சிறப்புக் கட்டுரைகள்

ஒக்கி, கஜா புயல்களில் மெத்தனம் காட்டிய மத்திய அரசு ஃபானிக்கு முந்தியது ஏன்?

தினமணி

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் தாக்கிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள், குமரி மாவட்ட மீனவர்கள் 162 பேர் உள்பட 204 மீனவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் கரை திரும்பவில்லை. நூற்றுக்கணக்கான படகுகள் கடுமையாக சேதம் அடைந்தன. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழை, ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் வீடு இடிந்தது உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்தனர். மேலும், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் குமரி மாவட்டமே இருளில் மூழ்கியது.

இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ. 747 கோடியை தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிவாரணமாக கோரியது. தொடர்ந்து தமிழக அரசு ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ரூ. 9,302 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குமரி மாவட்ட மறுசீரமைப்புக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் ரூ.558 கோடி நிதி கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது. எனினும், புயலால் எழுந்துள்ள நிலைமையைச் சமாளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே குமரி வந்திருந்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல்கட்டமாக ரூ.133 கோடி விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதையடுத்து 2018, நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலையில் கஜா புயல் வீசியது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்கள் பேரழிவைச் சந்தித்தன. இதில், ஏறத்தாழ 87,000 கூரை வீடுகளும், சுமார் 54,000 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன. ஏறத்தாழ 45 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தும், பாதியாக முறிந்தும் விழுந்தன. புயலால் மக்கள் வீடுகளை இழந்தது மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.

இந்நிலையில், புயல் நிவாரண நிதி கோரி தில்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நவம்பர் 22-இல் நேரில் சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, மத்திய அரசின் குழு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்தது.

பின்னர், டிசம்பர் 3-ம் தேதி இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு அறிவித்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு கூடுதல் நிதி உதவியாக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியில் (என்டிஆர்எஃப்) இருந்து ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்ய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கஜா புயல் பாதித்த  மாவட்டங்களுக்கு ரயிலில் நிவாரணப் பொருள்கள் எடுத்துச் செல்ல, சரக்கு  கட்டணம் விலக்கி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால், கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 1,146.12 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், இதுவரை ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்தது. இந்த இரு புயல்களின் தாக்கம் காரணமாக விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் அரசின் உரிய நிவாரணங்கள் சென்றடையவில்லை. 

மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிவாரண நிதியை ஒதுக்காத காரணத்தால் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை என்று புகார்கள் எழுந்தன. இவ்விரு புயல்களின் போதும் தமிழகம் கோரிய நிதியை ஒதுக்காமலும், ஒக்கி புயலை தேசியப் பேரிடராகவும் அறிவிக்காமல் மெத்தனம் காட்டிய மத்திய அரசு, தற்போது தமிழகத்தை பெரிதும் பாதிக்காத ஃபானி புயலுக்காக முன்கூட்டிய ரூ.309 கோடி நிவாரண நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளது கவனிக்கத்தக்து. அதுமட்டுமல்லாமல், ஆந்திரா (200.25 கோடி), ஒடிஸா (340.875 கோடி), மேற்கு வங்கம் (235.50 கோடி) ஆகிய மாநிலங்களுக்கும் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT