அரியலூர் ரயில் விபத்து!
1956 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.20 மணி!
ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த விபத்து நேரிட்டது.
நவ. 22 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், அரியலூர் ரயில் நிலையத்துக்கும் கல்லகம் ரயில் நிலையத்துக்கும் இடையே மருதையாற்றுப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. பலத்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட, பாலக் கரைகள் உடைத்துக்கொண்ட நிலையில் ரயிலின் என்ஜினும் 7 பெட்டிகளும் தடம்புரண்டு ஆற்றுவெள்ளத்தில் விழுந்துவிட்டன. ரயிலின் எட்டாவது பெட்டி தடம்புரண்டாலும் ஆற்றுக்குள் விழாமல் நின்றுவிட்டது.
இந்த விபத்தில் முதல் நாளில் மட்டும் 111 உடல்கள் மீட்கப்பட்டன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பல பயணிகளின் உடல்கள் பின்னர் அருகிலுள்ள சவுக்குத் தோப்புகளில் சிக்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டன.
இந்த விபத்தில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்துவிட்டன. இந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் 80 முதல் 90 பேர் வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் திருச்சி மாவட்ட (இப்போதைய திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய) ஆட்சியர் ஆர்.எஸ். மலையப்பனும் [மக்கள் ஆட்சியர் மலையப்பன் என்று இப்போதும் திருச்சி மாவட்டத்தில் புகழப்படும் இவர் பெயரில் குடியிருப்புப் பகுதிகூட இருக்கிறது!] துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண உடையாரும் சென்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாகப் பலராலும் அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை.
இந்த விபத்து பற்றி மாலையில் ரயில்வே விளம்பர அதிகாரி வெளியிட்ட அறிக்கை:
“என்ஜினும் முதல் 7 பெட்டிகளும் 174-வது மைலிலுள்ள 70 அடி நீளமும் 15 அடி ஆழமும் கொண்ட ஆற்றில் விழுந்து பெட்டிகள் ஒன்றுக்கொன்று செருகிக்கொண்டுவிட்டன. இந்த விபத்து நிகழ்ந்ததை தட்சிண ரயில்வே நிர்வாகம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
முதல் 6 பெட்டிகளும் பிரயாணிகள் ஏறுபவை. அவற்றில் 4 மூன்றாம் வகுப்பு, 2 மேல் வகுப்புகள். திருச்சியிலிருந்து வைத்திய சிகிச்சைக்காகத் துரிதமாக வண்டிகள் அனுப்பப்பட்டன. அவற்றை அடுத்து விபத்து நிவாரண விசேஷ வண்டிகளும் உடனடியாகச் சென்றன.
சேதம் மிகவும் கடுமையாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. இதுவரை 104 சடலங்கள் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. திருச்சி சென்ற வைத்திய நிவாரண ஸ்பெஷலும் துரதிருஷ்டவசமாக ரயில் பாதை தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால் புள்ளம்பாடிக்கும் லால்குடிக்கும் இடையே நிறுத்தப்பட்டிருக்கிறது. காயமடைந்த நோயாளிகளைத் திருச்சியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட வைத்திய உதவி மோட்டார்களில் (ஆம்புலன்ஸ்களில்) அழைத்துப் போக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தூத்துக்குடி எக்ஸ்பிரஸின் பின்னால் இருந்த 4 பெட்டிகளும் அரியலூர் கொண்டுவரப்பட்டன. இவற்றில் இருந்த பயணிகள் பத்திரமாக இருக்கிறார்கள். மீட்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.”
ரயில் விபத்து பற்றித் தகவல்கள் தெரிவிப்பதற்காக அவசர விசாரணை ஆபிஸை தட்சிண ரயில்வே அதிகாரிகள் ஏற்படுத்தியிருந்தனர். “இதன் டெலிபோன் எண் – 2901, எக்ஸ்டென்ஷன் 22. 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்தக் காரியாலயத்துக்கு இந்த நம்பருக்குப் போன் செய்து தேவையான தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்” என்று தட்சிண ரயில்வே அதிகாரி எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
விபத்துக்குள்ளான ரயிலை ஓட்டிச் சென்ற டிரைவரின் பெயர் துரைசாமி நாயுடு. இவர் உடல் மிக மோசமாக நசுங்கிவிட்டிருந்தது. உள்ளபடியே இந்த ரயிலில் இவர் பணிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஒரு நண்பருக்கு உதவுவதற்காகப் பணி மாற்றி ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்த விபத்தில் என்ஜினில் இருந்த அனைவரும் – டிரைவர் எம்.ஜி. துரைசாமி நாயுடு, பயர்மேன்கள் எம். முனுசாமி, ஏ. கோதண்டபாணி ஆகிய மூவருமே உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களில் மதுரை மணி அய்யரின் சிஷ்யையான பிரபல பாடகி சாவித்திரி கணேசனும் ஒருவர்.
மருதையாற்றுக்கு அருகேயிருந்த ராஜுல்பாத் ஏரி உடைத்துக்கொண்டதால்தான் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் ரயில்வேக்கு மட்டும் ரூ. 6 லட்சம் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இன்றைக்கு இதன் மதிப்பு எத்தனை கோடியோ?
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடைசி வரையிலும் துல்லியமாகத் தெரியவில்லை. 147 வரை உயிரிழப்பு இருக்கலாம் கூறப்பட்டது. 145 என்று ரயில்வே தெரிவித்தது. ஆனால், 150-க்கும் அதிகமாகத்தான் இருக்கும் என்று கருதப்பட்டது. இறந்தவர்களில் 11 பேர் ரயில்வே ஊழியர்கள். விபத்தில் உயிரிழந்து அடையாளம் கண்டறிய முடியாத 60 பேருடைய உடல்கள் டால்மியாபுரத்தில் காவல்துறையினரால் புதைக்கப்பட்டன.
ஓ.வி. அளகேசன் பாராட்டு
தகவல் கிடைத்தவுடனே ரயில்வே துறை துணை அமைச்சரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஓ.வி. அளகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
கிராமவாசிகள் தக்க சமயத்தில் வந்து செய்த அற்புதமான உதவி பாராட்டத் தக்கது. நாராயணன், துரைசாமி, எம். பழனியாண்டி (இவர்களுடைய வழிவந்தவர்கள் இப்போதும் இந்தப் பகுதி கிராமங்களில் இருப்பார்கள்) ஆகியோர் செய்த தொண்டு அருமையானதும் போற்றத்தக்கதுமாகும் என்று பின்னர் குறிப்பிட்டார் அளகேசன்.
அதிகார ஸ்தாபனங்கள் வருவதற்காகக் காத்திராமல் சொந்த ஆபத்தையும் நோக்காமல் அடுத்தாற்போலுள்ள கிராங்களிலிருந்து ஏராளமான பொதுநல உணர்ச்சியுள்ள மக்கள் ஓடோடி வந்து நிவாரண வேலையில் புகுந்ததை வெகுவாகப் பாராட்டினார் மத்திய ரயில்வே துறை துணை அமைச்சர் ஓ.வி. அளகேசன்.
கொந்தளிக்கும் வெள்ளத்திலும் (அவர்கள்) அஞ்சாமல் நீந்திச் சென்று தங்களால் முடிந்த முழு அளவுக்குக் காயமடைந்தவர்களைக் கரை சேர்த்தனர். பிரேதங்களை மீட்டுக் கொணர்ந்தனர் என்று குறிப்பிட்டார் அவர்.
துக்ககரமானது
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின் சென்னை திரும்பிய தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம். பக்தவத்சலம், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆகியோர், இவ்விபத்து மிகவும் துக்ககரமானது என்று குறிப்பிட்டதுடன், உயிரிழந்தோரின் உடல்கள் உருக்குலைந்திருப்பதாகவும் சம்பவ இடத்தில் மோசமான நாற்றமடிப்பதாகவும் தெரிவித்தனர்.
அரியலூரின் படிப்பினை
அரியலூர் ரயில் விபத்து பற்றி மறு நாளே, நவ. 25 ஆம் தேதி, ‘தினமணி’ நாளிதழ் தலையங்கம் எழுதியது.
அரியலூரின் படிப்பினை என்று தலைப்பிடப்பட்டிருந்த இந்தத் தலையங்கம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் பொருந்தக்கூடிய வரிகளுடன் முடிக்கப்பட்டிருந்தது:
“ஸ்டேஷன்களை விஸ்தரிப்பதிலும் புதுப்பிப்பதிலும் லட்சக்கணக்கில் செலவிடப்படுகின்றன. இவையெல்லாம் தேவைதான். ஆனால், அவசியமானால், அந்த இனங்களிலுள்ள செலவுகளைக் குறைத்துக்கொண்டாவது, ரயில்வே பாலங்கள், பாதைகளின் பந்தோபஸ்து பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து கவனிக்க வேண்டியது அவசரமான வேலை எனக் கருதுகிறோம்.”
[வரலாற்றின் பக்கங்களிலிருந்து... தொடரும்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.