சிறப்புக் கட்டுரைகள்

ரஜினி - கமலின் 40 ஆண்டு கால நட்பு அரசியல் கூட்டணியாக மாறுமா?

Muthumari

தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியலில் இணைவார்களா? என்பதுதான் தமிழக மக்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினியும், முற்போக்கு சிந்தனை கொண்ட கமலும் இணைவது சாத்தியமில்லை என்று இதுவரை நினைத்து வந்த சூழலில், தற்போது, 'தேவை ஏற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம்' என்று ஒரே நாளில் ஒரே சமயத்தில் இருவரும் கூறியுள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கமலின் அரசியல் களம்: 

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனி முத்திரை பதித்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018 பிப்ரவரி மாதம் அரசியல் களத்தில் குதித்தார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி உடனடியாக முழு அரசியலில் இறங்கிவிட்டார். கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, முதல் முயற்சியிலேயே  வாக்குகளின் மூலமாக, மக்களின் ஆதரவை பெற்றார். தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

முன்னதாக, கட்சி தொடங்கிய சமயத்திலே தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதேபோன்று மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி நிர்வாகிகள் அனைவரும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என படித்தவர்களாக இருந்ததும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் கமல். 

ரஜினியின் அரசியல் களம்: 

இதற்கு மறுமுனையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் பிரவேசம் குறித்த தனது முதல் அறிவிப்பை வெளியிட்டார். ரஜினி திரையுலகில் கொடி கட்டி பறந்தபோதே, அவர் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் அது நனவானது. ஆனால், ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அவர் இதுவரை கட்சியை தொடங்காதது ரசிகர்களிடையே சற்று அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக ரஜினி, செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்கள் வாசலில் வந்து நின்றால் கூட கண்டுகொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை அழைத்து விளக்கம் கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளது. 

ரஜினி - கமல் ரகசிய ஒப்பந்தம்:

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில், ரஜினி, கமல் ஆகிய இருவரது திரையுலக குருவான கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு, கே.பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்தனர். அந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் பேசியது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது நட்பு குறித்தும், சினிமா அனுபவங்கள் குறித்தும் எதிர்காலத்தில் தாம் எவ்வாறு பயணிக்கப் போகிறோம் என்பது குறித்தும் பேசினார்கள்.

அந்த விழாவில் பேசிய கமல், ரஜினிக்கும் தனக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக கூறினார். அதாவது இருவருமே கதாநாயகர்களாக அறிமுகமான சமயத்தில், நடிப்புத் திறமையைக் காட்ட வெவ்வேறு பாதையில் பயணிப்பதாக உறுதி எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். மேலும் 44 ஆண்டுகளாக அவர்களது நட்பு தொடர்ந்து வருவதாகவும் இது மேலும் தொடரும் என்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி - கமல் ரகசிய ஒப்பந்தம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. 

சர்ச்சைகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடும்போது ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்தார். அதுமுதல் 'ஆன்மீக அரசியல்' குறித்து பல கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர், பாஜக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், பாஜக தலைவர்கள் கூறிய பல்வேறு கருத்துக்களும் ரஜினி ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா, தமிழகத்தில் அமித் ஷா கலந்து கொண்ட விழா உள்ளிட்டவைகளில் ரஜினி பங்கெடுத்தார். இதனால் ரஜினி பாஜகவில் இணைவது உறுதி என்றே பேச்சு அடிபட்டது. அதிலும், சமீபத்தில் ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவித்தது இதனை உறுதி செய்வதாகவே மக்கள் கருதினர். 

ஆனால், தமிழக மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு ரஜினி ஒரே பேட்டியின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்தார். அதுவரை ரஜினி, பாஜகவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், முதல்முறையாக அக்கட்சிக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைத்தார். 'திருவள்ளுவருக்கும், எனக்கும் காவி(பாஜக) சாயம் பூச முயற்சி நடக்கிறது. ஆனால் இருவருமே இதில் மாட்டமாட்டோம்' எனக்கூறி தனிக்கட்சி தொடங்குவதை உறுதி செய்தார். பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்பதை நேரடியாகவே ரஜினி அந்த தருணத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார். 

ஒரே கருத்தை முன்மொழிந்த ரஜினி - கமல்:

அதன் பின்னர் 'கமல் 60' விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், 'தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அதிசயம் நிகழ்ந்துள்ளது. அற்புதம் நிகழ்ந்துள்ளது. நாளையும் இதே மாதிரியான அதிசயம் நடக்கும்' என்று பேசினார். ரஜினிதான் அடுத்த முதல்வராக வருவார் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. 

இதன்பின்னர் ரஜினியும், கமலும் ஒரே நாளில் செய்தியாளர்களை சந்தித்து, ஒரே கருத்தை ஒரே சமயத்தில் வெளியிட்டதுதான் அவர்களது கூட்டணி பேச்சுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. முதல்முறையாக இருவருமே அரசியல் கூட்டணி குறித்து தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேவை ஏற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று இருவருமே கூறியுள்ளனர். இது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பையும், மற்ற கட்சிகளிடையே சற்று பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் தானோ என்னவோ, 'ரஜினி - கமல் கூட்டணி தங்களது கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று முக்கியக் கட்சியினர் தானாக முன்வந்து கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ரஜினி - கமலின் இந்த கருத்து வெளிப்படுவதற்கு முன்னதாக இருவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கலந்து பேசியிருக்கலாம் என்றும் பேச்சும் அடிபடுகிறது.

ஆன்மீகமும், முற்போக்கும் இணையுமா?

ஜெயலலிதா - கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்படும் வெற்றிடத்தை ரஜினி - கமல் நிரப்ப வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒரு மாற்றம் வேண்டும் என்றும் இளைஞர்கள் பலர் கருதுகின்றனர். அந்த வகையில் முற்றிலும் இரு வேறு கொள்கைகளை கொண்ட ரஜினி மற்றும் கமல் அரசியல் களத்தில் இணைவது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. யார் முதல்வர் வேட்பாளர்? என்பது தொடங்கி கொள்கை ரீதியான முடிவுகள் வரை பல குழப்பங்கள் ஏற்படலாம்.

ஆனால், இவை அனைத்தையும் இணைக்கும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், ரஜினி - கமலின் 40 ஆண்டு கால நட்பு மற்றும் தமிழக மக்களின் நலன். இருவருக்கும் கொள்கைகள், சித்தாந்தங்கள், பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இருவரும் இணைய வேண்டும் என்ற சூழ்நிலை வரலாம். அவ்வாறு வரும்பட்சத்தில், ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளது. கொள்கை வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்குக் கூட கமல், 'இதைப் பற்றி இப்போது பேச தேவையில்லை. சூழ்நிலை வரும் சமயத்தில் இதை பேசிக்கொள்ளலாம்' என்று பதிலளித்தார்.

அதேபோன்று மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ரஜினி-கமல் ஆகிய இருவருமே அதிமுக, திமுக, பாஜக ஆகிய எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதே போன்று திரையுலகில் பலரும் ரஜினி- கமல் இணைந்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருவருக்கும் இடையேயான நட்புறவு இருந்து வருவதால், கொள்கைகள் மற்றும் கருத்துகள் வேறுபட்டாலும் இருவரும் இணைந்து அரசியல் களத்தில் பயணிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் காலமும், சூழ்நிலையுமே அதைத் தீர்மானிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT