சிறப்புக் கட்டுரைகள்

‘சோ’ ஒரு அரசியல் தீர்க்கதரிசி மட்டுமல்ல ‘அறிவார்ந்த ரவுடி’யும் தான்!: ராம்நாத் கோயங்கா!

கார்த்திகா வாசுதேவன்

மறைந்த மூத்த பத்திரிகையாளர் ‘சோ’ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்தாபகர் ‘ராம்நாத் கோயங்கா’வுடன் நெருங்கிப் பழகிய நட்புகளில் ஒருவர். 1976 ல் இந்திராவின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது அதைக்  கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் எழுந்த பல்லாயிரக் கணக்கான கரங்களில் இவர்கள் இருவரின் கரங்களும் இணைந்திருந்தன. கோயங்கா சோ வுடன் கருத்து ரீதியாக உடன்பட்டிருந்த நிலையிலும் சரி, முரண்பட்ட நிலையிலும் சரி அவரது பன்முகத் திறன் மீது தான் கொண்ட மரியாதையையில் எப்போதும் விகல்பமின்றியே இருந்தார். பிற்பாடு இந்திராவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ராம்நாத் கோயங்கா வி.பி.சிங்கின்  தேசிய முன்னணிக் கட்சிக்கு தனது பலத்த ஆதரவைத் தந்த போது சோ அப்படியே அவருக்கு நேரெதிர் திசையில் நின்று வி.பி. சிங்கை கடுமையாக எதிர்த்தார். ஆனால் காலம் மாறியது. மீண்டும் கோயங்காவும், சோ வும் ஒத்த கருத்துடையவர்களாக மாறும் நாள் வெகு சீக்கிரத்தில் வந்தது. 
இதில் கோயங்கா வியப்புறும் விசயம் ‘தான் ஆசிரியராக இருந்த‘துக்ளக்’ பத்திரிகையில் அரசியல் கேலிக்கூத்துகளையும், சமூக சீர்கேடுகளையும் நையாண்டி செய்து கேலிச் சித்திரங்கள் வெளியிடும் போதும் சரி, கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் வெளியிடும் போதும் சரி, சோ யாரையுமே நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதே இல்லை. எல்லோருக்கும் ஒரே விதமான நேர்மையான விமரிசனம் தான். தவறென்றால் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது நேரடியாக சுட்டிக் காட்டி எழுதுவார். யாருக்காகவும், எதற்காகவும் சோ தனது எழுத்திலோ, கருத்திலோ எப்போதும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அந்த வகையில் அவர் பலமுறை ‘சோ’ வை ‘அறிவார்ந்த்த ரவுடி’ என்று செல்லப் பெயரிட்டு குறிப்பிட்டதுண்டு. இதில் எவருக்கும் மாற்றுக் கருத்துச் சொல்ல வழியின்றி தனது இறப்பு வரையிலும் சோ எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதை தனது துக்ளக் இதழில் எழுதிக் கொண்டு தான் இருந்தார்.

சோவின் தேர்ந்த அரசியல் ஞானம் பின்னாட்களில் அவரை தீர்க்கதர்சனத்துடன் கூடிய மிகச் சிறந்த அரசியல் விமரிசகராக்கியது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஒரு சமபவத்தை குறிப்பிடலாம். கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் கட்சிக் கணக்கு வழக்குகளில் கருத்து வேறுபாடு வந்து கலைஞர் தி.மு.க வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதாக அறிவிக்க இருந்த செய்தி சோ வுக்கு கவிஞர் கண்ணதாசன் மூலமாக முன்னரே தெரியவருகிறது. அப்போது சோ கவிஞரிடம் “கவிஞரே எம்.ஜி.ஆரை தி.மு.க வில் இருந்து நீக்கி தவறான முடிவெடுத்து விடாதீர்கள். அது தி.மு.க வின் நீண்ட கால வெற்றிக்கு ஆரோக்கியமானதில்லை, எம்.ஜி.ஆர் ரசிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கலைஞரிடம் போய்ச் சொல்லுங்கள்.” என்றார். சோ சொன்னதை கலைஞர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதற்கான பலனை ஒரே மாதத்தில் கலைஞரும், கவிஞரும் உணரும் நிலை வந்தது. இதைத் தான் அரசியல் தீர்க்கதரிசனம் என்கிறார்கள். அது சோ வுக்கு மிகுதியாகவே இருந்தது.

source: ENS

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT