உலகத்தில் மனிதன் பிறந்துவிட்டால், இறப்பது கட்டாயம். பிறப்பென்றால், இறப்பும் நிச்சயம் இருந்தே தீரும். இதில், சிறு துளிக்கூட மாற்றமேயில்லை. இறப்பில் மாற்றம் இல்லை என்றாலும், உயிர் போகும் முறையில் எவ்வளவோ மாற்றங்கள் உண்டு. அதில் ஒன்றுதான், நாமே கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் விடக் கூடிய மரணம். அதிலும் ஒன்றுதான் சிகரெட். புகைப்பதைப் பற்றிய விழிப்புணர்வுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
புகையிலையில் அடங்கியுள்ள நச்சுப் பொருள்கள் எனப் பார்த்தால், மெல்லக்கூடிய வகையின் புகையிலையான பான்பராக், ஹான்ஸ் போன்றவைகளில் 300 வகையான நச்சுப் பொருள்கள் உள்ளன. பீடி, சிகரெட் போன்ற புகைக்கும் புகையிலையில் 4 ஆயிரம் வகையான நச்சுப் பொருள்கள் உள்ளன. இவற்றில் 200க்கும் மேற்பட்டவைகள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய நச்சுப் பொருள்கள் ஆகும்.
தீப்பெட்டியில் நெருப்பு வருவதற்கு உள்ள உரசும் பகுதியில் இருக்கும் ஹெக்ஸாமின், பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருளான நைட்ரோ பென்சீன், கழிவறையையும், தரையையும் சுத்தப்படுத்தும் திரவமான அமோனியா, பூச்சிக்கொல்லி மருந்தான பினாயில், கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் திரவமான காட்மியம், பெட்ரொலின் வாயுவான மீத்தேன், ஆல்கஹாலான எத்தனால், நகத்தில் ஏற்படும் பூச்சுகளை சுத்தப்படுத்தக் கூடிய திரவமான அசெட்டோன், ரசக்கற்பூரம் என்று சொல்லக் கூடிய பூச்சிக்கொல்லி உருண்டையான நாப்தலின், மெழுகு தயாரிக்கப் பயன்படும் அமிலமான ஸ்டீரிக் அமிலம், பிளாஸ்டிக் பைப் தயாரிக்கப் பயன்படுத்தும் வினைல் குளோரைடு, பூச்சிக்கொல்லி மருந்தான டியல்ட்ரோன், வாகனங்களிலிருந்து வரக்கூடிய புகையான கார்பன் மோனாக்ஸைடு, விஷப்பொருளான ஆர்சனிக், ஹைட்ரஜன் சையனைடு, அடிமைப்படுத்துவதற்கு நிக்கோட்டின் உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் உள்ளன.
புகையிலையில் நிகோடின் என்ற அடிமைப்படுத்தும் பொருள், கஞ்சா, ஹஷிஷ் என்பவைகளைவிட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகும்.
இந்தியாவில் புகையிலையால் ஒரு ஆண்டிற்கு சுமார் 11 லட்சம் பேர் பலியாகிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் 3,300 பேர் பலியாகிறார்கள். வாய் குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலைப் பழக்கத்தால் மட்டுமே வருகிறது. 20க்கும் மேற்பட்ட வயதிலிருந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில் 50 சதவீதத்தினர் இப்பழக்கம் தொடர்பான நோய்களால்தான் மரணம் அடைகிறார்கள். புகை பிடிப்பவர்களில் 89 சதவீதத்தினர் 18 வயதுக்குள் இந்த மோசமான பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில், புகை பிடிப்போர் வாழ்நாளில் 22 முதல் 26 ஆண்டுகளை இழக்கின்றனர். 60 மி.கி.நிகோடினை ஒரேநேரத்தில் உட்கொண்டால் அது ஆரோக்கியமான மனிதனின் உயிரைப் போக்க போதுமானது.
புகையிலை உபயோகிப்பதால் வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பையின் வாய் உள்ளிட்ட உறுப்புகளில் கட்டாயம் புற்றுநோயை ஏற்படுத்தும்.
இதயம் மற்றும் இரத்தக் குழாய் தொடர்பான நோய்களை புகையிலைப் பழக்கம் தீவிரமாக்குகிறது. புகையிலைப் பழக்கத்தால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்.
புகையிலை இனப்பெருக்க கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ஆண்களிடையே ஆண்மைக் குறைவு, சக்தி இழப்பு, பெண்களிடையே மலட்டுத்தன்மை ஆகியவை ஏற்படுகிறது.
புகை பிடிப்பதால் வாய் துர்நாற்றம், தலைமுடி, உடைகள், கைகள் ஆகியவற்றில் துர்நாற்றம் ஏற்படும். பல் மற்றும் விரல்களில் கரை படிதல், வாய் மற்றும் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதால் அருகிலுள்ள குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ்துமா, வளர்ச்சி குறைவு, பிறக்கும்போதே குறைந்த எடையுடன் பிறத்தல், அறிவு வளர்ச்சி குறைவு, மூளை வளர்ச்சி குறைவு, பிறந்தவுடன் இறந்து விடுவது போன்றவைகளும் ஏற்படும்.
ஒவ்வொரு சிகரெட்டினாலும் புகை பிடிப்போர்க்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது. ஆண்டுதோறும் புகையிலை விற்பனையால் இந்தியாவிற்கு சுமார் ரூ. 32 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு செலவிடப்படும் ரூபாய் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 37 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படுகிறது. அரசாங்கத்திற்கு புகையிலையினால் வரும் வருமானத்தை விட, புகையிலையால் ஏற்படும் தனிநபர் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு செலவு செய்வதில் வரும் இழப்பே பெரிதாகும். ஏறத்தாழ 2 லட்சம் ஹெக்டேர் காடுகளும் அதைச் சார்ந்த நிலங்களும் புகையிலை பயிரிடுவதற்காக அழிக்கப்படுகிறது.
சட்டப்பிரிவு 4ன் கீழ் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிரிவு 5ன் கீழ் புகையிலை சம்பந்தமான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 6(ய)ன் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகையிலைப் பொருள்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளன.
சரி, இத்தனை நாட்கள் சிகரெட் பிடித்து விட்டோம் இனிமேல் நிறுத்தி என்ன பயன் என்று நினைக்க வேண்டாம். இதோ பயன் உள்ளது.
புகையிலையை நிறுத்திய 20 நிமிடங்களில் உங்கள் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு சீராகிறது.
8 மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நம் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.
24 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் அபாயம் குறைகிறது. நுரையீரலிலிருந்து சளி மற்றும் இதரக் கழிவுகள் வெளியேறுகிறது.
48 மணி நேரத்தில், நிகோடின் நம் உடலை விட்டு வெளியேறி விடும். ருசி நுகரும் திறன் அதிகரிக்கிறது. சுவாசம் சுலபமாகிறது. சக்தி அதிகரிக்கிறது.
2 முதல் 12 வாரங்களில் இரத்த ஓட்டம் சீராகிறது.
3 முதல் 9 மாதங்களில், சுவாசக் கோளாறு, இருமல் உள்ளிட்டவைகள் நீங்கி விடுகின்றன.
5 ஆண்டுகளில், பின் இருதய நோய்கள் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, இருதய நோய்க்கான வாய்ப்பு 100 சதவீதம் குறைந்து ஆரோக்கியமான மனிதனைப் போல வாழ முடியும்.
புகையிலைப் பழக்கம் உள்ள நண்பர்களே, இன்றே, இப்பொழுதே புகைப்பதை நிறுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.