முதல்முறையாக வாகை சூடிய அணிகள்.  படங்கள்: ஏபி, ஆர்சிபி.
சிறப்புக் கட்டுரைகள்

2025: கோப்பைக்கு முதல் முத்தம்... வாகை சூடிய அணிகள்!

கிரிக்கெட், கால்பந்து உலகின் பொற்காலமான 2025 ஆண்டு குறித்து...

தினேஷ் ராஜேஸ்வரி

"மனிதர்கள் தங்கள் வாழ்வின் எந்தக் காலத்திலும், எதை வேண்டுமானாலும் சாதிக்கும் திறன் கொண்டவர்கள்"

- பாலோ கொய்லோ (பிரேசில் எழுத்தாளர்)

விளையாட்டு உலகில் ’2025’ என்ற ஆண்டு மறக்க முடியாததாக மாறியிருக்கிறது. இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு இந்தாண்டு பேரிடியாகவும், இத்தனை ஆண்டுகளாகக் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வந்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு புரட்சி மிகுந்த ஆண்டாகவே 2025 மாறியிருக்கிறது!

குறிப்பாக கிரிக்கெட், கால்பந்து உலகின் பொற்காலமாக இந்தாண்டு மாறியிருக்கிறது என்றும் சொல்லும் அளவுக்குப் பல அணிகள் முதல்முறையாகக் கோப்பைகளை வென்றுள்ளன.

முதல் முத்தமாக மறக்க முடியாத நினைவுகளைப் பெற்ற அணிகள் குறித்துப் பார்க்கலாம்...

பிஎஸ்ஜி

சாம்பியன் லீக் கோப்பையுடன் பிஎஸ்ஜி வீரர்கள்.

’விவசாயிகளின் அணி’ என கிண்டல் செய்யப்பட்ட பிஎஸ்ஜி (பாரின் செயின்ட் ஜெர்மன்) தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி தரும் வகையில் இந்தாண்டு விளையாடியது.

ஐரோப்பிய கிளப் கால்பந்துகளில் மிகவும் பெரிய கோப்பையாக கருதப்படுவது சாம்பியன்ஸ் லீக்தான். இந்தக் கோப்பையை பிஎஸ்ஜி அணி முதல்முறையாக இந்தாண்டு வென்றது.

இந்தச் சாதனையை அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கின் புற்றுநோயால் இறந்த மகளுக்கு பிஎஸ்ஜி ரசிகர்கள் சமர்ப்பித்தது கால்பந்து உலகில் எவராலும் மறக்கவே முடியாது!

சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி அணி விளையாடத் தொடங்கி 39 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி

ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி வீரர்கள்...

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமாகக் கிண்டல் செய்யப்பட்ட அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. ’ஈ சாலா...’ என்று ஐபிஎல் ரசிகர்கள் அவர்களை 17 ஆண்டுகளாகக் கேலி செய்து வந்தார்கள்.

அதேசமயம் அந்த அணியின் ரசிகர்கள் எப்போதுமே அந்த அணியைக் கைவிடாமல் ஆதரவு அளித்து வந்ததையும் மறுக்க முடியாது.

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் இந்தாண்டு வென்று சாபத்தை முடித்து வைத்தது.

தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள்...

இட ஒதுக்கீட்டு அணி, கறுப்பர்கள் அணியை வழிநடத்துவதா? எனக் கேலி செய்யப்பட்டவர்தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

இவரது தலைமையில்தான் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தித் தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது.

ஐசிசி கோப்பைகளையே வெல்லாமல் இருந்த தெ.ஆ. அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிரணி

உலகக் கோப்பையுடன் மகளிரணி.

இந்திய மகளிரணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகளாகப் போராடி வந்த இந்திய மகளிரணி ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையில் இந்தக் கோப்பையை வென்று அசத்தியது.

ஏற்கெனவே, ஆடவர் வரிசையில் 1983 (கபில் தேவ்), 2011 (எம்.எஸ். தோனி) ஒருநாள் உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோ அஹெட் ஈகிள்ஸ்

கேஎன்விபி கோப்பையுடன்...

நெதர்லாந்தில் நடைபெறும் கேஎன்விபி கோப்பையை 92 ஆண்டுகளில் முதல்முறையாக வென்று அசத்தியது கோ அஹெட் ஈகிள்ஸ் என்ற கால்பந்து அணி.

கிறிஸ்டல் பேலஸ் அணி

மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி எஃப்ஏ கோப்பை கிறிஸ்டல் பேலஸ் அணி வென்றது.

மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி எஃப்ஏ கோப்பை கிறிஸ்டல் பேலஸ் அணி வென்றது.

கடைசியாக 1905-ஆம் ஆண்டு வென்றிருந்த கிறிஸ்டல் பேலஸ் அணி 119 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது மிகப்பெரிய பட்டத்தை வென்று அசத்தியது.

போலாக்னா அணி

இத்தாலியன் கோப்பை வென்ற போலாக்னா அணி.

இத்தாலியன் கோப்பையை 51 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக போலாக்னா அணி வென்று அசத்தியது.

நியூகேஸ்டில் அணி

கரோபௌ கோப்பை வென்ற நியூகேஸ்டல் அணி.

கரோபௌ கோப்பையை நியூகேஸ்டில் அணி வென்று தங்களது 56 ஆண்டு கோப்பைகளை வெல்லாத சாபத்தை முறியடித்ததும் இந்தாண்டில்தான்.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது.

இந்தாண்டு யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது.

முதன்முதலில் 1972-இல் வென்ற இந்த அணி அடுத்து 1984-இல் வென்றது. அதன்பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

அடுத்து, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மீண்டும் தனது பலத்தை நிரூபித்தது. 40 ஆண்டுகளில் இந்த அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து கோப்பை இதுவேயாகும்!

மற்றும் சில கிரிக்கெட் அணிகள்... 

ஹோபர்ட், எம்ஐ கேப்டவுன், ஜார்க்கண்ட்.

ஹோபர்ட் ஹாரி கேன் ஆடவர், மகளிர் அணி முதல்முறையாக பிபிஎல் கோப்பைகளை வென்றன.

எம்ஐ கேப்டவுன் முதல்முறையாக எஸ்ஏ 20 கோப்பை வென்றது. துபை கேபிடல்ஸ் அணி முதல்முறையாக ஐஎல்டி20 கோப்பையை வென்றது.

ஜார்க்கண்ட் அணி முதல்முறையாக சையத் முஷ்டக் அலி கோப்பையை இஷான் கிஷன் தலைமையில் வென்றது.

விராட் கோலி, ஹாரி கேனின் முதல் கோப்பை

விராட் கோலி, ஹாரி கேன்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் இதுவரை எந்தவொரு மேஜர் பட்டத்தையும் கைப்பற்றவில்லை என்ற குறை இருந்து வந்தது. அவர் செல்லும் கிளப் எல்லாமே தோல்வியை சந்தித்தன.

இந்தாண்டு அவரது பெயர்ன் மியூனிக் அணிக்காக புன்டஸ்லீகா கோப்பையை வென்றது. அவரும் கோப்பைக்கு முத்தமிட்டு தனது சாபத்தை முடித்து வைத்தார்.

அதேபோல் விராட் கோலியும் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாபத்தை முடித்து வைத்தார்.

தோல்விகளை நினைத்து துவண்டுவிடாமல், தொடர்ச்சியாக உழைத்தால் பிரேசில் எழுத்தாளர் பாலோ கொய்லோ சொல்வதுபோல 'மனிதர்கள் தங்கள் வாழ்வின் எந்தக் காலத்திலும் வெற்றி பெறலாம்’ என்பதை நிஜமாக்கியுள்ளது இந்த 2025!

In the world of sports, the year '2025' has become unforgettable. This year first time champions teams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை!

சந்தாலி மொழியில் இந்திய அரசியலமைப்பு! குடியரசுத் தலைவர் வெளியிட்டார்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 11

பரபரப்பான கதை, ஆனால்! அருண் விஜய்யின் ரெட்ட தல - திரை விமர்சனம்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT