சிறப்புக் கட்டுரைகள்

நாட்டையே கலங்க வைத்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது! என்ன செய்யப் போகிறது ரயில்வே!!

சி.பி.சரவணன்

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.

இந்த உலகில் சிலவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்கவே செய்யாது. கடல், ரயில் என்ற இந்தப் பட்டியலில் வனத்தின் பேரரசனான யானைக்கும் இடமுண்டு. காட்டுக்குள் கம்பீரமாய் உலவிக் கொண்டிருக்கும் யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்ததன் விளைவே, யானை- மனித மோதல்கள். பல நூறு ஆண்டுகளாய் வலசை செல்லும் யானைகளின் பாதையை மறிப்பது சரியானதுதானா? இதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலே, யானைகளை அழிவிலிருந்து காக்கலாம்.

தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி படுகாயமடைந்த பெண் யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, சிலிகுரி - துப்ரி இடையே ஓடும் இண்டெர்சிட்டி ரயில் மோதிய வேகத்தில் 30 மீட்டர் தொலைவுக்கு யானை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட யானை


காலை 8.10 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் பயங்கரமாக மோதியதில் 30 மீட்டர் தொலைவுக்கு யானை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தில், யானை படுகாயமடைந்தது. ரயிலின் எஞ்சின் பகுதியும் பலத்த சேதமடைந்தது.

உடம்பெல்லாம், சிராய்ப்பு காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட, தவழ்ந்து சென்று பின், ஒரு மரத்தின் அருகே எழுந்து நிற்கிறது அந்த யானை. இந்த காட்சியை ரயில் பயணிகள் தங்களது போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள், பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது. கம்பீரமாக காட்டில் வலம் வரும் யானையா? இப்படி என்று பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன் நாடே குலுங்கியது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் யானைக்கு வனத்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வந்தனர். உள்காயம் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், வலியால் அந்த யானை கதறித்துடித்தது.

நேற்று இரவு அந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், 2015-16 ஆண்டில் அப்பகுதியில் 25 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு விபத்து குறைந்ததால், ரயில் வேகத்தை 50 கிமீ ஆக அதிகரிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு, தற்போது வரை 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் அங்கு இயக்கப்படுகிறது.

யானையின் நெற்றியைப் பார்க்கும்போது அதன் மஸ்து நேரமிது.. ஆனாலும் மக்கள் கூடியிருப்பதை பார்த்தும் அமைதியாக கடந்து போகிறது இந்த யானை.. உண்மையில் மதம் பிடிப்பது மனிதனுக்கு மட்டுமே..

இந்தியாவின் 88 யானை வழித்தடங்களில் 21 வழித் தடங்களை இதுப் போல் இரயில் தண்டவாளங்கள் கடந்து போகிறது. இந்திய இரயில்வேக்கு எம்முடைய தாழ்மையான வேண்டுகோள். யானை வழித்தடங்களில் செல்லும் இரயில்களை மிக கவனமாக இயக்குங்கள்... நீங்கள்தான் அவற்றின் வழித்தடத்தை கடந்து போகிறீர்கள்.. யானைகள் அல்ல...

காடுகளின் காவலனான யானைகள், இயற்கை நிகழ்வாக வலசை செல்வதை எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல், அதிவேக ரயில்பாதை, அதிவேக நெடுஞ்சாலைகள் இதற்கெல்லாம் அனுமதி கொடுப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT