முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

'அழுவதற்கு சொந்தம் தேவையில்லை. அன்பிருந்தாலே போதும்' என்று உணர வைத்தவர்

அம்மா இல்லாத முதல் நாள் நேற்று. இப்படி ஒரு நாளை சந்திப்பதும், கடப்பதும் வேதனையானது. வரலாற்றில் அடிக்கடி நினைத்துப் பார்க்கின்ற தினம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:52 PM
பகிர்:


அம்மா இல்லாத முதல் நாள் நேற்று. இப்படி ஒரு நாளை சந்திப்பதும், கடப்பதும் வேதனையானது. வரலாற்றில் அடிக்கடி நினைத்துப் பார்க்கின்ற தினம்.

இன்றைய தினத்தின் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் மனத்தில் அழியா இடம் பிடிக்கப்போகிறது. பல குடும்பங்கள் நேற்று சமையல் ஏதும் செய்யாமல், சாப்பிடாமல் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தது. பொதுவாக, தனக்கு பிடித்தவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்வது சகஜம். ஆனால், அம்மாவாக ஏற்றுக் கொள்வது செல்வி ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் ஜகத்தை ஆளுவார்', என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர் செல்வி ஜெயலலிதா. அவரை யாரும் ஜெயிக்க முடியாது.
நமக்கு மகாபாரதம் தெரியும். குருட்சேத்திர போரும் தெரியும். ஒன்பதாம் நாள் இரவு. பீஷ்மர் பாசரையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் வரை பாண்டவர் சேனைக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவருக்கு, திடீரென்று வாழ்க்கையின் மீதும், போர் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ‘எல்லாம் போதும்', என்று ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை சந்திக்க வந்த யுதிஷ்ட்ரனிடம் தன்னை கொல்லும் உபாயத்தை சொன்னார். அந்த உபாயத்தினால் பத்தாம் நாள் போரில் தன்னை மாய்த்துக் கொண்டார். மரணம் தோல்வியை நிர்ணயிக்கிறது என்பது உண்மையல்ல. மகாபாரதத்தில் தன் இஷ்டப்படி மரணம் நிகழ்ந்ததால் அது பீஷ்மருக்கு கிடைத்த வெற்றி. ஜெயலலிதாவும் ஒரு பீஷ்மர்தான்.

அவருக்கு ‘போதும்' என்று தோன்றியது, நம்மிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டார். அவரை மீறி யாரும் அவரை வென்றுவிட முடியாது. இறப்பு என்பது யமனுக்கு அவர் கொடுத்த பரிசு. இனி இப்படிப்பட்ட இன்னொரு ஒரு போராளியை நம் வாழ்நாளில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஜெயலலிதா அவர்கள் எந்த விழாவில் பேசினாலும் ஒரு குட்டிக்கதை சொல்லுவார். அப்படி ஒரு நாள் அவர் சொன்ன கதை நான் எழுதியது. அடுத்த நாள் செய்தித் தாளை பார்த்த போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. குட்டிக்கதை மூலம் சொல்ல வந்த விஷயத்தை எளிதாக புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியவர்.

இவரைப் பற்றி இன்று பெருமையாக பேசும் பலர் தனிப்பட்ட முறையில் இவரை அழிக்க நினைத்தவர்கள். அவர் சந்தித்த பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? இவர் மீது பதினாறு வழக்குகள் போடப்பட்டது. பெரும்பாலும் உப்புசப்பில்லாத பொய் வழக்குகள். வழக்கு, தீர்ப்பு என்று பல விஷயங்கள் இங்கு விவாதிக்க முடியாதது. அதை ஒரு புறம் வைப்போம். சட்டமன்றத்தில் தாக்கப்பட்டார். இவர் காரின் மீது லாரி மோதியது போன்று பல குமுறல்களை அடுக்கலாம். முதலமைச்சராக எந்த விஷயத்தை இவர் செய்தாலும் அதை கோர்ட் மூலம் இடைஞ்சல் செய்வதை வேலையாக செய்து கொண்டிருந்தார்கள். அனைத்திலும் வெற்றி கண்டார்.

இரண்டு வயதில் தந்தையை இழந்தவர். அம்மா மட்டுமே அவருக்கு உலகமாக இருந்திருக்கிறார். சந்தியாவின் மகளாய் பிறந்தவர், இந்தியாவின் மகளாய் மறைந்திருக்கிறார். அழுவதற்கு சொந்தங்களே இல்லை அவருக்கு என்று நினைத்தவர்களுக்கு, அவரின் இழப்பு “அழாதா நெஞ்சங்களே இல்லை” என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. ‘அழுவதற்கு சொந்தம் தேவையில்லை. அன்பிருந்தாலே போதும்' என்று உணரவைத்தவர் அவர்.

சென்ற வருடம் டிசம்பர் 5 சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது. இந்த வருடம் டிசம்பர் 5, உலகமே கண்ணீரில் மிதக்கிறது.

மற்றவர்களுக்கு எப்படியோ, தெரியாது. என்னைப் பொறுத்தவரை, அவர் மரணம் என்னிடத்தில் ஒரு தனிப்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. இதுவும் கடந்து போகும் என்று சொல்வார்கள். இந்த சோகமும், அழுத்தமும் கடந்து போவதை நான் விரும்பவில்லை.

இன்று அம்மா நம்மிடையே இல்லாத நாள் மட்டுமல்ல, அம்மாவோடு இருக்கும் கடைசி நாள் என்பது மனத்தை அழுத்தியது யதார்த்தம்.

சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.