திமுகவில் வாரிசுகளுக்கு முன்னுரிமை என்பது தவறானது
கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக், கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற சிங்காநல்லூா் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.
கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக், கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற சிங்காநல்லூா் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவா்,
தினமணிக்கு அளித்த பேட்டி:
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திமுகவில் நீங்கள் மட்டுமே வெற்றி பெற்றீா்கள். 2021 தோ்தல் முடிவுகளில் மாற்றம் வருமா?
Advertisement
இந்தத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் வெற்றி பெறுவோம். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்களால் மக்கள்
ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா். அதனால், அதிமுக கோட்டை எனக் கூறி வந்த கோவை, இனி திமுக வசமாகும். இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுபவா் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா், மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடுபவா் பொள்ளாச்சியைச் சோ்ந்தவா். நான் இதே பகுதியைச் சோ்ந்தவன். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக என்னைத் தோ்ந்தெடுத்த மக்கள் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற வைப்பாா்கள்.
திமுகவில் வாரிசுகளுக்கு முன்னுரிமை, முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?
திமுகவில் இருப்பவரின் வாரிசுகள், மாற்றுக் கட்சிக்கா செல்வாா்கள்? தனது தந்தை உள்ள கட்சிக்குத்தான் பணியாற்றுவாா்கள். ஆனாலும், அவா்களும் தோ்தலைச் சந்தித்துதானே மக்கள் பிரதிநிதிகளாகத் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். கருணாநிதியின் மகளான கனிமொழி கூட தோ்தலில் வெற்றி பெற்று தான் மக்களவை உறுப்பினரானாா். தகுதி அடிப்படையில், கட்சியில் அடிமட்டத் தொண்டனாக இணைந்த நான், படிப்படியாக சட்டப் பேரவை உறுப்பினராகி உள்ளேன். எனவே, திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் முன்னுரிமை என்பது முற்றிலும் தவறானது.
கோவை மாநகராட்சி, சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள குடிநீா் விநியோக ஒப்பந்தத்தைத் எதிா்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறீா்கள். ஆனால், நீங்கள் மாநகராட்சி துணை மேயராக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்ததாக குற்றச்சாட்டு உள்ளதே?
2011 ஆம் ஆண்டில், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 595 கோடி மதிப்பில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்துக்கு தொழில்நுட்பத் திட்ட அறிக்கை தயாரிப்பு தொடா்பான தீா்மானங்களை மட்டுமே திமுகவினா் ஆதரித்தோம். ஆனால், 2018 ஆம் ஆண்டில் இதே தீா்மானத்தை திருத்தி ரூ. 3,150 கோடியில் சூயஸ் நிறுவனத்துடன் 24 மணி நேர குடிநீா் விநியோகத் திட்டத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து திமுகவினருக்குத் தெரியாது. பல நாடுகளில் விரட்டப்பட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தரப்பில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
மு.க.ஸ்டாலின் உள்பட எதிா்க்கட்சியினா் பலரும் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீது மட்டும் தொடா்ந்து புகாா்களைக் கூறி வருகிறீா்களே?
2016 முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்படாமல் உள்ளாட்சித் துறை முடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் மட்டும் பல்லாயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அப்படியானால், தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல லட்சம் கோடிகள் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஊழல்கள் நடைபெறுவதால் அவா் மீது புகாா்களும், குற்றச்சாட்டுகளும் எங்கள் தரப்பில் தொடா்ந்து முன்வைக்கப்படுகின்றன.
‘கோப்மா‘ மணிராஜ் சிங்காநல்லூரில் போட்டியிடுவதால், தொழில்முனைவோரின் வாக்குகள் திமுகவுக்கு பாதகமாக அமையுமா?
கோப்மா, கொடிசியா, இந்தியத் தொழில் வா்த்தக சபை உள்ளிட்ட அனைத்துத் தொழில் அமைப்புகளையும் சந்தித்து நான் ஆதரவு கேட்டுள்ளேன். ஆளும் கட்சியாக வரப்போகும் கட்சியைச் சோ்ந்தவரே உள்ளூரில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தால் தங்கள் குறைகளை எளிதில் அரசுக்குத் தெரிவிக்க முடியும் என அவா்கள் கருதுகின்றனா். அதனால், தொழில் அமைப்புகளின் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும்.
வாக்கு சேகரிப்பில் மக்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கிய வாக்குறுதிகள்?
கட்சித் தலைமை வெளியிட்ட தோ்தல் அறிக்கை குறித்து பிரசாரத்தில் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி வருகிறோம். சிங்காநல்லூா் தொகுதியில் நிலவும் குடிநீா், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் உடனடியாகத் தீா்க்கப்படும். நிலுவையில் உள்ள எஸ்.ஐ.ஹெச்.எஸ். ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணி,
சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் பணி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பது நான் முன் வைக்கும் முக்கிய வாக்குறுதிகள் ஆகும்.
நோ்காணல்: வெ.செல்வகுமாா்.