இளந்தளிர் இலக்கிய நூல்கள் 
சிறப்புக் கட்டுரைகள்

இளந்தளிர் இலக்கிய நூல்கள்: நூல்கள் அறிமுகம் | விமர்சனம்

தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் சிறார் இலக்கிய வரிசையில் வெளியிட்ட நூல்களின் அறிமுகமும் விமர்சனமும்...

பா. செல்வபாண்டியன்

தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் சிறார் இலக்கிய வரிசையில் நூறு நூல்கள் வெளியிடத் திட்டமிட்டு முதற்கண் ஆறு நூல்கள் பொதுவெளிக்கு வந்துள்ளன. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முன்னெடுப்பில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு பல்வேறு அலுவலக நடைமுறைகளைக் கடந்து மாணவ மாணவிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளன.

புதிய முயற்சி என்ற வகையில் ஏற்பட்ட கால தாமதங்களை கடந்து மலர்ந்துள்ள இந்நூல்கள். சமூகப் பொறுப்புணர்வுடனும் செய்நேர்த்தியுடனும் கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நூல்களின் வருகையும் தொடங்கியுள்ளன.

பூப்பூவாய்ப் பூத்திருக்கு

பூப்பூவாய்ப் பூத்திருக்கு - 5-8 வயது சிறார்களுக்கு, விலை: ௹.65, சாலை செல்வம் எழுத்தில் கார்த்திகா ஓவியத்தில் பூக்கள் நிறைந்தப் பக்கங்களில் சொற்கோலங்களாக மலர்ந்துள்ளன.

பூமிக்குக் காய்ச்சல்

பூமிக்குக் காய்ச்சல் - 9-11 வயது சிறார்களுக்கு, விலை: ௹ 50, ஆதி வள்ளியப்பன் எழுத்தில் முரளியின் ஓவியத் துணையுடன் பூமியின் கதகதப்புடன் வந்துள்ளது. மழை, பனி, வெயில் என காலங்களை அடையாளம் காணும் குழந்தைகள் கவின், நிலா ஆகியோருக்கு பூமியை போர்த்தியிருக்கும் கரியமில வாயு தந்துள்ள காலநிலை மாற்றங்கள், சீற்றங்கள் குறித்தும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அறிவியல் செய்திகளை எளிய கதையாக வடிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்களின் அதிசயம்

வண்ணங்களின் அதிசயம் - 12-14 வயது சிறார்களுக்கு நான்கு நூல்கள் வந்துள்ளன. சரிதா ஜோ எழுத்தில் முரளி ஓவியத்தில், விலை: ௹. 50, இருபால் நண்பர்கள் ஐவர் பள்ளி முடிந்துச் செல்லும் வழியில் காண்கின்ற மலர்களுக்கு வண்ணமும் வாசனையும் இல்லாமலிருந்தால் என்ன ஆகுமென தங்களுக்கு அறிமுகமான வைத்தியர் தாத்தாவிடம் வினவுகிறார்கள். அவர்களுடன் உரையாடும் தாத்தா, பூச்சியினங்கள் பறவையினங்கள் வெவ்வேறு வண்ணங்களை வாசனைகளை கண்டு நுகர்வதால் காடு செழிக்கும் கதையை சொல்கிறார். இக்கதை சூழலியல் விழிப்புணர்வை கதை - ஓவியமாகச் சொல்கிறது.

ஆண்கள் பலசாலியா?

ஆண்கள் பலசாலியா? - விலை: 65, சாலை செல்வம் எழுத்தில் முரளி ஓவியத்தில் வந்துள்ளது. படிக்கும் இடத்திலும், விளையாட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும், குடும்பத்திலும் பெண் எதிர்கொள்ளும் கேள்வி ஆணா பெண்ணா யார் பலசாலி என்பதே. இதனை இருபால் மாணவர்கள் வகுப்பறையில் எழுப்பி இயல்பாக அவர்களுக்கு 'இருவரும் சமமே', என உணர்த்துகிறார் ஒரு வகுப்பாசிரியர்.

தாத்தாவுக்குத் தாத்தா

தாத்தாவுக்குத் தாத்தா - விலை: ௹. 50, உதயசங்கர் எழுத்தில், நா.இராமகிருஷ்ணன் ஓவியத்தில் மிளிர்கிறது கதை. வீட்டிலுள்ள கரப்பான் பூச்சிகள், பல்லிகள் எல்லோருக்கும் அச்சத்தையும் அருவருப்பையும் தருகிறது.

ஒரு கரப்பான் தாத்தா தங்கள் கதையைச் சொல்லி, உலகம் என்ன மனிதர்களுக்கு மட்டும் உருவானதா? இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லா உயிர்களையும் படைக்கிறது என்றும் மனிதனை விட மூத்தக்குடி தாங்களே என்றும் இயம்புகிறது. கதை முடியும்போது கதையை கேட்ட மீனா பாப்பாவும் நாமும் தெளிவடைகிறோம்.

மாதவிடாய்

மாதவிடாய் - விலை: ௹ 65, பேசக்கூடாத செய்தியாக இருந்த மாதவிடாயை எழுத்தில் எம்.எஸ்.பொற்கொடியும் ஓவியமாக அனிஷா மரியாவும் பேச வைக்கிறார்கள். ஏழாம் வகுப்பு மாணவி கவிதா பூப்பெய்தும் நிலையில் பாட்டியின் கடினமான அணுகுமுறையால் குழம்பி அச்சப்படுகிறாள். அவரது அம்மா தேன்மொழி அவளை அரவணைத்து மாதவிடாய், அதன் சுழற்சி, கருவுறுதல் என்பதை விளக்குகிறார். இந்த கதை வளரிளம் மாணவிகளுக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தேவையான ஒன்று.

மேற்கண்ட ஆறு நூல்களில் வரும் பாத்திரங்கள், பெயர்கள், உறவுகள், நட்புகள் சமூகப் பின்புலங்கள் ஆகியனவற்றை படைப்பாளிகளும், கதைகள் சீராய்வுக் குழுவினரும், திட்ட அமலாக்க குழுவினரும் உருவாக்க எடுத்த முயற்சியும் உழைப்பும் பாராட்டத்தக்கன.

குழந்தை இலக்கிய முன்னோடிகள் பெ.தூரன், அழ.வள்ளியப்பா ஆகியோரின் கனவுகள் பல்வேறு வகையில் நிறைவேறி வரும் நிலையில்.. .தற்போது அரசும் செயல்வடிவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT