சிறப்புக் கட்டுரைகள்

சைக்கோ பெற்றோர் VS அப்பாவிக் குழந்தைகள்! 

கார்த்திகா வாசுதேவன்

பெற்றோர் உருவிலிருக்கும் மனித மிருகங்களைச் ஒடுக்கச் சட்டத்தில் இடமில்லையா?

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது ஜனவரி 16 ஆம் தேதி நிகழ்ந்த சம்பவம்...

கொல்லம்: கேரளாவில் தனது 14 வயது மகனை தாய் ஒருவரே எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது ஜனவரி 19 ஆம் தேதி நிகழ்ந்த கொடூரம்.

இவற்றுக்குச் சற்றும் குறைவில்லாமல் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு பெண்மணி, தத்துக் கொடுக்கப்பட்ட தனது மகளின் வளர்ப்பு அம்மா அவளை வளர்க்க இயலாதென மீண்டும் சொந்த அம்மாவான இவரிடமே திருப்பி அனுப்பி வைக்க, டீனேஜ் மகள் தன்னுடன் இருப்பது தனது பிரைவஸிக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மகளை சித்ரவதை செய்து கொன்று தனக்குச் சொந்தமான எஸ்டேட் வளாகத்திலேயே புதைத்து விட்டு மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்து மாட்டிக் கொண்டதாக ஒரு துயரச் செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்து இதை ‘அமெரிக்காவிலும் ஒரு இந்திராணி முகர்ஜி’ என்ற பெயரில் தினமணி இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோம்.

ஆந்திராவிலும் இப்படி ஒரு சம்பவம்...

முன்னதாக ஆந்திராவிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. உடல்நிலை சரியில்லாத தனது 7 வயது மகன் இரவு உணவைச் சாப்பிட மறுத்ததால் அவனை அறைந்தே கொன்றிருக்கிறாள் ஒரு தாய். கணவரை இழந்த அந்தப் பெண்மணிக்கு மனநலப் பிரச்னைகள் இருந்தும் உறவினர்களால் கைவிடப்பட்டு தனித்து குழந்தைகளுடன் வசிக்க நேர்ந்ததால் நிகழ்ந்த அவலம் இது!

இங்கே நாடறிந்த ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, ஷீனாவை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. சொந்த மகளைக் கொல்வதற்கு பிரமாதமான செயல்திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகக் கொலை செய்து மாட்டிக் கொண்ட இந்திராணி முகர்ஜியும் மனநிலை பிறழ்ந்தவராகவே இருக்கக் கூடும்.

இந்த நவீன யுகத்தில் மிக நாகரீகமாக உடுத்திக் கொண்டு, நாசூக்கான பழக்க வழக்கங்களுடன் வெளிப்பார்வைக்கு பகட்டாகத் தெரியும் மனிதர்களை எல்லாம் நாம் புத்திசாலிகள் என்றும் நாகரீகமானவர்கள் என்றும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால், இப்போதெல்லாம் சீரியல் சைக்கோ வில்லிகளைப் போல நிஜ வாழ்க்கையிலும் சைக்கோக்கள் அத்தனை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியாத அளவுக்கு மிக அருமையாக இயல்பானவர்களாக நடிக்கத் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அதனால் தான் சைக்கோக்களை நம்மால் எளிதில் அடையாளம் காண முடிவதே இல்லை. அப்படியே காண முடிந்தாலும், அது அவரவர் குடும்ப விஷயம் அதில் தலையிட வெளியாட்களுக்கு உரிமை இல்லை என்று ஒதுங்கி விடுகிறோம். இது தவறான அணுகுமுறை.

நம் கண் முன்னே ஒரு அநீதி, அராஜகம் அரங்கேறும் பட்சத்தில் அதைத் தட்டிக் கேட்கும் தார்மீகக் கடமை இந்திய பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. பயத்தின் காரணமாக நாம் பல அவலங்களைக் கண்டும் காணாது தவிர்த்த போதிலும் கண்ணெதிரே இந்த உலகின் கசடுகள் எதுவும் படிந்திரத் தொடங்காத பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் நாம் நிச்சயம் அப்போதும் காந்தி கதையில் வரும் குரங்குகளைப் போல கண் பொத்தி, வாய் பொத்தி, காதுகளை இறுகப் பொத்தி வாளாவிருக்கக் கூடாது. அப்படி இருப்போமெனில் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்கு மன்னிப்பே வாய்க்காது.

இது இன்று வந்த துயரச் செய்தி;

ராஜஸ்தானைச் சேர்ந்த செயின் சிங் எனும் ஒரு மனிதமிருகம் தினமும் தன் குழந்தைகளைச் சித்திரவதை செய்வதை தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதைப் போல சர்வ சாதாரணச் செயலாக வாடிக்கையாகவே அரங்கேற்றி வந்திருக்கிறது. அவனது மனைவியோ, அக்கம் பக்கத்தினரோ குறுக்கிட்டால் அவன் என்ன செய்யக்கூடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவனை இது குறித்து எதுவும் கேட்பதில்லை.

வழக்கம் போல நேற்றும் அவன் தனது 5 வயது மகனையும், மூன்று வயது மகளையும் அடித்துச் சித்திரவதை செய்ய மனிதாபிமானமே இன்றி அவனது சகோதரன் வட்டா சிங் அதை தனது அலைபேசி வழியாக வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறான். குழந்தைகளின் சித்தப்பாவான வட்டா சிங் தனது சகோதரனைத் தடுப்பதை விட்டு விட்டு நிகழும் கோரத்தனத்தை வீடியோவாக்கி இருப்பது மகா கேவலமான செயல் மட்டுமல்ல குடும்ப உறவுமுறைகளுக்குள்ளான நேசம், பாசம், பரிவு  எனும் பிணைப்பையே கேலிக்குரியதாக்குதாக இருந்தது. ஒன்றுமறியாப் பிஞ்சுக் குழந்தைகளை அடித்து உதைத்து நோகச்செய்து தனது வக்கிர புத்திக்கு வடிகால் தேடிக் கொள்ளும் இத்தகைய மனிதர்களை என்ன செய்வது? வட்டா சிங் எடுத்த வீடியோ எப்படியோ சமூக ஊடகங்களில் கசியவே தற்போது அந்த மனிதமிருகங்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

இந்த விஷயத்தை குழந்தைகள் துயரம் அனுபவிக்கிறார்களே என்ற நோக்கில் மட்டும் காணாமல் அந்தக் குழந்தைகளின் எதிர்கால மனநலனையும் எண்ணி சீர் தூக்கிப் பார்த்து விரைவில் இத்தகைய அவலங்களுக்கு முடிவு கட்டும் வண்ணம் மிகக் கடுமையான சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் இயற்றப்பட வேண்டும். ஏனெனில் இளமையில் மிகக்கொடூரமான துயரங்களை அனுபவிக்கும் நிர்பந்தத்துக்கு ஆளாகும் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிக மோசமான மனநலன் கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள். சிறு வயதில் அனுபவித்த துயரத்தின் வடு அவர்களுக்குச் சக மனிதர்களின் மீதான, இந்தச் சமூகத்தின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கச் செய்து விடுகிறது. நிகழ்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் கொடூரச் சித்திரவதைகளுக்கு எதிராக பெற்றோரை எதிர்க்க முடிந்திராத ஆத்திரமும் ஆதங்கமுமான உணர்வுகளுக்கு எல்லாம் எதிர்காலத்தில் வடிகால் தேடிக் கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். ஒருவகையில் பெற்றோர்களின் சைக்கோத்தனம் என்பது வலிந்து இந்த சமூகத்துக்குக் குற்றவாளிகளை உருவாக்கித் தரும் கேடு கெட்ட முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

நம்மால் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் எதுவும் செய்ய முடியாது என்ற போதிலும் எதிர்கால சந்ததியினரை நல்ல மனநலன் கொண்டவர்களாக உருவாக்கித்தரும் பொறுப்புணர்வுடனாவது வாழ்தல் நலம்! இல்லையேல் எந்த ஒரு மனித வாழ்க்கைக்கும் அர்த்தமே இல்லாது போய் மொத்த சமூகமும் இழிந்து போகும்.

பெற்றோர் தங்களது சொந்தக் குழந்தைகளை வன்முறைச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் போது அதை அறிய நேரும் எவரும் உடனடியாகக் காவல்துறை மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அமைப்பினர் என எவருடைய கவனத்துக்கேனும் உடனடியாக அந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

சில இடங்களில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக குழந்தைகள் நலன் பேணுவதாகக் கூறிக் கொள்ளும் தொண்டு நிறுவனங்களே பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளைப் பற்றிய ஆதாரங்களை காவல்துறையினரிடம் உரிய வகையில் ஒப்படைப்பதில்லை என்ற பேச்சும் இருக்கிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளில் பெற்றோரே குற்றவாளிகளாக இருப்பின் அவர்களைத் தண்டிக்க பிரத்யேக சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் அந்தச் சட்டங்களனைத்தும் எந்த அளவுக்கு செல்லுபடியாகின்றன என்று தெரியவில்லை. 

தங்களது சொந்தக் காரணங்களுக்காக பெற்ற குழந்தைகளைத் துன்புறுத்துவது பெற்றோரே ஆனாலும் அதைத் தட்டிக் கேட்பவர்களை ’பத்துமாதம் சுமந்து நொந்து பெத்தெடுத்தது நான், எம்புள்ளைய நான் அடிப்பேன், உதைப்பேன், உறியில கட்டித் தொங்கவிடுவேன்’ அதைக் கேட்க நீ யார்? என சமூக அக்கறை கொண்ட மூன்றாம் நபரைப் பார்த்து குழந்தைகளைப் பெற்றவர்கள் கை நீட்டிக் கேள்வி கேட்கச் சட்டம் இடம் தருவதில்லை. நமது சமூக அமைப்பு மட்டுமே குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் எதிர்கால வாழ்வு, அவர்களது பெற்றோர் சார்பு நிலை இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அவர்களைத் தப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்காக குழந்தைகள் தவறு செய்யும் போது அதைக் கண்டிப்பதற்காகக் கை நீட்டும் பெற்றோரை எல்லாம் இந்த லிஸ்டில் சேர்த்து விடத் தேவையில்லை.

சைக்கோதனத்துக்கும், கண்டிப்புக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

இளஞ்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000- ன் படி;

இந்திய தண்டனைச் சட்டம் 

பிரிவு 317, பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெற்றோர்கள் தங்களது சுயநலத்துக்காக பெற்ற குழந்தைகளை புறக்கணித்தாலோ, அல்லது முற்றிலும் கவனிப்பின்றி கைவிட்டாலோ குற்றம் நிரூபிக்கப்படின் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற சட்டத்தில் இடமுண்டு என்கிறது.

ஆகவே, சொந்தப் பெற்றோரே ஆயினும் பெற்ற குழந்தைகளைத் அடிப்பது, உதைப்பது, மிரட்டுவது, உடலில் காயங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட செய்கைகளுக்கு எல்லை உண்டு. எல்லை மீறினால் அந்தந்த சரகத்துக்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் இது குறித்துப் புகார் தெரிவிக்கலாம்

அதற்கான சைல்டு ஹெல்ப் லைன் நம்பர்-1098.

இது தவிர குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதற்கென்ற தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையமும் நிறுவப்பட்டுள்ளது. அதில் இம்மாதிரியான குற்றங்களைக் கண்ணாரக் காண்பவர் எவராயினும் இது குறித்து இணைய வழியிலேயே புகார் பதிவு செய்யமுடியும். அதற்கான முகவரிகள்;

தேசிய மகளிர் ஆணையம்
lot-21, Jasola Institutional Area, 
New Delhi – 110025

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
NO.735, Devaneya Bavanar Noolagam, 
2nd Floor, Anna Salai, 
Chennai-600002

குழந்தைகள் துன்புறுத்தப்படாத ஒரு தேசத்தை மட்டுமே அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால் இன்றைய நிலையில் இந்தியா ஒன்றும் அமைதிப் பூங்கா இல்லை. அதன் பச்சிளம் குழந்தைகள் பல்வேறு அரக்கர்களின் கைகளில் சிக்கித் தங்களை இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

அதைத் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT