சிறப்புக் கட்டுரைகள்

உங்கள் ஆதார் அட்டையில் எழுத்துப் பிழையா? தபால் நிலையத்திலும் மாற்றலாம்!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம்..

தினமணி

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய ஒன்றாகும். 12 இலக்க எண்களைக் கொண்ட  ஆதார் அட்டையில் இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களும் அடங்கியிருக்கும்.

ஆதார் அட்டை வெறும் அடையாள அட்டை என்பதையும் தாண்டி, பான் கார்ட் உள்ளிட்டவற்றைப் பெற மிகவும் முக்கியமான ஒன்றாக தற்போது மாறியுள்ளது. வருமான  வரி கணக்குத் தாக்கல் போன்றவற்றுக்கும் ஆதார் அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும்.

உங்கள் ஆதார் அட்டையில் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப்  பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும். 

ஒரு சிலருக்கு அதனை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருக்கிறது. இதற்கு பெரியதாக சிரமப்படத் தேவையில்லை. 

ஆதார் அட்டையைத் திருத்தம் செய்ய முக்கியமாக உரிய ஆவணங்கள் (பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ்  உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்). பிறந்த தேதியை திருத்தம் செய்ய, பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், குரூப்-ஏ நிலையிலான அரசு  அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும். கேட்கும் போது காண்பிப்பதற்கு அசல்(orginal)சான்றுகளை கையில் வைத்திருக்க  வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம். 

இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையில் இருக்கும் பிழைகளைத் திருத்தம் செய்யலாம் என்பது தெரியும். தபால் நிலையத்திலுமா?

ஆம்! தபால் நிலையத்தில்தான். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று ஆதார் அட்டையின் பிழைகளைத் திருத்துவதற்கான விண்ணப்பப் படிவம்  எப்போது வழங்குகிறார்கள் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தபால் நிலையத்திலும் ஒவ்வொரு நாள் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். (உதாரணமாக..  அண்ணாநகர் என்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது). ஒருவேளை உங்கள் வீட்டு அருகில் உள்ள தபால் நிலையத்தில் ஆதார் பிழை திருத்தம் செய்யப்படவில்லையெனில், வேறு அருகில் உள்ள ஏதாவதொரு தபால் நிலையத்திற்குச் சென்று திருத்தம் செய்துகொள்ளலாம். 

விண்ணப்பப் படிவம் எந்தநேரத்தில் வழங்கப்படும்? 

எந்த நேரத்தில் சென்றாலும் விண்ணப்பம் வாங்கிவிட முடியாது. விண்ணப்பப் படிவம் காலை 8 மணிக்கு வழங்குகிறார்கள் என்றால், 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்று  வரிசையில் நிற்கவேண்டும். ஏன் அப்படி நிற்கவேண்டும் என்றால்? ஒரு நாளைக்கு 30 விண்ணப்படிவத்துக்கு மேல் வழங்கப்படமாட்டாது. அதுவும் ஒருவருக்கு ஒரு படிவம்  என முதலில் வரிசையில் நிற்கும் 30 பேருக்கு மட்டும் தான். 

ஒருவேளை வீட்டு முகவரி மாற்றப்போகிறீர்கள் என்றால்?

உங்கள் வீட்டு முகவரி சரியாக இருக்கும் வங்கி பாஸ்புக், கேஸ் சிலிண்டர் பில் என ஏதேனும் ஒரு ஆதாரத்தைக்  காட்ட வேண்டும். அதுவும் இல்லையெனில் பான் கார்டு, லைசென்ஸ் என ஏதாவதொன்றில் சரியான முகவரி இருப்பதற்கான ஆதாரம் காண்பிக்கவேண்டும். அதன்பின்னரே,  அதை ஆதாரமாக(proof) வைத்து ஆதார் அட்டையில் உள்ள பிழைகளையோ அல்லது முகவரியையோ மாற்றமுடியும்.  

விண்ணப்பபடிவம் கொடுக்கும்போதே படிவத்தின் பின்பக்கம் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். அதன்படி, உங்களின் வரிசை வரும்போது  ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றவிருக்கும் தகவல்கள், அதாவது பெயர், முகவரி, தொலைபேசி, பிறந்த தேதி என அனைத்து விவரங்களையும் தமிழிலும், ஆங்கிலத்திலும்  பொறுமையாகப் பதட்டப்படாமல் சரியாக எழுதி கொடுத்துவிட்டால், உடனே அதைக் கணினியில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 

விவரங்களையும் பதிவு செய்தபின்பு, உடனே கிளம்பிவிடக்கூடாது. உங்கள் ஆதார் அட்டையில் மாற்றப்பட்டதற்கான நகல் ஒன்றை ஸ்கேன் செய்து கொடுப்பார்கள். அதைப்  பெற்றுக்கொள்ளுங்கள். அதில் தான் EID no இருக்கும். ஆதார் அட்டை பிழைகளைத் திருத்திய அடுத்த 5 நாட்களுக்குள் நீங்கள் கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு உங்கள்  ஆதார் விவரங்கள் மாற்றப்பட்டுள்ளது என்ற ஒரு குறுஞ்செய்தி வந்துவிடும். 

அதன்பின்னர் eaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் aadhaar Number, Enrolment ID(EID), Virtual ID (VID) அனைத்தும்  பதிவு செய்து உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தபால் நிலையத்தில் ஆதார் அட்டை பிழை திருத்தம் செய்வதற்கு எந்தவித கட்டணமும்  வசூலிக்கப்படுவதில்லை. 

தபால் நிலையத்தில் மட்டுமல்ல இ-சேவை மையம், தாசில்தார் அலுவலகம், பிரௌசிங் சென்டரிலும் ஆதார் அட்டை திருத்தம் செய்துகொள்ளலாம். ஆனால், அதற்கு உரிய  ஆதாரம் கட்டாயம் கையில் வைத்திருக்கவேண்டும். இல்லையெனில் மாற்றம் செய்யமுடியாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT