சிறப்புக் கட்டுரைகள்

பாப் இசையின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்ஸன் என்னும் சகாப்தம்!

பவித்ரா முகுந்தன்

சரியாக 50 ஆண்டுகள் வாழ்ந்த மைக்கேல் ஜாக்சன் பாப் இசைக்கென ஒரு புது அடையாளத்தைக் கொடுத்தவர். ‘கிங் ஆஃப் பாப்’ என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், நாட்டிய கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர். உலகம் முழுவதும் பாப் இசைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் இவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

இதுவரையும் உலகிலேயே அதிகமாக விற்பனையான இசை ஆல்பம் என்ற பெருமையை மைக்கேல் ஜாக்சனின் ‘திரில்லர்’ ஆல்பம் கைப்பற்றியுள்ளது, 6.5 கோடி பிரதிகளை விற்று தீர்த்தது. பாடலைப் பாடிக் கொண்டே அதற்கேற்ப வித்தியாசமான நடன அசைவுகளை செய்து ரசிகர்களின், செவி, கண் என ஒரே நேரத்தில் விருந்தளித்து அவர்களை மெய் மறக்க செய்வார். இவருடைய ‘மூன் வாக்’ மற்றும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக முன்னொக்கி சாய்வது போன்ற பல நடன அசைவுகள் அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புவியீர்ப்புக்கு எதிரான அந்த நடன அசைவிற்காக தனியே ஒரு காலணியை அவரே தயாரித்து அதற்கான காப்புரிமையையும் இவர் பெற்றிருந்தார்.

1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-வது நாள் பிறந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் 3 பெண்கள் உட்பட 8 பேர். இவரது தந்தை ஒரு கிட்டார் இசைக்கலைஞர். மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்துள்ளார், இரவு நேரங்களில் பயமுறுத்தும் வகையிலான முகமூடிகளை அணிந்துக் கொண்டு மைக்கிலேயே படுக்கை அறைக்கு ஜன்னல் வழியாக நுழைந்து கத்துவாராம், எதற்கு என்று யோசிக்கிறீர்களா, அவருடைய பிள்ளைகளுக்கு இரவு உறங்குவதற்கு முன்பு ஜன்னலை மூட வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவாம். இந்த சம்பவத்தால் பல நாட்கள் கெட்ட கனவுகளின் அச்சுறுத்தலால் அவதி பட்டாராம் ஜாக்சன். இருந்தாலும் தன் தந்தையின் கண்டிப்பான வளர்ப்பே தான் வாழ்வில் வெற்றி அடைய காரணம் என்று மைக்கேல் ஜாக்ஸனே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

1965-ல் ‘ஜாக்ஸன் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவை இவர்களது தந்தை ஏற்படுத்தி தர, 1966-ல் அது ‘ஜாக்ஸன் 5’ என்று பெயர் மாற்றப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஜாக்ஸனை இசைத் துறையில் முதல் வெற்றி சுவையை சுவைக்க வைத்தது.

23 கின்னஸ் சாதனைகள், 40 பில்போர்ட் விருதுகள், 13 கிராமிஸ், 26 அமெரிக்கா இசை விருது என பல விருதுகளை வென்றுள்ளார். இன்றுவரையும் உலகிலேயே மிக அதிகமான விருதுகளை வென்ற கலைஞராக திகழ்பவர் மைக்கேல் ஜாக்ஸன். இவருடைய ‘ஸ்கிரீம்’ என்ற ஆல்பத்தின் விலை 3.8 கோடியாம். உலகிலேயே விலை அதிகமான ஆல்பம் இதுதான்.

ஜாக்ஸன் ஒரு செல்ல பிராணிகள் பிரியர். இவருடைய செல்ல பிராணிகள் எல்லாம் வெறும் நாய், பூனை, கிளிகள் அல்ல மலை பாம்பு, எலி, மனித குரங்கு மற்றும் புலி. அதிகமான நேரங்களை இவைகளுடனே அவர் செலவழித்தார். இரண்டு முறை திருமணம் செய்தும் எந்த ஒரு திருமண வாழ்க்கையும் இவருக்கு அதிக காலம் நீடிக்கவில்லை.

பல முறை முகத்தின் தோற்றத்தை மாற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் அறுவை சிகிச்சையை செய்தார். ஒரு முறை கடினமான நடன அசைவு ஒன்றை செய்யும்போது கீழே விழுந்ததில் இவரது மூக்கு உடைந்து அறுவை சிகிச்சை செய்தும் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளானார். பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அரிய வகையான ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டார். உலக பணக்காரர்களுள் ஒருவரான இவர் ஒரு பில்லியன் சொத்துகளுக்கு சொந்தகாரர் ஆனால் இறப்பதற்கு முன்பு இவரது பெயரில் 500 மில்லியன் கடன் தொகையை விட்டுச் சென்றார்.

இவரது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவமாக இவர் குறிப்பிடுவது 2001-ல் நடந்த 9/11 டிவின் டவர் தாக்குதலின் போது அந்த நேரத்தில் வியாபார ரீதியான சந்திப்பிற்கு அவர் செல்ல வேண்டி இருந்தது, ஆனால் அதிக நேரம் தூங்கிவிட்ட காரணத்தினால் அந்த அப்பாய்ன்மெண்டை ரத்து செய்துள்ளார், ஒருவேளை சென்றிருந்தால் தானும் அன்று எரிந்து சாம்பலாகியிருப்பேன் என்று பெரு மூச்சு விட்டார்.

பலரது மனதில் நீங்காத இடம் பிடித்து, வாழ்நாள் சாதனையாளராய் வாழ்ந்த இவருடைய இறுதி காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 2009-ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த மைக்கேல் ஜாக்ஸனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். வெறும் எலும்பின் மேல் தோல் போர்த்தியது போல் கிடந்தது அந்த உடல், அவரது வயிற்றை ஆராய்ந்தபோது அதில் பாதி கரைந்த நிலையில் சில மாத்திரைகளை தவிர வேறு எதுவும் அவரது வயிற்றில் இல்லை. கோடி கோடியாக சம்பாதித்து, வாழ்வின் ஏற்ற இறக்கங்களையெல்லாம் சந்தித்து, புகழின் உச்சத்தை அடைந்தும் தனது 50-வது வயதிலேயே மரணத்தை தழுவினார். உலகின் பாப் இசைக்கென தனி கலாச்சாரத்தையே உருவாக்கியவர் மைக்கேல் ஜாக்ஸனின் நினைவு தினம் இன்று.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT