அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சர்வதேசச் சட்டங்களைவிட தமது மனசாட்சியும் சிந்தனையும்தான் தனது அதிகாரத்தைத் தீர்மானிக்கும்' என்று 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் தலைவர் தனது தேசத்தின் நலனை முன்னிறுத்துவது தர்க்கரீதியாகச் சரியானதாக இருக்கலாம்.
ஆனால், அந்த நலன் என்பது பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட சர்வதேச உறவுகளையும் அறநெறிகளையும் காப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் அதிகாரக் குவியலும் வல்லாதிக்க மனப்பான்மையும் உலகளாவிய அமைதிக்குச் சாதகமான முடிவுகளை என்றும் தந்ததில்லை என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், "எனது சொல்லே சட்டம்; எனது தேசத்தின் நலனே பிரதானம்' என்று முழங்கிய பல பேரரசுகள் கால ஓட்டத்தில் சிதைந்து போனதைக் காண முடிகிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்ற நெப்போலியன் போனபார்ட் முதல், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகையே அச்சுறுத்திய சர்வாதிகாரிகள் வரை அனைவரும் ஒரு கட்டத்தில் சர்வதேச சமநிலையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளனர்.
தற்காலிகமான பல ராணுவ வெற்றிகள் நிலையற்றவை என்பதையும், அந்தந்த நாடுகளுக்கே அவை இறுதியில் பெரும் பொருளாதாரச் சரிவையும், சமூக வீழ்ச்சியையுமே பரிசாகத் தந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகாரம் என்பது பிறரை அடக்குவதற்கான கருவி அல்ல; அது பொது அறத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு தார்மிகப் பொறுப்பாகும். இரண்டாம் உலகப் போரின் கோர விளைவுகளால் பாதிக்கப்பட்ட உலகம், மீண்டும் ஒருமுறை அத்தகையதொரு பேரழிவைச் சந்திக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் உருவானவையே ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளும் பல்வேறு பன்னாட்டுச் சட்டங்களும் ஆகும். வலிமையுள்ள நாடுகள் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தடுக்கவும், சிறிய நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்த விதிமுறைகள் ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.
சர்வதேசச் சட்டங்கள் என்பது மனித இனம் ஒரு நாகரிகப் பாதையில் பயணிப்பதற்காகச் சிந்தித்து உருவாக்கப்பட்ட பொதுவான அறநெறிகள். இவற்றை உணர்ந்து செயல்படுவதன் மூலமே உலகம் மீண்டும் ஒரு பெரும் போர்ச் சூழலுக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியும். ஒரு நாடு தனது அதிகார பலத்தைக் கொண்டு சர்வதேச நடைமுறைகளை மீறத் தொடங்கினால், அது மற்ற நாடுகளையும் அணு ஆயுதப் போட்டி, ஆக்கிரமிப்பு மனப்பான்மை எனத் தவறான பாதையில் செல்லத் தூண்டும். உலக அமைதியைச் சீர் குலைக்கும் இத்தகைய சூழல் எழாமல், வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு பாதுகாப்பான பூமியை உறுதி செய்ய வேண்டியது உலகத் தலைவர்களின் முதன்மைக் கடமையாகும்.
பிரபஞ்சப் பெருவெளியில் பூமி என்பது ஒரு மிகச் சிறிய நீலப் புள்ளி மட்டுமே. இந்தச் சிறு புள்ளியில் வாழும் மனித இனம், தங்களுக்குள் குறுகிய எல்லைகளை வகுத்துக் கொண்டு அதிகாரத்துக்காக மோதிக்கொள்வது என்பது அறிவார்ந்த செயல் அல்ல. இதைத்தான் பாரதப் பண்பாடு பல நூறு ஆண்டுகளாக "வசுதைவ குடும்பகம்' - அதாவது உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்தின் மூலம் போதித்து வருகிறது. தலைமைப் பண்பு என்பது அதிகாரத்தை விரிவுபடுத்துவதில் இல்லை; மாறாக, மக்களின் இதயங்களை அன்பால் இணைப்பதில் இருக்கிறது. பூவிலிருந்து வரும் நறுமணம் எப்படித் தன்னலம் பாராமல் அனைவருக்கும் பொதுவானதோ, அதுபோலத் தலைவர்களின் சிந்தனை உலகளாவிய நன்மைகளைப் பயப்பதாக அமைய வேண்டும்.
"எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே' என்ற தாயுமான அடிகள், திருவருளின் சாயலே உயிரிரக்கம் என்பதை உணர்த்துகிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களைப்போலவேபிற உயிர்களையும், பிற தேசத்து மக்களையும் கருதிச் செயல்பட வேண்டும் என்ற தார்மிகக் கடமையை இது நினைவூட்டுகிறது.
தன்னுயிர் காக்கப் பிற உயிரைக் கொல்லும் பண்பு ஒருபோதும் தலைமைக்கு அழகல்ல. பொறுப்பானவர்கள் சுயநலப் போர்வையில் சிக்கினால், அவர்களைப் பின்பற்றும் மக்களின் மனநிலையும் அதே போன்ற வன்மத்தையும் குறுகிய மனப்பான்மையையும் நோக்கித் தள்ளப்படும்.
இன்றைய உலகில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய நுட்பமான சூழலில், மனிதர்களின் மனசாட்சி என்பது அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய மனிதாபிமான விதிகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
போரே நிரந்தரத் தீர்வு என்றும், வலிமையே வாழ்வின் விதி என்றும் எண்ணுவது மனித நாகரிகத்தின் முதிர்ச்சி அல்ல. நிதானமும் அன்பும் கொண்ட ராஜதந்திர ஆலோசனைகளே சமுதாயத்தை உண்மையான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கச் செய்யும்.
அதிகாரம் என்பது காலத்தின் மாயை; அது நிலையற்றது என்பதை உணர்வதே மனித வாழ்வின் உயரிய நோக்கம். நாம் கொண்டிருக்கும் அன்பும் அறமும் ஏற்படுத்தும் அமைதியின் நிறைவே காலத்தைக் கடந்து நம்மோடு நிலைக்கும்.
சுயநல நோக்கில் எடுக்கப்படும் முடிவுகள் குறுகிய கால வெற்றியை உருவாக்கலாம்; ஆனால், அத்தகைய தலைமை இறுதியில் தனிமைப்படுத்தப்படுவதை
வரலாற்று ஏடுகள் உணர்த்துகின்றன. எனவே, சர்வதேசச் சட்டங்களை மதிப்பதும், உலக நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
பாரதப் பண்பாடு வலியுறுத்தும் பேரன்பும், பெருங்கருணையும், பொதுநல நோக்குமே உலகைச் சூழ்ந்துள்ள அதிகார இருளைப் போக்கும் ஒற்றைச் சுடராக உள்ளது. தலைமை என்பது ஆள்வதில் இல்லை, அரவணைப்பதில் இருக்கிறது என்பதை மனிதன் உணர்ந்து செயல்படுவதே இந்தப் பூமியை அமைதியான வாழிடமாக மாற்றும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.