சிறப்புக் கட்டுரைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாடம்

உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

டாக்டர். எம். அருணாசலம்

உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம், அதாவது 13 உயிர்களை பலிகொண்ட சம்பவம் ஒவ்வொரு தமிழனையும் அவனது மனசாட்சியையும் உலுக்கிவிட்டது என்று சொன்னால் மிகையில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே நேரம், இந்தப் பிரச்னையில் நாமும் எதாவது செய்திருக்கலாமோ என்ற மன உறுத்தலை உணர்கிறோம்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அலுமினியம், செம்பு, தாமிரம் போன்ற தனிமங்களை தாதுப் பொருள்களில் இருந்து பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் அல்லது ஆலைகளை எதிர்த்து, உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால், மக்களால், மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த அரசுகளே, மக்கள் எதிர்க்கும் நிறுவனங்கள் அல்லது ஆலைகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் களத்தில் நின்று செயல்படுவதும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. தென்னமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் படுகொலைகளை அந்நாட்டு அரசுகளே செய்வதையும் பார்க்கிறோம்.

இன்றைய வேகமாக வளரும் உலகில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறும் எந்த விஷயமும் அடுந்த சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி மக்கள் கவனத்துக்கு வந்துவிடுகிறது. ஆக, இந்த விஷயத்தில் எதையும் யாராலும் தடுக்க முடியாது.

தென்னமெரிக்க நாடுகளான சிலே, பெரு போன்ற நாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் தாமிர ஆலைகளுக்கு எதிராக மக்கள் இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், வளர்ந்த நாடுகள் என்று அறியப்படும் அமெரிக்க, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நிலப்பரப்பு அதிகம் உள்ள நாடுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்தும் நாடுகளில், போராட்டமோ, சுட்டுக்கொல்லப்படுதலோ அதிகம் நிகழ்வதில்லை. ஏன்? நிச்சயம் ஆராயப்பட வேண்டிய விஷயம்.

உலகின் மனித நாகரிகம் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உலோகம் தாமிரம். இதற்குப் பிறகுதான் இரும்பு போன்ற உலோகங்கள் கண்டறியப்பட்டன. தொடக்கக் காலத்தில் இருந்த தாமிரத்தின் பயன்பாடும் தேவையும், பிற உலோகங்களின் வரவால் குறையத் தொடங்கிவிட்டது.

தாதுப் பொருளில் இருந்து நேரடியாக தாமிரத்தை பிரித்தெடுத்துவிட முடியாது. தாதுப் பொருளில் இருந்து சல்ஃபர்-டை-ஆக்ஸைடு மற்றும் ஆர்சனிக் என்ற இரு பொருள்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகுதான் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலும் இதுதான் நடைபெறுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மையான உற்பத்திப் பொருள் தாமிரம்தான். ஆனால், அந்தத் தாமிர உற்பத்தியில் உப பொருள்களாகக் கிடைக்கும் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, ஆர்சனிக் ஆகிய பொருள்கள்தான் இப்போது பிரச்னையே. ஏன்?

சல்ஃபர்-டை-ஆக்ஸைடு என்பது ஆபத்தான நச்சு வாயு. காற்றில் பத்து லட்சத்தில் 5 பங்கு என்ற அளவில் காற்றில் கலந்துவிட்டாலே அந்த காற்று மாசு அடைந்துவிட்டது என்று பொருள். அதனால், மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். நிலைமை முற்றினால், உயிரிழப்பும் சாத்தியமே.

அதேபோல், ஆர்சனிக் என்பதும் நச்சுத்தனிமம்தான். 10 கோடியில் ஒரு பங்கு என்ற அளவில் நீரிலோ நிலத்திலோ இருந்தால், அந்த நீரும் நிலமும் மாசு அடைந்துவிட்டது என்று அர்த்தம். இதனால், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மேற்கண்ட இந்த இரு ‘நச்சுப் பொருள்களை’ ஸ்டெர்லைட் ஆலை எந்த அளவுக்குக் கையாண்டது என்பதுதான் இப்போதைய மக்கள் போராட்டத்தின் பிரச்னையே. ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை, சல்ஃபர்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவு காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு. ஆனால், தூத்துக்குடியில் இருப்பதாகச் சொல்லப்படுவது 10 லட்சத்தில் 1000 பங்கு. அதேபோல், ஆர்சனிக்கின் அளவு 10 கோடியில் 1 பங்கு இருக்கலாம். ஆனால், நீரி (Neeri) என்ற நீர்/நிலம் தொடர்பான அரசு நிறுவனம், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து எடுத்த மாதிரிகளில் ஆர்சனிக்கின் கலப்பு 10 கோடியில் 300 பங்கு என்ற அளவுக்கு இருந்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டு தாமிரம் உற்பத்தி செய்யத் தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. சமீப காலத்தில்தான் அந்த நிறுவனத்துக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அது இப்போது உயிர்ப்பலி என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. எங்கள் நகரம் வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டது; அதற்குக் காரணம் ஸ்டெர்லைட் நிறுவனம்தான் என்பது போராட்ட மக்களின் குற்றச்சாட்டு. அப்படியென்றால், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இரு முக்கிய நச்சுப் பொருள்களைக் கையாள்வதில் போதிய கவனம் செலுத்தத் தவறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த விஷயத்தில், சமீபமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், ஊடகங்கள் போன்றவை முக்கியக் காரணங்கள் என்று சொல்லலாம்.

மக்கள் எந்த ஒரு திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு சாட்சி. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தாமிர உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அந் நிறுவனத்துக்கு எதிராக சமீபமாகத்தானே ஆர்ப்பாட்டமும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்று ஆலை நிர்வாகமும், மாவட்ட அரசு நிர்வாகமும் ஒரு நிமிடம் யோசித்திருக்க வேண்டாமா?

எந்த ஒரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு, அந்தப் பகுதி மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விஞ்ஞானிகள், தொழில்சார் வல்லுனர்களை அப்பகுதிக்கு வரவழைத்து, மக்களிடையே அத் திட்டம் குறித்த புரிதலையும், மக்களுக்கு உள்ள சந்தேகங்களையும் தீர்க்கும் நடவடிகையில் ஈடுபட வேண்டும். போராட்டம் என்ற நிலை ஏற்பட்டால், நிர்வாகமும் அரசுகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை, காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசு, புற்றுநோய் மற்றும் தோல் நோய் சார்ந்த பயமே தூத்துக்குடி பகுதி மக்களின் மாபெரும் குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், மாவட்ட மற்றும் மாநில அரசு நிர்வாகமும் கூடுதல் கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு மற்றும் அமைப்புகளின் உதவியைக் கோரியிருக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையினால்தான் காற்று மற்றும் நிலத்தடி மாசும், புற்றுநோய்ப் பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஆலை நிர்வாகமும் மாவட்ட அரசு நிர்வாகமும் இணைந்து அந்தக் குற்றச்சாட்டை சரியான முறையில் அணுகியிருக்க வேண்டும். சிறந்த மருத்துவக் குழுவோடு முகாமிட்டு, அப்பகுதி மக்களை முழுமையாகப் பரிசோதித்திருக்க வேண்டும். தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்களின் நிலை என்ன, மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள மக்களின் நிலை என்ன என்பதை ஒப்பிட்டு, பிரச்னையின் தீவிரத்தை அலசியிருக்க வேண்டும். உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையினால்தான் பிரச்னையே என்று தெரியவந்திருந்தால், அதை அந்த ஆலை நிர்வாகமும், மாவட்ட அரசு நிர்வாகமும் ஒப்புக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

போராட்டக் குழுவினரை அழைத்து அடுத்த என்ன செய்யலாம் என்பதையும், பிரச்னையைத் தீர்க்க வல்லுநர் குழு அமைப்பதைப் பற்றியும் முடிவு செய்திருக்க வேண்டும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அப்பகுதி மக்கள் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிந்து, பிரச்னை குறித்தும் மக்களின் பயத்தைப் போக்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுவே ஒரு மாநில அரசின் தார்மீகக் கடமையாகவும், பொறுப்பாகவும் இருந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே, மக்கள் போராட்டம் என்றால் எந்த அரசும் தொடக்கத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்டெர்லைட் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இப்போது ஒரு நடைமுறையாக, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை நீதித் துறையிடம் கொடுத்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

இப்போது, வெகு சுலபமாகத் தீர்த்திருக்க வேண்டியவிஷயம் இப்போது துப்பாக்கிச் சூடு, பலி, லட்சக்கணக்கில் நிவாரணம் என்று நிலைமை கைமீறிப்போய்விட்டது. அதேநேரம், தொடர்புடைய ஆலை விரைவில் மூடப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டிருக்கின்றன. கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்ற ரீதியில்தான் இந்நடவடிக்கை இருக்கிறது.

மக்களாட்சியின் ஆணிவேராகக் கருதப்படும் கிராம சபை, கிராம - நகரப் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில், மக்கள் சார்ந்த விஷயங்கள் குறித்து போதுமான விவாதங்கள் நடைபெறுவதில்லை. மக்கள் கருத்துகள் எங்கும் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. கட்சி அமைப்புகளிலும்கூட தீர்மானங்கள் இயற்றப்படுவதோடு சரி. எந்த நிலையிலும் பிரச்னைகள் அலசி ஆராயப்படுவதில்லை. தனிநபர் விருப்பு வெறுப்பு அரசியலே பிரதானமாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது நீங்கள்தான், அடிக்கல் நாட்டியது நீங்கள்தான், திறந்து வைத்தது நீங்கள்தான் என்று ஆட்சிக்கு வரும் அரசு, முந்தைய அரசும் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனோ பலனோ இல்லை. பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதை அறிந்து அதை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் அரசியல் செய்யும் நிலை இருக்கும்வரை, அவற்றால் மக்களுக்கு நல்லாட்சி கிடைப்பதற்குப் பதிலாக இதுபோன்ற துயரச் சம்பவங்கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

- டாக்டர் மு. அருணாசலம்
தொடர்புக்கு - minskdr92@yahoo.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT