சுபான்ஷு சுக்லா 
சிறப்புக் கட்டுரைகள்

2025: விண்வெளி நாயகனின் விடியல் பயணம்!

விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் பற்றி..

அ.கு. பார்வதி

2025-ல் உலகமே உற்றுநோக்கிய தருணம்... சுபான்ஷு சுக்லா யார் இவர்? விண்வெளிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? விண்வெளியில் அவர் மேற்கொண்டு ஆய்வு என்ன?

விண்வெளித் துறையில் தொடர்ந்து இந்தியா பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் விண்கலம் கடந்தாண்டு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் பூமியின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் படைத்தது. இதற்கிடையே இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா களமிறங்கியுள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில், ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் நாசா அல்லது சோவியத் ஒன்றியம் மூலம் சென்றவர்கள். முழுக்க முழுக்க இந்தியா உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் இந்தியர்களை விண்வெளிக்குத் தொடர்ந்து அனுப்பப்பவிருக்கிறது.

1984-க்குப் பிறகு முதல் இந்திய வீரர்...

கடந்த 1984-இல் ரஷிய விண்கலத்தில் இந்திய வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் பயணித்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஓர் இந்திய வீரர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணித்தார்.

சுபான்ஷு சுக்லா

யார் இந்த சுபான்ஷு சுக்லா...

சுபான்ஷு சுக்லா 1985ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி லக்னௌவின் திரிவேணி நகரில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சுபான்ஷு குடும்பத்தில் யாரும் விமானப் படையிலோ அல்லது விண்வெளித் துறையிலோ பணியாற்றியதில்லை. லக்னௌவில் உள்ள நகர மான்டிஸோரி பள்ளியில் பயின்ற இவருக்கு விமானப் படை கண்காட்சி ஒன்றைப் பார்வையிட்ட பிறகு விமான இயக்கம் மீதான ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு அகாதெமியில் பயின்ற சுக்லா, இந்திய விமானப்படை அகாதெமியில் விமானி பயிற்சியை நிறைவு செய்தார். கடந்த 2006-இல் போர் விமானப் பிரிவில் இணைந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த கவனம் கொண்ட இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செல்லமாகக் குஞ்சன் என்றும் அழைத்தனர். இவரது மனைவி ஒரு பல் மருத்துவர். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளார்.

2,000 மணி நேரம் பறந்த அனுபவம்...

சுகோய் - 30 எம்கேஐ மிக்-29, ஜாகுவார் போன்ற போர் விமானங்களில் 2,000 மணி நேரத்துக்கும் மேல் பறந்ததன் மூலம் நிபுணத்துவம் வாய்ந்த விமான செயல்பாட்டுப் பரிசோதனை விமானியானார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி பொறியியலில் எம்.டெக் பட்டமும் பெற்றார். 2027-இல் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் மத்திய அரசின் லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்துக்கு பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகிய வீரர்களுடன் சுக்லாவும் கடந்தாண்டு தேர்வானார். இஸ்ரோ சார்பில் தீவிர பயிற்சி பெற்றுவந்த நிலையில் ஆக்ஸியம் திட்டத்தின் கீழ் அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்பு சுக்லாவுக்கு கிடைத்தது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர்

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து சென்ற சுக்லாவின் பயணம்...

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான 'ஆக்ஸிம் ஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆக்ஸிம்-4' திட்டத்தின் கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரின் விண்வெளிப் பயணம் 2025 ஜூன் 25-ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ல் நிறைவடைந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் அனைவரும் விண்வெளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை சுபான்ஷு சுக்லா சுமந்து சென்ற தருணம் அது. ஃபால்கான் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 10வது நிமிடத்தில் சுபான்ஷு சுக்லா நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் விண்வெளியே அடைந்துவிட்டோம். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்லாது, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து பயணிப்போம் என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

ஆறு முறை தடைப்பட்ட சுக்லாவின் பயணம்...

சுக்லாவின் விண்வெளி பயணம் முதல் முறையிலேயே வெற்றியடையவில்லை. முதலில் மே 29ல் திட்டமிடப்பட்ட நிலையில் விண்கலத்தின் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு காணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷிய பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்கலத்தை ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. ஜூன் 22ல் விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்ட நிலையில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறால் இந்தப் பயணம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக ஜூன் 25ல் வானிலை 90 சதவீதம் சாதகமான நிலையை எட்டியதும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சுக்லா கொண்டுசென்ற பொருள்கள்

விண்வெளிக்கு சுக்லா கொண்டுசென்ற பொருள்கள்..

விண்வெளி பயணத்துக்கு முன்னதாக, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவிடம் விண்வெளி பயணத்துக்கு எவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது, என்னென்ன பொருள்களைக் கொண்டுசெல்வது என்பதைப் பற்றி சுக்லா விரிவாகத் தெரிந்துகொண்டார். சுக்லா தன்னுடன் விண்வெளிக்குக் கொண்டுசெல்லும் உடைமைகளில் மாம்பழச்சாறு, பாசிப்பயறு அல்வா, கேரட் அல்வா உள்ளிட்ட இந்திய உணவுகளை எடுத்துச் சென்று விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொண்டார்.

விண்வெளியில் கால்பதித்த முதல் இந்தியர்...

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் 36 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. வெற்றிகரமாக டிராகன் விண்கலத்தை இணைத்து புதிய சாதனை படைத்துள்ளதோடு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற்றார். ஏற்கெனவே, விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று நாசா விண்வெளி வீரர்கள், ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் மற்றும் மூன்று ரஷிய விண்வெளி வீரர்களுடன் இணைந்து, விண்வெளியில் சுக்லா குழுவினர் 18 நாள்கள் தங்கியிருந்து, 7 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

விண்வெளியிலிருந்து சுக்லாவின் முதல் உரையாடல்...

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு முன்னதாக விண்வெளியிலிருந்து சுக்லா காணொலி வாயிலாக உரையாற்றினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தில் டிராகன் விண்கலம் பூமியைச் சுற்றி வந்தபோது வெற்றிடத்தில் மிதப்பது போன்ற ஒரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது. எப்படி நப்பது? எப்படிச் சாப்பிடுவது? என ஒரு குழந்தையைப் போலக் கற்றுணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு விசை குறிகாட்டியாக அன்னப்பறவை பொம்மை ஒன்றையும் சுக்லா தன்னுடன் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

சுக்லா குழுவினர் விண்வெளியில் செய்த ஆய்வு...

விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட நான்கு வீரர்களும் 18 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, உயிரி மருத்துவ அறிவியல், நரம்பு அறிவியல், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சுக்லாவும் இஸ்ரோவின் சார்பில் சில ஆய்வுகளை மேற்கொண்டார். திசு மறு உருவாக்கம், விதை முளைப்பு, நீலப் பசும்பாசி வளர்ப்பு, கதிரியக்க விளைவுகள், மனித உடல் இயக்கம், மிதக்கும் நீர்க்குமிழி உள்பட நுண்ஈரப்பு விசை சார்ந்த 7 முக்கிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள விண்வெளிச் சூழலில் முளைவிட்ட பச்சைப்பயறு, வெந்தயம் ஆகியவையும் இந்திய விஞ்ஞானிகளால் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. எதிர்காலத்தில் நீண்டகால விண்வெளி பயணத்திற்கு அவசியமான விண்வெளி ஊட்டச்சத்து மற்றும் தன்னிறைவு வாழ்க்கை ஆதரவு அமைப்புக்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

40 ஆண்டு குறையைக் களைந்த இந்தியா..

கடந்த 40 ஆண்டுகளாக விண்வெளியில் இந்தியர் ஒருவர் வலம் வராமல் இருந்த குறையை சுபான்ஷு சுக்லாவின் பயணம் தீர்த்துவைத்தது.1984-ல் ரஷிய விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்த ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளியில் பறந்தது மட்டுமல்ல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து திரும்பியிருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆக்ஸியம் - 4 திட்டத்தின் கீழ் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் தங்கியிருந்ததும், நடத்திய ஆய்வுகளும் இந்தியாவுக்குப் பலவகைகளில் பயனளிக்க இருக்கின்றன. பூமியைச் சுற்றியுள்ள பல கிரகங்களுக்கு விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்ப முடிந்தது என்றாலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியாமல் இருந்த குறை இப்போது அகன்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கலிஃபோர்னியா அருகே கடல்பகுதியில் டிராகன் கிரேஸ் தரையிறங்கிய காட்சி

வெற்றி பயணத்தை நிறைவுசெய்த சுக்லா..

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை டிராகன் கிரேஸ் விண்கலத்தில் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பினர். அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் சான்டியாகோ கடல் பரப்பில் ஜூலை 16ஆம் தேதி பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. பின்னர் படகுகள் மூலம் மீட்புக் கப்பலுக்கு விண்கலம் எடுத்து வரப்பட்டது. விண்கலத்திலிருந்து பணியாளர்கள் உதவியோடு வெளியே வந்த சுக்லா உள்பட நான்கு பேரும் 20 நாள்களுக்குப் பின் பூமிக் காற்றைச் சுவாசித்தனர். இவர்கள் நால்வரும் பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பியதன் மூலம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் நால்வரின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கேமராவை பார்த்து புன்னகையுடன் வெளியேறிய நால்வரையும் தாங்கிபிடித்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர் மருத்துவர்கள். இவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதற்காக 7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை அவசியப்பட்டது.

310 முறை பூமியை வலம் வந்த குழு..

பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றிவருகிறது. ஆக்ஸியம்-4 திட்ட வீரர்கள் விண்வெளியில் மொத்தம் 1.3 கோடி கி.மீ. பயணித்தனர். 310-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்தனர்.

பெற்றோர் நெகிழ்ந்த தருணம்

பெற்றோர் நெகிழ்ந்த தருணம்..

சுக்லா பூமிக்குத் திரும்பிய நெகிழ்ச்சியான தருணங்கள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. சுக்லா விண்வெளி பயணத்தை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதைப் பார்த்த அவரது பெற்றோர் எழுந்து நின்று கை தட்டி கண்களில் ஆனந்தக் கண்ணீரை வெளிப்படுத்திய தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் - என்ற குறளுக்கேற்ப சுக்லாவின் வெற்றி பயணத்தை உலகமே உற்றுநோக்கி வியந்து பாராட்டும் அந்த தருணத்தை.. தன் மகனை ஈன்ற பொழுதைவிட மிகவும் மகிழ்ந்ததாக அவர் தாய் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு திருப்புமுனை..

இந்தியாவைப் பொருத்தவரை இது திருப்புமுனையான பயணமாகும். ககன்யான் திட்டத்துக்கு அனுபவப் பயிற்சி பெறும் நோக்கிலான சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்கு சுமார் ரூ. 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2040-45ல் இந்தியா சொந்தமாக விண்வெளியில் தனக்கென்று ஆய்வு மையத்தை நிறுவுதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக சுபான்ஷு சுக்லாவின் பயணம் அமைந்துள்ளது.

About Subhanshu Shukla, the Indian astronaut who traveled to space in 2025...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

2025 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! புகைப்படங்களாக!!

"Vijay ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது": செங்கோட்டையன் | TVK

முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!

என்ன செய்கிறார் அழகு நட்சத்திரம் மோனலிசா போஸ்லே?

SCROLL FOR NEXT