சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவை ஒரே குரலாக்கிய கரோனா வைரஸ் நோய்

ஒரே நாடு ஒரே இந்தியா என்று கடந்த சில மாதங்களாக மத்திய அரசு தங்களது கொள்கையாக பிரகடனப்படுத்தி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கூடியிருக்கும் பொதுமக்கள் கூட்டத்தில் பேசுகிற போதெல்லாம் அதனை தெளிவுபடுத்தி வந்தார்.

ஒரே நாடு என்கிற கட்டுப்பாடு வருவதன் மூலம் இந்தியா வளர்ச்சியும், முன்னேற்றமும் அடையும் என்றும் அதுவே தங்களின் குறிக்கோள் என்று மத்திய அரசின் இதர அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர். ஆனால் கரோனா வைரஸ் நோய் இந்தியப் பிரதமரின்  இந்தியா ஒரே நாடு என்கிற திட்டத்தை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளது என்றே கூறமுடியும்.

கரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் வெகு வேகமாக காற்றைப் போல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்த போது இந்தியர்கள் அனைவரும் கதிகலங்கி போயினர். இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியுமா உயிர்ப்பலியை குறைத்திட முடியுமா என்கிற கலக்கம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஏற்பட்டதை தவிர்த்திட முடியவில்லை. சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற வியந்து அண்ணாந்து பாரத்த நாடுகளிலும் உயிர்ப்பலி சர்வசாதாரணமாக அதிகரிப்பதை நாள்தோறும் பார்ந்து வந்த இந்திய மக்கள் நோய்க்கான ஆபத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உணரத் தொடங்கியிருந்தனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகள் எடுத்திடும் அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பது என்பதை தங்களை அறியாமலே முடிவெடுத்திருந்தனர். பாதுகாப்பு, கொடூர நோய் பாதிப்பிலிருந்து விலகிட வேண்டும் என்கிற பிரார்த்தனைகளாக தொடங்கிய அவர்களது அக்கறை கவலைகளாக மாறத் தொடங்கியது கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து கடவுளர்கள் ஒவ்வொரு நிமிடமும் தங்களுடன் இருந்து தங்களை காப்பாற்றிட வேண்டும் என்பது அதிகபட்சத் தேவையாகவும் கவலையாகவும் மாறிப் போனது.

நோய்த் தொற்று அதிகமானதையடுத்து தங்களது குடும்பம், தங்களது வேலை, தங்களது உறவினர்கள், தங்களது தொழிற்சாலை, தங்களது மக்கள் என்கிற கவலையாக அவர்களது கவலை பரந்து விரிந்தது.  வழக்கம்போல் கரோனாவிற்கென்று தொடங்கப்பட்ட தனி சிறப்பு வார்டுகளில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமை அவர்களது அலட்சியங்களாக மாறி நின்றது.

மாநில அரசுகள் நோய் பாதிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையும், நோய் பாதிப்பில் தங்களது மாநிலமும் பாதிப்புக்குள்ளாவதை உணர்ந்தவர்கள் தங்களது அருமையுணர்ந்து தங்களது நேரங்களை நோயாளிகளுக்காக ஒதுக்கத் தொடங்கினர். மிகப்பெரும் குழப்பத்தில் இருந்த மக்கள் இந்த நோய் ஏன் வந்தது எதற்காக வந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்ததை அனைவரின் தினசரி வாழ்க்கையில் உணர முடிந்தது.

தங்களது மாமூல் வாழ்க்கை நோயின் பாதிப்பிற்காக மாற்றப்படுவதை சட்டென தங்களிடம் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்க முடியவில்லை பலராலும். இந்தத் தடுமாற்றம் சாதாரண ஏழைகளிடமிருந்து பணக்காரர்கள் வரை சரிசமமாகத்தான் நீடித்து வந்தது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், குழப்பம், அலட்சியம் என்று தொடர்ந்த இந்தியாவில் ஒரு குரலின் வேண்டுகோளுக்கு இணங்கி 22ஆம் தேதி நாடு முழுவதும் கிராமங்களிலிருந்து பெரு நகரம் வரை தன்னார்வ சுய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த அதிசயம் எப்படி சாத்தியம், உயிரின் மீதான பேராசையா, இப்படி பொது நோயால் பாதிக்கபடக்கூடாது என்கிற கவலையா எது இருந்தபோதிலும் ஒரு நோயை முன்னிறுத்தியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையோ ஒரு மத்தியத் தலைமையின் உத்தரவுக்கு பணிந்து நாடு இணைந்தது இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறையென்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

மத்திய அரசின் ஒரே நாடு என்கிற அரசு ஆணை அல்லது கருத்துருவை மிகவும் எளிமையாக நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இந்த தொடக்கம் இந்தியாவிற்கான புதிய ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும், நன்மைக்கான ஒத்திசைவு பெற்ற குரலாக தொடர்ந்து ஒலித்திட வேண்டும் என்பதே அரசியலற்ற, கட்சிகளற்ற குரலற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT