சிறப்புக் கட்டுரைகள்

கர்நாடகாவில் ராஜயோகக்காரர் எடியூரப்பாவா..? குமாரசாமியா..?

ஆர். வெங்கடேசன்

கர்நாடகாவில் நடந்து வரும் அரசியல் பரபரப்பில் ராஜயோகக்காரர் எடியூரப்பாவா அல்லது 1996-ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக தேவகவுடா பிரதமரானது போல காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருக்கும் குமாரசாமியா என்பதே பரபரப்பு பேச்சாக உள்ளது. 

கர்நாகா சட்டப்பேரவையில் இதுவரை இரண்டு முறை எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் 1983 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தொங்கு பேரவை அமைந்திருக்கிறது. அதுபோல 2018 மே 12-ஆம் தேதி நடந்த பேரவை தேர்தலிலும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

அதாவது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இப்போதைய நிலையில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பேரவையில் பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 78 எம்எல்ஏக்களும், மஜதவுக்கு 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். இது தவிர பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ஒருவரும் காங்கிரஸ்-மஜத கூட்டணியில் உள்ளார். கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளார்.

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்க மறுத்த ஆளுநரின் செயலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் அவரது மனசாட்சி அடிப்படையிலான முடிவுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு  நம்பிக்கை வாக்கெடுப்பை மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயர் போப்பையாவை கொண்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பை நடத்துவார். 

அதாவது தீர்மானத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு வட்டமாக (பிளாக்) எதிர்ப்பவர் யார்?, ஆதரிப்பவர் யார்?, நடுநிலை வகிப்பவர் யார்? என்று உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து தனித்தனியாக பெயர் சொல்லி கையை உயர்த்தச்சொல்லி தற்காலிக சபாநாயகர் கணக்கெடுப்பு நடத்துவார். 

சட்டப்பேரவை செயலர் வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பார். இந்த நடைமுறையில் தான் தமிழகத்தில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கு கணக்கிடப்பட்டது. 

கையை உயர்த்தி வாக்களிக்கும் முறையில் பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை உள்ளவர் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார். தற்போது உள்ள எண்ணிக்கையில் காங்கிரஸ் 77, மஜத 38 ஆதரவு சுயேட்சைகள் 2 சேர்த்து 117 பேர் உள்ளனர்.

பாஜக 104 மற்றும் ஆதரவு சுயேட்சை சேர்த்து 105 பேர் உள்ளனர். தற்போது உள்ள நிலையில் பாஜக வெற்றிபெற 112 பேர் தேவை. அதாவது கூடுதலாக 7 பேர் தேவை. இதில் காங்கிரஸ், மஜதவிலிருந்து குறைவான எண்ணிக்கையில் பாஜகவை யார் ஆதரித்தாலும் செல்லாது. கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் பாதிக்கப்பட்டு பதவி பறிபோகும் நிலையும் உள்ளது.

ஒருவேளை மஜதவிலிருந்து 25 எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரித்தால் அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்திற்கு வாய்ப்பில்லை அல்லது காங்கிரஸ் உறுப்பிநர்கள் 51 பேர் பாஜகவை ஆதரித்தால் கட்சித்தாவல் தடைச்சட்டத்திற்கு செய்ய வாய்ப்பில்லை. இது நடைமுறை சாத்தியமா என்றால் குறைவுதான் என்றே சொல்லப்படுகிறது. 

பேரவையில் உள்ள உறுப்பினர்களில் 14 பேர் நடுநிலை என்று அறிவித்தாலோ, அல்லது வருகை தராமல் பாஜக பக்கம் 105 உற்ப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் எடியூரப்பா வெற்றிபெற வாய்ப்பு உண்டு. அதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு என்ற தற்போதைய நிலை தெரிவிக்கிறது. காங்கிரஸ், மஜத இருவரும் தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் மட்டுமே பேரவைக்கு வரவில்லை என்ற நிலையில் அவையின் மொத்த பலம் 221 இல் இருந்து 219 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க 110 பேர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேவை 8 என்ற நிலையில் இருந்து 6-ஆக குறைந்துள்ளது. 

இந்நிலையில், எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சியின்போது வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் என்றதுடன் சட்டப்பேரவை செயலரும் அவை நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவால் எடியூரப்பாவுக்கு மேலும் செக் வைக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் மூத்த உறுப்பினர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதால் அவரது ஒரு வாக்கு பாஜகவுக்கு என்ற நிலை பறிபோனது. இழுபறி நீடித்தால் மட்டுமே அவரது வாக்கை பயன்படுத்தலாம், ஆனால் அதற்கான நிலை ஏற்படாது என்றே கள நிலவரம் தெளிவுப்படுத்துகிறது. அதே போன்று இரு தொகுதிகளில் வெற்றிபெற்றுளள மஜத தலைவர் குமாரசாமி ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும் என்பதால் 117-ல் இருந்து 116 வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.

2011-இல் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர் இன்றைக்கு நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் எந்த நிலையை எடுப்பார் என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. 

பரபரப்பான கர்நாடகா அரசியல் கள நிலவரங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது 1996-இல் எதிர்பாராதவிதமாக தேவகவுடா பிரதமரானது போல், ராஜயோகமிருக்கும் குமாரசாமி அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பரவலாக பேசப்படுகிறது. 

காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி அரியணையில் அமர்ந்தாலும் ஆட்சியின் ஆயுட்காலம் முழுவதும் நீடிக்க முடியுமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. பாஜகவுக்கு தேவையான 8 உறுப்பினர்கள் அல்லது 10 உறுப்பினர்களுக்காக கட்சி உடைக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. 

கார்நாடகா அளவுக்குக்கூட பெரும்பான்மை இல்லதா 3 மாநிலங்களில் வெற்றிகரமாக ஆட்சி அதிகாரத்தில் அமைந்த பாஜகவுக்கு கட்சித்தாவல், கொறடாவின் கட்டளை போன்ற பிரச்னைகள் ஒரு விஷயமே இல்லை. 

நிலைப்பது எடியூரப்பாவா?, வருவது குமாரசாமி என்பதை டி.கே. சிவக்குமார் மற்றும் ரெட்டி சகோதரர்கள் இடையே நடக்கும் குதிரை பேர நாடகத்திலே உள்ளது என்பதே கர்நாடக அரசியல் நோக்கர்களின் பேச்சாக உள்ளது.  

முதல்வராக எடியூரப்பா நீடிப்பாரா? அல்லது 3 நாள் முதல்வர் என்ற பெயரோடு பறிபோவரா அல்லது காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியின் ராஜயோகக்காரர் குமாரசாமி ஆட்சி அமைப்பாரா? என்பதை தெரிந்துகொள்ள இன்று மாலை 4 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT