சிறப்புக் கட்டுரைகள்

மத்திய பிரதேசம்: இழந்ததை மீட்க பெரும் போராட்டம்!

ம.ஆ.பரணிதரன்

மத்திய பிரதேசம், இந்தியாவின் மையப்பகுதியில் அதன் இதயமாக கருதப்படும் மாநிலம். இங்கு கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும், 2023இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, வரும் தேர்தலில் 'இந்தியாவின் இதயத்தில்' மீண்டும் இடம்பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 29 மக்களவை தொகுதிகளுடன் ஆறாவது பெரிய மாநிலமான இங்கு ஏப்ரல் 19, 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பாஜகவின் வியூகம்: நரேந்திர மோடி என்ற தலைமைத்துவத்தை மட்டுமே துணையாகக் கொண்டு இங்கு தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நிலையான அரசு, வளர்ச்சியடைந்த பாரதம், தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் மாநிலத்தில் ஆளும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது.

2014-இல் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நேரத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களை பாஜக வென்றது.

அப்போது வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்து 2019 தேர்தலில் 28 தொகுதிகளில் வென்று தனது நிலையை ஒரு படி மேம்படுத்திக் கொண்டது பாஜக.

2019 தேர்தலில் பாஜக அலைக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல் நாத் சிந்த்வாரா தொகுதியில் மட்டுமே வென்றார்.

இதைத்தொடர்ந்து 2023-இல் நடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 163 இடங்களை பாஜக கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

இங்குள்ள 29 மக்களவை தொகுதிகளில் 10 பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. "இந்தியா' கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் அதன் 28 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கூட்டணியில் உள்ள சமாஜவாதி கட்சிக்கு ஓரிடத்தை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.

ஓபிசி வாக்குகள்: இந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதல்வராக்கியுள்ளது பாஜக மேலிடம். இதன் மூலம் அவர் சார்ந்த பெரும்பான்மை சமூக வாக்குகளை மக்களவைத் தேர்தலில் கவரலாம் என்று அக்கட்சி மேலிடம் நம்புகிறது.

மோகன் யாதவ் முதல்வரான பிறகு, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா போன்ற முக்கிய தலைவர்களுடன் இணக்கமாக இல்லாதது கட்சியின் செயல்பாடுகளுக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

மறுபுறம் பாஜக ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள், வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டி அதையே தேர்தல் முழக்கமாகவும் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ் அணியில் சமாஜவாதி கட்சி கஜுராஹோ தொகுதியில் போட்டியிடுகிறது. இத்துடன் ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகின்றன.

காங்கிரஸின் பிரச்னை: காங்கிரஸில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீது பட்வாரி, எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் ஆகியோர் ஓபிசி மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஐந்து நாட்களுக்கு மத்திய பிரதேசம் வழியாக திட்டமிடப்பட்டபோது, அதில் பழங்குடியின சமூகங்கள் வாழும் குவாலியர்-சம்பல் மற்றும் மால்வா பகுதிகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

எனினும் கட்சியின் புதிய தலைமைக்கு முன்னாள் முதல்வர்களான கமல்நாத், திக்விஜய் சிங், மூத்த தலைவர்கள் அஜய் சிங், அருண் யாதவ் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்காமல் உள்ள போக்கு காங்கிரஸுக்கு பலவீனத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுரேஷ் பச்செளரி போன்ற மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு மாறியதும் காங்கிரûஸ பாதிக்கக் கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.

பகுஜன் சமாஜ் கட்சி விந்தியா மற்றும் சம்பல் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள பட்டியலின சமூகத்தை கவரும் வகையில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதனால் சிதறும் வாக்குகள் காங்கிரஸுக்கு பாதகமாகலாம் என்ற கருத்து உள்ளது.

மொத்தத்தில் முந்தைய தேர்தல்களில் எதை இழந்தோமா அதை மீட்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மற்றும் காங்கிரஸ் தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. யாருக்கு வெற்றி என்பது ஜூன் 4-இல் முடிவுகள் வெளியாகும்போதே தெரிய வரும்.

விஐபி தொகுதிகள்

குணா

ஜோதிராதித்ய சிந்தியா பாட்டியான ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா காலம் முதல் இத்தொகுதி அவர்களது குடும்ப கோட்டையாக இருந்தது. 2019-ஆம் ஆண்டில், அவர் 1.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கே.பி.யாதவிடம் தோற்றார்.

2020-இல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து தற்போதைய மோடி அரசில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இப்போது பாஜக வேட்பாளராக மீண்டும் குணாவில் களம் காண்கிறார் சிந்தியா.

சிந்த்வாரா

இந்த தொகுதியை 1980-ஆம் ஆண்டு முதல் ஒன்பது முறை வென்றிருக்கிறார் கமல்நாத். 1996-இல் கமல் நாத்தின் மனைவி அல்கா நாத் 2019-இல் மகன் நகுல் நாத் வென்றனர். சிந்த்வாரா மக்களவை தொகுதியின் கீழ் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளும் காங்கிரஸின் வசம் உள்ளன. கமல்நாத்தின் செல்வாக்கை சோதிக்கும் தேர்தலாக வரும் தேர்தல் அமையும்.

விதிஷா

முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் 20 வருடங்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் களத்தில் நுழைந்துள்ளார். அந்த வகையில் இது அவருக்கு ஆறாவது போட்டி. இந்த தொகுதி எம்.பி.ஆக இதற்கு முன்பு பாஜக தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் (1991), சுஷ்மா ஸ்வராஜ் (2009 மற்றும் 2014) ஆகியோர் இருந்தனர். சிவராஜ் சிங் செளஹானின் சொந்த ஊரான புத்னி, விதிஷா மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது.

போபால்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவின் பிரக்யா சிங் தாக்குர், 2019-ஆம் ஆண்டு போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு முன்னாள் மேயர் அலோக் குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

மாண்ட்லா

பாஜக தலைவர் ஃபகன் சிங் குலஸ்தே மத்திய அமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அவரை மீண்டும் இதே தொகுதியில் பாஜக மேலிடம் நிறுத்தியுள்ளது.

2009 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பசௌரி சிங் மஸ்ராமிடம் தழுவிய தோல்வி நீங்கலாக, 1996 முதல் இங்கு அனைத்து தேர்தல்களிலும் குலஸ்தே வென்றுள்ளார்.

திகம்கர்

மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் உத்தர பிரதேசத்தில் ஜான்சி எல்லையில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள திகம்கர் (தனி) தொகுதியில் களம் காண்கிறார். இங்கு இவர் போட்டியிடுவது நான்காவது முறை. இவரை எதிர்த்து பங்கஜ் அஹிர்வாரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியின் திகம்கர் பகுதி பட்டியலின அணி தலைவராக உள்ளார்.

கஜுராஹோ

பாஜக மாநிலத் தலைவர் விஷ்ணு தத் சர்மா இங்கு இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். இங்கிருந்து 1989 - 1998 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உமாபாரதி நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 -இல் மூத்த காங்கிரஸ் தலைவர் சத்யவிரத சதுர்வேதி கஜுராஹோவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே சமயம் பாஜகவின் ராம்கிருஷ்ண குஸ்மரியா 2004-இல் வெற்றி பெற்றார். அப்போது முதல் பாஜக வசம் இந்த தொகுதி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT