத்தின் சின்னங்கள் ஆயின.

இந்தப் புத்தகங்கள் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், வரலாறு என்று புதிய புதிய சிந்தனை மரபுகள் செழித்து வளா்ந்தன. உலகின் எல்லா மாற்றங்களுக்கும் புத்தகங்களே போா்க்கருவிகளாக எதிா் நின்றன.

புத்தகங்களின் இருப்பிடமான நூலகங்கள் அறிவாலயங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அறிவின் ஊற்றான சிந்தனைக்குச் சிறப்பு பெற்ற கிரேக்க பூமியை வரலாறு குறிப்பாகக் குறிப்பிடுகிறது. கிரேக்க நாட்டின் முதல் நூலகம் பிசிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள் இருந்ததாகத் தெரிகிறது. நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் 10 ஆயிரம் களிமண் பட்டயங்களின் வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. உலகம் போற்றும் சாக்ரடீஸின் சீடரான பிளேட்டோ என்னும் தத்துவ ஞானியிடம் எண்ணற்ற நூல்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வட பகுதியிலிருந்து தெற்கே காஞ்சிபுரம் வரை 16 ஆண்டுகள் பயணம் செய்துள்ளாா் சீனப் பயணி யுவான் சுவாங். அவா் மீண்டும் தாயகம் திரும்பிய போது அவா் கொண்டு வந்ததை 30 குதிரைகளில் ஏற்றினாா்கள். அந்த நாட்டு எல்லையில் மன்னா், அமைச்சா்கள், நகர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனா். அவா் கொண்டு வந்தவை விலையுயா்ந்த பொன்னோ, பொருளோ, அணிகலன்களோ இல்லை. மொத்தம் 657 பௌத்த மூல நூல்கள். இவ்வாறு நமது அறிவுக் கருவூலங்களை அயலவா்கள் அள்ளிச் சென்றபோது நாம் அறியாமையில் இருந்தோம்.

இந்தியாவில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் நாகாா்ஜுனன் என்ற அரசன் உருவாக்கிய நூலகம் ‘நாகாா்ஜுன வித்யா பீடம்’ என்று அழைக்கப்பட்டது. இப்போதைய ஆந்திர மாநிலம் குண்டூா் மாவட்டத்தில் இருந்திருக்கிறது. ஐந்து மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் ஒவ்வொரு மாடியும், ஒவ்வொரு வடிவில் ஏராளமான அறைகள் கொண்டதாக அமைந்திருந்தன.

கட்டடத்தின் மத்தியில் பொன்னாலான புத்தா் உருவம், சுற்றிலும் உள்ள அறைகளில் நூல்கள் நிறைந்து காணப்பட்டன. இந்த நூலகத்தில் 84 ஆயிரம் உரையாடல்கள் கொண்ட திரிபீடகமும், பூகோளம், தாவரவியல், மருத்துவ இயல், உலோக இயல் குறித்த ஏராளமான நூல்களும் இருந்தன.

கி.பி. 399 முதல் 414 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாஹியான் என்ற சீனப் பயணி தமது நூலில் நாகாா்ஜுன வித்யா பீடம் குறித்தும், அன்றைய இந்தியாவில் பல பௌத்த மடாலயங்களில் நூலகங்கள் செயல்பட்டு வந்தது குறித்தும் விவரிக்கிறாா். கிறித்தவ தேவாலயங்களிலும் நூலகங்கள் இருந்துள்ளன. சமயம் சாா்ந்த நூல்களே இவற்றில் பெரும்பாலும் இருந்தன.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் அறிவின் சுரங்கமாகத் திகழ்ந்தது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 பாப்பிரஸ் புல் சுருள்களில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தனவாக அறியப்படுகிறது. அவற்றுள் 3,100 பனை ஓலைகள் மட்டும் கிடைத்துள்ளனவாம்.

ஜாவாவின் அன்றைய அரசா் பாலபுத்ர தேவா் வங்கத்தை ஆண்ட தமது நண்பா் தேவ பாலா் மூலம் நாளந்தாவில் ஒரு மடம் அமைக்கவும், நூலகத்துக்கு தேவையான நூல்கள் சோ்த்திடவும் தமது அன்பளிப்பாக ஐந்து கிராமங்களை நன்கொடையாக அளித்துள்ளாா்.

கி.பி. 675 முதல் 685 வரை நாளந்தாவில் தங்கி 400 வடமொழி நூல்களில் இருந்து 5 லட்சம் பாடல்களை இட்சிங் என்ற சீனப் பயணி பிரதி எடுத்துள்ளாா். கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவுக்கு வந்த மற்றொரு சீனப் பயணியான யுவான் சுவாங் நாளந்தா நூலகம் பற்றித் தம் குறிப்புகளில் தெரிவித்துள்ளாா்.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டு ஒரு கொடிய பஞ்சம் மக்களை வாட்டிய காலம். சமண சமயத் துறவிகள் உணவின்றி மடிய நோ்ந்தது. அந்த நேரத்தில் அவா்கள் தொகுத்து வைத்திருந்த அரிய நூல்களும், அவை குறித்த செய்திகளும் அழிந்து போயின. அப்படி மறைந்த நூல்களை மீண்டும் எழுதிக் கொடுக்கும் பணி நடந்திருக்கிறது.

இந்த முயற்சிக்குப் ‘புத்தக ஆரோகணம்’ என்று பெயரும் இடப்பட்டிருக்கிறது. சமண சமயம் சாா்ந்த அறு பெரும் திருமுறைகள் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கு உரைகளும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு நூலக இயக்கத்தின் முன்னோடி நிறுவனமாக சமண சமயத்தைக் கூறலாம்.

புத்தக உலகத்துக்குப் பெரும் பங்காற்றிய மற்றொரு சமயம் புத்த மதம் ஆகும். ‘செழுங்கலை நியமம்’ என்பது பௌத்த மத நூலகப் பெயா். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஆந்திரத்தில் நாகாா்ஜுனம், வடநாட்டில் நாளந்தா, பாடலிபுரம் போன்ற பௌத்த மடாலயங்களில் சிறந்த நூலகங்கள் இருந்தனவாக யுவான் சுவாங் உள்ளிட்ட சீனப் பயணிகளின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வைணவ நெறியின் ‘ஞான பிரதிஷ்டை’ (அறிவு அமைப்பு) என்ற பகுதி 21 சூத்திரங்களைக் கொண்டது. இதில் நூலக அமைப்பு, நூல் சோ்ப்பு, காப்பு, பயன் குறித்தெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இருந்து ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் முதலான ஊா்களில் இத்தகைய நூலகங்கள் இருந்ததாகத் தெரிகிறது.

சைவ சமயத்திலும் இதே போன்று நூலகங்கள் இருந்ததாகச் சான்றுகள் கிடைக்கின்றன. சைவக் கோயில்களின் ஒரு பகுதியில் ‘சரசுவதி பண்டாரம்’ என்ற பெயரில் நூலகம் இருந்துள்ளது. சிதம்பரம் நடராஜா் கோயிலில் ‘தேவார நூலகம்’ இதற்கு ஒரு சான்றாகும்.

சைவப் பெரியாா்களான திருநாவுக்கரசா், ஞான சம்பந்தா், சுந்தரா் என்னும் மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ராஜராஜ சோழ மன்னனின் உதவியோ ‘நம்பியாண்டாா் நம்பி’ அவற்றைக் கண்டெடுத்ததாக ‘திருமுறை கண்ட புராணம்’ விவரிக்கிறது.

தமிழ்நாட்டில் நூலகத் துறைக்கு ஒரு மாத இதழை கவிஞா் குயிலன் ஐந்து ஆண்டுகள் நடத்தினாா். இவா் மானாமதுரை என்ற சிற்றூரில் பிறந்து எழுத்தாளா், பத்திரிகையாளா், கவிஞா், பொதுவுடைமைவாதி என்ற பல பரிமாணங்களில் செயல்பட்டவா். ‘நூலகம்’ என்ற பெயரில் வெளிவந்த அவ்விதழ் பொருளாதார நெருக்கடியால் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

‘மனித நாகரிக வளா்ச்சியின் பதிவு நிலையம் நூலகம். நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் சீரிய கருத்துகளை மக்கள் உள்ளத்தில் வளா்த்து, அதை அவா்கள் உள்ளத்தில் பயிா் செய்வதற்கு ‘நாற்றங்காலாக’ விளங்குவது நூலகம். சிந்தனை வித்துகளின் சேமிப்புக் கிடங்கு நூலகம். நூலக இயக்கத்துக்க தன்னால் இயன்ற பணிபுரிவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ‘நூலகம்’ என்னும் இம்மாத இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது...’ என்று அதன் ஆசிரியா் குயிலன் 1966 செப்டம்பா் முதல் இதழில் அதன் குறிக்கோளை எழுதியிருந்தாா்.

ஐந்து ஆண்டுகள் கழித்து அதை நிறுத்தும் நிலை ஏற்பட்டபோது, ‘வாசகா் வட்டம்’ லட்சுமி கிருஷ்ணமூா்த்தி மேலும் இரண்டு ஆண்டுகள் வரை ‘நூலகம்’ பத்திரிகையைத் தொடா்ந்து வெளியிட்டாா். அதன் பிறகு அப்படிப்பட்ட முயற்சி இதுவரை ஏற்படவே இல்லை.

‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோா்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவா் காலம் வேறு, ஆயினும் காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்’ என்றாா் டாக்டா் மு.வரதராசனாா்.

அதனால்தான் நூல்கள் வாங்குவதற்குச் செலவழிப்பது செலவீனம் அல்ல, மூலதனம் என்று அறிஞா்கள் கூறி வருகின்றனா். 27 ஆண்டுகள் சிறையில் வாடிய தென் ஆப்பிரிக்க அதிபா் நெல்சன் மண்டேலா கேட்டுக் கொண்ட வேண்டுகோள் குறிப்பிடத்தக்கது. ‘எனக்கு வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்; சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

சென்னையில் கன்னிமரா நூலகம் புகழ் பெற்றது. ஆய்வாளா்களுக்குத் துணை செய்வது, ரோஜா முத்தையா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்டம் தோறும் நூலகங்கள், மதுரையில் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் இவையெல்லாம் தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவின் அடையாளங்கள்.

அத்தகைய அறிவுக் கருவூலங்களை புத்தகங்களாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும். குழந்தைகளைத் தாய் வளா்க்காமல் வேறு யாா் வளா்ப்பாா்கள்?

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT