நாட்டுப்புறக் கலைஞர் என்று பரவலாக அறியப்பட்ட கே. ஏ. குணசேகரனின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா. காமராசு எழுதி, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘கே. ஏ. குணசேகரன்‘ என்னும் தலைப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.
128 பக்கங்களைக் கொண்ட இந்நூலை விரைந்து படித்து முடித்துவிடலாம் என்று தொடங்கினால், மாறாக ஒவ்வொரு தலைப்பில் அமைந்த கட்டுரைகளும் மிக ஆழமானவையாக அமைந்துவிட்டிருக்கின்றன. விரிவான அளவில் கே. ஏ. குணசேகரன் பற்றிய அனைத்துத் தரவுகளையும் திரட்டி நூலை வடித்தெடுத்திருக்கிறார், நூலாசிரியர் இரா. காமராசு.
கே. ஏ. குணசேகரன் பற்றிய தகவல்களுடன், பேராசிரியர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், பஞ்சாங்கம், அ. மார்க்ஸ், அ. ராமசாமி, மு. இராமசாமி, இன்குலாப், ஆறு. இராமநாதன், எழுத்தாளர்கள் கி.ரா., சுந்தர ராமசாமி, ரவிக்குமார், வெங்கட் சாமிநாதன், பா. செயப்பிரகாசம், சிவகாமி, பொன்னீலன், கவிஞர் சுகிர்தராணி, நாடகத் துறைப் பெரும்பேராசிரியர் சே. இராமானுஜம், முனைவர் கே. ஆர். ராஜா ரவிவர்மா போன்று அவருடைய படைப்புகள் பற்றிப் பல எழுத்தாளுமைகளின் கருத்துகளையும் தேடிக் கண்டடைந்து பதிவு செய்திருப்பது நூலுக்கு வலுச் சேர்க்கிறது.
நூலின் பக்க அளவு சற்றே குறைவு என்றபோதும், இந்நூலை எழுதி முடிக்க நூலாசிரியருக்கு மிகுந்த உழைப்பும், நீண்ட காலமும் தேவைப்பட்டிருக்கும் என்பதும் நமக்குப் புரிகிறது.
ஒரு நாட்டுப்புறக் கலைஞர், குறிப்பாக நாட்டுப்புறப் பாடகர் என்பதற்கும் மேலாக முனைவர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர், நாடக நடிகர், நாடகப் படைப்பாளி, நாடக இயக்குநர், கவிஞர், ‘தன்னானே’ நாட்டுப்புறக் கலைஞர் குழுவைத் தொடங்கியவர், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத் துறையில் இயங்கியவர், நாடகங்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்தவர், இசை அமைப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு, புதுவை அரசுகளின் கலைமாமணி விருது பெற்றவர், 36 நூல்கள் எழுதியவர், 24 நாடகங்களை அரங்கேற்றியவர், 10 ஒலிப்பேழைகளை வெளியிட்டவர், தலித் இலக்கிய முன்னோடி, தலித்துகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை உள்ளடக்கிய ‘ஒடுக்கப்பட்டோர் அரங்கை’ உருவாக்கியவர் என்று எத்தனையோ கலை அவதாரங்களை எடுத்தவர் கே.ஏ. குணசேகரன் என்பதை இந்நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடிக்கு அருகில் மாரந்தை என்னும் சிற்றூரில் பிறந்து, சாதி இழிவுக்கு ஆட்பட்டு, சாதிவெறிச் சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டுப் படித்துக் கல்வி பெற்று உயர்ந்த நிலைக்கு வந்தவர் கே. ஏ. குணசேகரன். அவர் பெற்ற கல்வி, அவரது படைப்புத்திறன், பாட்டுத்திறன், வகித்த உயர் பதவிகள் என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற பிறகும் அவர் தன்னை ஒரு தலித் என்று அடையாளப்படுத்துவதில் தயக்கம் காட்டியதில்லை. இதை அவரே கூறுகிறார். “நான் சினிமாவைத் தேடிப் போவதில்லை. ஒரு நாடகக் கலைஞர் என்ற முறையிலும், ஒரு தலித் கலைஞர் என்ற முறையிலும் என்னைத் தேடி வருகிறார்கள். பல பேர் சாதியை மறைத்து சினிமாவில் இருக்கிறார்கள். நான் என் சாதியை மறைப்பதில்லை. எனக்குப் பின்னால் தலித் கலைஞர்கள் நுழைவார்கள்”. ஆம், அவரது கணிப்பு வீண் போகவில்லை என்பதைத் தமிழ்த் திரையுலகம் இன்று உறுதி செய்திருக்கிறது.
தன்னைப் போலத்தான் பிறரும் இருப்பார்கள் என்று நம்பியதால், ஓர் இசை அமைப்பாளர் பற்றித் தனது நூலொன்றில், “தலித் இசைக்கருவியைத் திரை இசையில் பயன்படுத்திய முன்னோடி” என்று எழுதிவிட்டார். ஆனால் அந்த இசை அமைப்பாளரோ, “என்னை எப்படி தலித் கலைஞர் என்று எழுதலாம்?” என்று கே.ஏ. குணசேகரன் மீது மிகுந்த கோபம் கொண்டார். அத்தோடு நில்லாமல் அந்த நூலின் அத்தனை படிகளையும் விலைகொடுத்து வாங்கிக் கொளுத்தி மகிழ்ந்ததாக டாக்டர் கே.ஏ. குணசேகரன் நினைவு மலரில் பேரா. அரச முருக பாண்டியன் பதிவு செய்துள்ளார்.
“இது தொடர்பில் கே.ஏ.ஜி. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தலித்தியம் வீறுகொண்டு எழுந்த தருணத்தில் இதுவும் ஒரு ‘வடு’வாகவே வரலாற்றில் நிலைத்தது” என்று பதிவு செய்கிறார் நூலாசிரியர் இரா. காமராசு (‘வடு’ என்பது 2005-இல் காலச்சுவடு வெளியிட்ட கே. ஏ. குணசேகரனின் தன்வரலாறு).
இவரது திருமணம் சிவகங்கையில் 05-12-1987 அன்று ராகு காலத்தில் நடைபெற்றதாக அவரது மனைவி முனைவர் ரேவதி தெரிவிக்கிறார். அவர்களது மகன் அகமன், மகள் குணவதி இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. கே.ஏ. குணசேகரனின் குடும்பம் பெரிது. இவருடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள். இவரது தந்தை அழகன் ராணுவத்தில் சிறிது காலம் பணி புரிந்துவிட்டு, இளையாங்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அம்மா பாக்கியவதியும் ஓரளவு கல்வி கற்றவர். இளையாங்குடி கிரீன் டாக்கீஸ் என்னும் திரையரங்கில் பெண்களுக்கான நுழைவு வாயிலில் நுழைவுச்சீட்டு சரிபார்ப்பவராக பணிபுரிந்திருக்கிறார். அதன் காரணமாகவே குணசேகரனும் அவரது அண்ணனும் திரை அரங்கில் பல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றிருக்கின்றனர். பல நாள்கள் திரை அரங்கிலேயே உறங்கியும் இருக்கின்றனர்.
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் தடம் பதித்துச் சென்றிருப்பவர் முனைவர் கே. ஏ. குணசேகரன். அவருடன் அவரது அண்ணன் கே. ஏ. கருணாநிதியும், தங்கை ஜோதி ராணியும் பங்கெடுத்திருக்கின்றனர். பின்னாளில் அவரது மகள் குணவதியும் தன் தந்தையுடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். கே. ஏ. குணசேகரன் 17-11-2016-இல் தனது 56-வது வயதில் நீங்காப்புகழுடன் மறைந்தார்.
நூல் முழுவதும் கே. ஏ. குணசேகரனின் படைப்புகள் பற்றிய தரவுகளோடு, வாழ்நாள் முழுவதும் ‘தலித்’ என்னும் ஓர்மையில் அவர்பட்ட துன்பங்களும் ஆங்காங்கே இடம்பெறுவது, தீண்டாமை எத்தனை பெரிய துயரம் என்பதையும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அதன் தாக்கம் அவரது படைப்புகளிலும் வெளிப்பட்டது என்பது இயல்புதான். கே. ஏ. குணசேகரனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தேனீ போல தேடித் தேடிக் கண்டடைந்து நூலில் பதிவு செய்திருக்கும் நூலாசிரியர் இரா. காமராசு பாராட்டுக்குரியவர்.
நூலில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ‘மழி’ நாடகத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் கவிதையைப் பதிவு செய்வதற்குக் காரணம் காட்டுமிராண்டிகளைப்போல சாதி ஆணவக் கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திற்கும் இது தேவை என்று கருதுவதால்தான். மேல்சாதியைச் சேர்ந்த ஒரு பெரியவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார். அவரைக் காப்பாற்றும்படி கரையில் நிற்கும் முடிதிருத்தும் தொழிலாளி கருத்தவனிடம் பெரியவர் கெஞ்சுகிறார். அவர்களிடையேயான உரையாடல்தான் இக்கவிதையும் காட்சியும்.
பெரியவர்:
ஐயோ! ஐயோ!
நீர்ச்சுழல் சுற்றுதே
சேறு அடி மிரட்டுதே
யாரைப் பிடிப்பது
யார்துணை நிற்பது
கருத்தவனே வாடா
கையைக்கொஞ்சம் கொடுடா
கருத்தவன்:
ஐயா!
மேனியோ கருப்பு
சேரியிலே இருப்பு
மனுதர்ம விதிப்பு
மறுப்பதே என் பொறுப்பு.
உரையாடல் நீள்கிறது. பெரியவர் கெஞ்சுகிறார். கருத்தவனோ மனுதர்மத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறான். பெரியவர் நீரில் அடித்துச்செல்லப்படுகிறார். சேரிப் படித்துறையில் நின்றவர்கள் பெரியவரைக் காப்பாற்றுகின்றனர். பெரியவருக்கு ஞானம் பிறக்கிறது.
காப்பாற்றப்பட்டபிறகு பெரியவர்:
பொதுவாய் உள்ளது இயற்கை
சாதியாய்ப்பார்ப்பது இல்லையடா
ஊரும் சேரியும் இருகரையல்ல
நீயும் நானும் விலங்கினம் அல்ல
நாடகத்தின் இறுதிக்காட்சியில் கதைசொல்லியும் கலைஞர்களும்:
மனிதனைச் சாதியாகப் பிரித்த பண்பாடு
மலினப் பண்பாடு மரபு முரண்பாடு
கசடு காட்டாற்றில் கரையட்டும்
கழிவு வெள்ளத்தில் கழியட்டும்
மழிப்போம், புதியது மலர்விப்போம்”
கே. ஏ. குணசேகரன் - இரா. காமராசு, பக் - 128, விலை ரூ. 100, சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, தொலைபேசி: 044 - 24311741
இதையும் படிக்க: உயிர்சுருட்டி: நூல் அறிமுகம் | விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.