சிறப்புக் கட்டுரைகள்

தோடரினத்தில் வழக்குரைஞராக தேர்ச்சி பெற்றுள்ள முதல் பெண் நந்தினி

தினமணி

உதகை: பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்கிறார் தோடரினத்தில் வழக்குரைஞராக தேர்ச்சி பெற்றுள்ள முதல் இளம் பெண் நந்தினி.

பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என, நீலகிரி மாவட்டத்தின் பூர்வீக பழங்குடியினத்தவரான தோடரின பழங்குடியினத்தை சேர்ந்த இளம் பெண் நந்தினி தெரிவித்தார். இச்சமுதாயத்தில் வழக்குரைஞராக தேர்வு பெற்றுள்ள முதல் பெண் என்ற வகையில் நந்தினி மகளிர் தினத்திற்காக நம்மிடம்  பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தமிழகத்தின் பூர்வீக பழங்குடிகள் என அழைக்கப்படும் 6 வகையான பழங்குடியினத்தவரும் வசித்து வருகின்றனர். தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர் மற்றும் காட்டுநாயக்கர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த இவர்களில் தோடர் சமுதாயத்தினரே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினரில் அதிகளவில் வளர்ச்சி அடைந்தவர்கள் என்ற வகையிலும் தோடரினத்தை கூறலாம். இவர்கள் மந்து என அழைக்கப்படும் வனத்தையொட்டி அமைந்திருக்கும் அவர்களுக்கான பிரத்யேக குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்கால கணக்கெடுப்பின்படி சுமார் 3,000 தோடரினத்தவர்கள் வசித்து வருகின்றனர்.  விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் அதிகளவில் ஈடுபட்டுள்ள தோடரினத்தவர்கள் அண்மைக் காலமாகத்தான் கல்வி வளர்ச்சியிலும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்கியுள்ளனர்.  இதன் காரணமாக பெரும்பாலானோர் தற்போது அடுத்த தலைமுறை குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.  இருப்பினும் உயர் படிப்புகளில் மிகக் குறைந்த அளவிலானவர்களே சாதித்துள்ளனர்.  இவர்களில் தோடரினத்தை சேர்ந்த ஒரு மாணவி அண்மையில்தான் பல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தோடரினத்தில் முதல்  பெண் வழக்குரைஞராக தேர்வு பெற்றுள்ள நந்தினி. 

இவரைத்தொடர்ந்து தோடரினத்தில் முதல் பெண் வழக்குரைஞர் என்ற அந்தஸ்த்தை இளம் பெண் நந்தினி பெற்றுள்ளார். தோடரின மக்களில் பலர் பல்வேறு துறைகளில் தற்போது உயர் படிப்புகளுக்கு முயற்சித்து வந்தாலும்  இவர் தனது இளங்கலை படிப்பை முடித்த பின்னர், வழக்குரைஞர் படிப்பையும்  முடித்துள்ளார்.   உதகை அருகேயுள்ள தவிட்டுக்கோடு மந்து பகுதியை சேர்ந்த  இவரது தந்தை சிறீகாந்த் ஒரு விவசாயியாவார்.   சென்னை சட்டக் கல்லூரியில்  5 ஆண்டு வழக்குரைஞர்  படிப்பை முடித்து வழக்குரைஞராக பயிற்சி பெறுவதற்காக தற்போது பார் கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளார். படிப்பை முடித்து வந்த பின்னர் அண்மையில்  உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பாக நந்தினி கூறுகையில்,  தோடர் பழங்குடியின மக்களிடையே முதல் பெண் வழக்குரைஞர் என்பது கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது சமுதாயத்தினருக்கு பல்வேறு  அரசுத்துறைகளிலும்  சிறந்த தொடர்புகள் இருந்தாலும், அதே அளவுக்கு பிரச்னைகளும் இருந்ததால் அவற்றிற்கு தீர்வு காண வேண்டுமென்பதற்காக சிறு வயதிலிருந்தே எனக்கு வழக்குரைஞராக வேண்டுமென்ற ஆசை இருந்தது.  இதற்காக கடுமையாக உழைத்தேன். தற்போது வழக்குரைஞராக தேர்வாகியுள்ள  நிலையில் தோடரின மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் பாடுபடுவேன்.  என்னைப் போலவே என் சமுதாயத்தில் உள்ளவர்களும் உயர் கல்வியை கற்று முன்னேறுவதோடு,  நீலகிரி மாவட்ட  மக்களுக்கும் சேவை செய்ய வேண்டுமெனவும்  தெரிவித்தார்.

கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களில்  அதிலும் பெண்களில் தற்போதுதான் ஒரு சிலர் உயர் கல்வியை கற்று முன்னேறி வருவது பழங்குடியின  மக்களுக்கு மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கும் பெருமையளிப்பதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT