சித்திரிப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்குவோம்!

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சலுகை அல்ல. அது அவர்களின் அடிப்படை உரிமை.

சங்கீதா

இந்தியச் சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலை என்பது ஒரு முரண்பாடான சித்திரமாகவே உள்ளது. ஒருபுறம் விண்வெளி ஆய்வுவரை பெண்கள் தடம் பதித்தாலும், மறுபுறம் அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அண்மைக்காலத் தரவுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சுமார் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை சிறுமிகளுக்கு எதிராகவே நடைபெறுகின்றன. அதிலும், 90 சதவீதத்துக்கும் அதிகமான பாலியல் அத்துமீறல்கள் உறவினர்கள், அண்டை வீட்டார்கள் போன்ற அறிமுகமானவர்களாலேயே நிகழ்கின்றன.

வீட்டுக்குள்ளும், பொது இடங்களிலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கின்றன. போக்ஸோ போன்ற சட்டங்கள் வலுவாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் சமூகத்தில் ஒருவித பயமின்மையை உருவாக்குகிறது.

இன்றைய குழந்தைகள் இணையத்தோடு பிணைந்துள்ளனர். ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் பெண் குழந்தைகளின் மனநலனைச் சிதைக்கின்றன. தனிப்பட்ட புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.

கல்வி ரீதியாக நகர்ப்புறங்களில் மாற்றம் தெரிந்தாலும் கிராமப்புறங்களில் இன்றும் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் மேல்நிலைப் பள்ளிகளில் கணிசமாக உயர்கிறது. மாதவிடாய் காலங்களில் பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதி இல்லாமை, நீண்ட தொலைவு பள்ளிகளுக்குச் செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சம் மற்றும் வீட்டு வேலைப் பளு ஆகியவை ஒரு திறமையான மாணவியைப் படிப்பிலிருந்து அந்நியப்படுத்துகின்றன. கிராமப்புறங்களில் ஒரு சிறுமி பருவமடைந்தவுடன் பாதுகாப்பைக் காரணம் காட்டி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலை இன்னும் தொடர்கிறது.

பல நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நிலையில், இளைய சகோதரர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெண் குழந்தைகளின் மேல் சுமத்தப்படுகிறது. இதனால், அவர்களின் பள்ளி நேரம் வீட்டு வேலைகளுக்குப் பலியாகிறது. பெண் குழந்தைகளுக்கு வெறும் ஆரம்பக் கல்வியோடு நிறுத்தாமல், அவர்களுக்குத் தொழில்முறை, தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

ஆண் குழந்தைக்கு ஒருநீதி, பெண் குழந்தைக்கு ஒரு நீதி என்ற பாரபட்சம் உணவிலும் தொடர்கிறது. இதனால், இந்தியப் பெண் குழந்தைகளில் பெரும்பாலானோர் ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி 57 சதவிதத்துக்கும் அதிகமான வளரிளம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளிலேயே தற்காப்புப் பயிற்சிகளைக் கட்டாயமாக்க வேண்டும். உடல் ரீதியாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும். ஒவ்வொரு பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு தனி கழிப்பறை வசதிகளும், நாப்கின் வழங்கும் மற்றும் எரிக்கும் இயந்திரங்களும் போர்க் கால அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும். இது மாதவிடாய் கால இடைநிற்றலை கணிசமாகக் குறைக்க உதவும்.

ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கவும். அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவம் என்பது வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும்.

பெண்களுக்குத் தங்களுக்குரிய சட்ட உரிமைகள் அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குற்றங்கள் நடைபெறும்போது நடைபெறும்போது தயக்கமின்றிப் புகாரளிக்கும் துணிச்சலை வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பு, நிதி மேலாண்மை குறித்த அறிவை ஊட்ட வேண்டும். சமூக வலைதள பாதிப்புகள், பாலியல் அச்சுறுத்தல்களைக் கையாள ஒவ்வொரு பள்ளியிலும் பெண் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். நீண்ட தொலைவு கிராமங்களில் இருந்து வரும் மாணவிகளுக்கு பிரத்யேகப் பள்ளிப் பேருந்துகள் அல்லது மிதிவண்டி வழங்கும் திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சலுகை அல்ல. அது அவர்களின் அடிப்படை உரிமை. அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு தடையையும் தகர்ப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் கடமை. வெறும் முழக்கங்களோடு நின்று விடாமல், செயல்வடிவில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகை உறுதி செய்வோம்.

'ஒரு ஆணுக்குக் கல்வி புகட்டினால் அது ஒரு நபருக்கான கல்வி: ஆனால், ஒரு பெண்ணுக்குக் கல்வி புகட்டினால் அது ஒரு தலைமுறைக்கான கல்வி என்ற முதுமொழி வெறும் அலங்காரச் சொல் அல்ல; அது ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கான சூத்திரம்.

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட பெண்களே மகாகவி பாரதியின் கனவு. அந்தப் புதுமைப் பெண்களை உருவாக்க பெண் குழந்தைகளுக்கு வானத்தைப் பரிசளிக்க வேண்டாம்: அவர்கள் சிறகுகளை ஒடிக்காமல் இருந்தாலே போதும். அவர்கள் தாமாகவே உயரே பறப்பார்கள். இன்றைய சிறுமிகளே நாளைய இந்தியாவின் ஆளுமைகள் என்பதை உணர்ந்து, அவர்களுக்குப் பாதுகாப்பான, சமத்துவமான உலகைப் படைப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT