சிறப்புக் கட்டுரைகள்

ஓய்வூதியமா? ரேஷன் அட்டையில் பெயரா? சிக்கலை எதிர்நோக்கும் முதியோர்கள்

மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் அல்லது ரேஷன் அட்டையில் பெயர், இதில் ஏதேனும் ஒன்று மட்டுமே முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு நீடிக்குமென கூறப்படுகிறது.

எம். அருண்குமார்

மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் அல்லது ரேஷன் அட்டையில் பெயர், இதில் ஏதேனும் ஒன்று மட்டுமே முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு நீடிக்குமென கூறப்படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் பெறுவதில் முறைகேடுகள் நடந்ததால் அரசு விரிவான ஆய்வு நடத்தி, முறைகேடாக பெற்றவர்களுடைய ஓய்வூதியத்தை நிறுத்தியது.
ஆய்வில் நடந்த சில குளறுபடி காரணமாக, தகுதிபடைத்த பலரது ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது. பின்னர், தகுதியானவர்கள் மீண்டும் மனு செய்தால் ஆய்வு செய்த பிறகு வழங்கப்படுமென அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையடுத்து தகுதிபடைத்தவர்கள் சிலர் மீண்டும் மனு செய்தனர். இதையடுத்து சிலருக்கு மட்டும் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் ஆதார் அட்டையினர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் முதியோர் ஓய்வூதியத்துடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதனால் ஆதார் அட்டை வைத்திருக்கும் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையை பதிவு செய்து செய்தனர்.
போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து அதனை ரத்து செய்வதற்காக குடும்ப அட்டைகளுடன் ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தற்போது தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.
இவ்வாறு முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதும், குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதாலும் தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் சிக்கலை சந்திக்க உள்ளனர்.
முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப அட்டையை ஆதாரமாகக் காட்டி தான் முதியோர் ஓய்வூதியத்துக்கு மனு செய்து அதனை பெற்று வருகின்றனர்.
தற்போது குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணையும், ஓய்வூதியத்துடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் போது குடும்ப அட்டையில் பெயருடைய முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளியின் குடும்ப அட்டையோ அல்லது முதியோர் ஓய்வூதியமோ இதில் ஏதேனும் ஒன்று தானாக ரத்தாகி விடும் என வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதனால் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்க மனு செய்ய வேண்டும் அல்லது முதியோர் ஓய்வூதியம் தனக்கு தேவையில்லையெனக் கூறி மனு அளிக்க வேண்டுமென வருவாய் அதிகாரிகள் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணிலாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
முதியோர் ஓய்வூதியம் கடந்த 1962-ஆம் ஆண்டுக்கு தொடங்கப்பட்டது. அதில் சில சட்ட விதிமுறைகள் உள்ளன.
முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றோருக்கு மாதம்தோறும் 4 கிலோ ரேஷன் அரிசி, ஆண்டு இரண்டு முறை இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.
அவ்வாறான சூழ்நிலையில் குடும்ப அட்டையில் பெயருடைய ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் குடும்ப அட்டைக்கு வழக்கமாக மாதந்தோறும் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றையும் கூடுதலாக பெற்று வருகின்றனர்.
முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் அதற்கான ஆணையை பெற்ற பிறகு குடும்ப அட்டையிலிருந்து அவர்களுடைய பெயரை நீக்க மனு செய்து நீக்கிவிட வேண்டும். இதுதான் விதி. ஆனால் எவரும் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. தற்போது ஆதார் எண் இணைக்கப்படுவதால் முதியோர் ஓய்வூதியம் அல்லது குடும்ப அட்டையில் பெயர் இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே வைத்திருக்க முடியும் என்றார்.
அதிக வருமானம் உடையவர்கள் கூட குடும்ப அட்டையை வைத்துக் கொண்டு ரேஷன் கடையில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.
ஆனால் மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப அட்டையில் பெயர் அல்லது ஓய்வூதியம் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே வைத்திருக்க வேண்டுமெனக் கூறுவதால் தகுதியான ஓய்வூதிய பயனாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவர்.
அவர்களுக்கு கிடைக்கும் மாதம் ரூ.1000 மற்றும் 4 கிலோ அரிசியை வாங்கி எப்படி வாழ்க்கை நடத்த முடியும் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும்.

**முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் தகுதி படைத்தவர்கள் எனஆய்வு செய்த பிறகு தான் தற்போது அது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறான
சூழ்நிலையில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்காமல்,அவர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக
4 கிலோ அரிசியை மட்டும் வழங்கவும், மேலும் அவர்களுக்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே தகுதியான பயனாளிகளின் கோரிக்கையாகும். **

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT