முகப்பு
தமிழ்மணி

தோழி என்னும் கதைசொல்லி

சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்திலும் அடிநாதமாக ஒரு கதை பொதிந்து இருப்பதை அறிந்து கொள்ளமுடியும்.

Updated On : 8 மார்ச், 2026 at 11:58 AM
கோப்புப் படம்
பகிர்:

முனைவர் ப. சுடலைமணி

சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்திலும் அடிநாதமாக ஒரு கதை பொதிந்து இருப்பதை அறிந்து கொள்ளமுடியும். கதையமைப்பு கொண்ட சங்கப் பனுவலில் ஓர் எடுத்துரைப்பு இழையோடுகிறது. ஓர் எடுத்துரைப்பு இருக்கிறது என்றால், அஃது ஒரு கதையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கதை இருக்கிறது என்றால் புனைகதை கூறுகளும் தன்னியல்பாகவே உருப்பெற்றுவிடும்.

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, பாணன் போன்றவர்களால் கதை நிகழ்ச்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. நிகழ்ச்சி நடக்கும் போதே உடனிகழ்வாகக் கதைக்களமும் நிர்ணயிக்கப்படுகிறது.

அகநானூற்றுப் பாடல்களில் கதைத் தன்மை இருப்பதை எளிமையாக இனம் காணமுடிகிறது. அம்மூவனார் எழுதிய நெய்தல் திணை சார்ந்த பாடலில் (10) இருக்கும் எடுத்துரைப்பியல் சார்ந்த கூறுகளை இங்கே காணலாம். இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி கூறியதாக அமைந்துள்ள பாடலில் கதைத்தன்மை அதிகமாக இருக்கிறது.

தலைவன் கடற்கரைச் சோலையில் இரவு நேரத்தில் யாரும் அறியா வண்ணம் தலைவியைச் சந்தித்து மீள்கிறான். அப்போது, தலைவன் செல்லும் வழியில் எதிரிடையாகத் தோழி வருகிறாள். தோழி தலைவனிடம் நேரிடையாகப் பேசுகிறாள்.

தலைவன் இரவு குறியிடத்து வந்து தலைவியைச் சந்திப்பது களவொழுக்கம் என்று கூறப்பட்டாலும் தோழி இதைத் தடுத்து நிறுத்த விரும்புகிறாள்.

'கண்டோர் இகழ்ந்து பேசும் களவெழுக்கிலே ஒழுகி, இக்களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணா நின்றீர்' என்று தலைவனிடம் கூறுகிறாள்.

தலைவனும் தலைவியும் மனதொருமித்து அன்பு செய்கிறார்கள். தலைவி தலைவனுடன் திருமண உறவை விரைவாக ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறாள். தோழி, தலைவியின் மூலமாக அனைத்தையும் அறிந்துகொள்கிறாள். தலைவனுடன் தலைவியைத் திருமணத்தில் இணைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறாள். இதை கவித்துவமிக்க கதையாக அம்மூவனார் உருவாக்கியுள்ளார்.

வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய,

மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த,

முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,

புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!

'இரவுக்குறியிடத்துத் தலைவியை யாரும் அறியாமல் கூடிவிட்டுப் பிரிந்து செல்கிறாய். நெய்தல் பூவைப் போன்ற இவள் கண் வருந்தி அழும்படி இவளைப் பிரிந்து செல்லுதலை நீ நினைத்ததால் யாரும் துணியாத செயலினைச் செய்யத் துணிந்தனை' என்று கூறுகிறாள்.

அதாவது, தலைவிக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தன்மைக்கூற்று வாயிலாக விளக்குகிறாள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட காரணத்துக்காக ஒருவருக்கு என்ன நடந்தது என்பதை ஒருவர் விவரிப்பதே எடுத்துரைப்பு என்று ஜேம்ஸ் பீலன் கூறும் கருத்து இங்கு கவனம் பெறுகிறது.

தோழியைக் கதைசொல்லியாக உருமாற்றம் செய்துவிடுகிறார். இனி கதைக்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தவேண்டும். அதற்குக் காட்சி

சார்ந்த ஒரு நிகழ்வு தேவைப்படுவதாகப் புலவர்

கருதுகிறார். நெய்தல் நிலக் காட்சியை அழகாகச் சித்திரித்துவிடுகிறார்.

கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும்

கொண்டலொடு

குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்

பழம் திமில் கொன்ற புது வலைப் பரதவர்

மோட்டு மணல் அடைகரைக்

கோட்டுமீன் கெண்டி,

மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்.

'வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே கீழ்த்திசைக் காற்றோடு கடலின் அலைகளும் உடைக்கும் மணல்மேட்டில் கிடக்கும் பழைய படகின் சிதைவினைப் போக்கிய புதிய வலைகளைக் கொண்ட பரதவர்கள், உயர்ந்த மணல்மேட்டில் வந்து ஒதுங்கும் சுறாமீனைக் கைக்கொண்டு,

பலருக்கும் பகுத்தளிக்கின்ற வலிமை மிகுந்த

தொண்டிப் பட்டினத்தைப் போன்ற இவளது

அழகு இவளுக்கே உரியதாக இருக்கும்படி உன் ஊருக்குக் கொண்டுபோதல் வேண்டும்' என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். நெய்தல் நிலக் காட்சி வாயிலாக, வாசகனின் மனத்தில் ஒரு கதையை வடிவமைக்கிறார்.

தோழியானவள் மிகச் சிறந்த கதைசொல்லியாகிறாள். தோழி தலைவியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியை விவரித்துச் சொல்வதை எடுத்துரைப்பு என விளங்கிக் கொள்ளலாம். இறுதியாக வாசகனின் மனத்தை விட்டு நீங்காமல் நிற்பதை கதை என்று புரிந்துகொள்ளலாம். ஆகையால், அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல் முழுமையான கதை எடுத்துரைப்பைக் கொண்டு விளங்குகிறது என்று கூறிவிடலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →