போர்கள்...  சித்திரிப்பு/விஜய்
சிறப்புக் கட்டுரைகள்

2025! காஸா முதல் காஷ்மீர் வரை... உலகம் போர்க்களமான கதை!

2025 ஆம் ஆண்டில் உலகில் நடைபெற்ற சில முக்கிய போர்கள்...

அகமது தாஹா

மனிதகுலத்திற்கு இந்த ஒட்டுமொத்த பால்வெளியிலும் வாழ்வதற்கு இருக்கும் ஒரே வீடு இந்த பூமி மட்டும்தான்! இந்த பூமியின் அதிசயங்களையும், அறிவியலையும் நன்கு உணர்ந்த மனிதர்கள் அவற்றை தங்களது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், எல்லைகள் நிர்வாகத்தின் அத்தியாவசியமாக உருவானதும், அறிவியலைக் கொண்டு ஆயுதங்கள் தயாரித்ததும்தான் பரிணாமம் பெற்ற மனிதகுலத்தின் இண்டர்வெல் பிளாக்.

அதன்பின்னர், இன்று வரை நடக்கும் கதைகள் ஒன்றுதான். எல்லையைக் காப்பாற்றவோ அல்லது எல்லையை மேலும் விரிவாக்கவோ போரும் தாக்குதலும்தான் ஒரே தீர்வாக உருவாகிவிட்டது.

ஆண்டாண்டாகத் தொடரும் இந்தப் போர் கலாசாரத்திற்கு 2025 ஆம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு அல்ல! ஆகையால், இவ்வாண்டில் இந்த பூமியின் மீது நடைபெற்ற சில முக்கிய போர்களின் பட்டியல்தான் இந்தக் கட்டுரை!

காஸா - இஸ்ரேல் போர்!

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

நீண்டகாலமாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இஸ்ரேலின் ராணுவத்துக்கும் இடையில் நடைபெறும் மோதல்களில் அதிகம் கொல்லப்படுவது நடுவில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்கள்தான்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி ஊடுருவிய பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பினர், 1,000-க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றதுடன், சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக, சிறைப்பிடித்து சென்றனர்.

அன்று ஹமாஸ் படைகளின் மீது போர்த்தொடுப்பதாக அறிவித்து இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போரில், காஸா மற்றும் மேற்கு கரையில் உள்ள மக்களின் குடியிருப்புகளே பெரும்பாலும் தகர்க்கப்பட்டன. அங்கு வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

ஆனால், அங்கும் இஸ்ரேலின் குண்டுகள் கருணையின்றி பாய்ந்தன. ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என சுமார் 70,000 பாலஸ்தீனர்கள் இதுவரைக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உடல் பாகங்களையும் குடும்பங்களையும் இழந்துள்ளனர்.

காஸா மக்களுக்காக எல்லையில் காத்திருந்த நிவாரணப் பொருள்கள்...

இந்தப் போர் தொடங்கியது முதல் ஹமாஸ் படைகளை விடவும் பாலஸ்தீன மக்கள்தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள மக்களும் பிற நாடுகளின் அரசுகளும் அனுப்பி வைத்த உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை காஸாவுக்குள் செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு முடக்கியது. இதனால், பசியிலும், ஊட்டச்சத்து குறைபாடினாலும், உரிய மருத்துவம் கிடைக்காமலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தகையச் சூழலில், இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பகிரப்பட்டன. பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, அயர்லாந்து, இந்தோனேசியா, வங்கதேசம், மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காஸாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி உத்தரவு பிறப்பித்தது...

கத்தார் அரசின் முயற்சியால், கடந்த ஜனவரியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே 2 ஆவது முறையாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீன மக்களும், ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்த பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டு வந்தனர். காஸாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்தப் பணிகள், தொடர்ந்து நடைபெற்ற அதேவேளையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக பரஸ்பர குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மார்ச் 1 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசு முன்வைத்த புதிய நிபந்தனைகள் ஹமாஸ் தரப்பில் மறுக்கப்பட்டது.

இதனால் கோவமடைந்த பிரதமர் நெதன்யாகு காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்த அத்தியாவசிய உதவிகளை மீண்டும் முடக்கினார். இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் மீண்டும் நிலவியதால், மார்ச் 18 அன்று காஸா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் அன்று ஒருநாள் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டது

போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனக் குரல் எழுப்பின. ஆனால், அந்தக் குரல்கள் எதுவும் இஸ்ரேலின் காதுகளில் விழவில்லை. மாறாக, காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் மேலும் அதிகரித்ததால், முன்பில்லாத அளவிலான பாதிப்புகளை பாலஸ்தீன மக்கள் சந்தித்தனர். மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் அனைத்தும் குறிவைத்து தகர்க்கப்பட்டன. காஸாவின் டெய்ர் அல்-பலாஹ் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த மக்களை இஸ்ரேல் ராணுவம் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது.

பதில் தாக்குதல் நடத்தப்படாத காஸா மீதான இஸ்ரேலின் இந்தப் போரை பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் பிரபலங்கள் இனப்படுகொலை எனக் குறிப்பிட்டனர்.

இருப்பினும், இதைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல் நாடாளுமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் காஸாவை முழுவதுமாக ஆக்கிரமித்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒப்புதல் வழங்கியது. அப்போது இது வெறும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மட்டுமல்ல என்பதை உலகம் புரிந்துகொண்டது.

இந்த ஒப்புதலுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பு (ஐ.நா.) உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையே கண்டனம் எழுந்தாலும் காஸாவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள்...

இதனிடையே, செப்டம்பரில் கத்தார் தலைநகரில் அமைந்திருந்த ஹமாஸ் தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியதும் அரபு நாடுகள் அதிர்ச்சியடைந்தன. ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கத்தாரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, எத்தகைய கண்டனக் குரலுக்கும் செவி சாய்க்காத இஸ்ரேலை எதிர்த்து கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் அரசுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன.

இந்தச் சூழலில், ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசத் துவங்கியவுடன் அவையில் இருந்த உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறியது பெரும் பேசுபொருளானது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் 20 முக்கிய அம்சங்களுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார்.

அந்த ஒப்பந்தத்தை இருதரப்பும் தற்போது ஏற்றுக்கொண்டதன் மூலம் பிணைக் கைதிகள் மற்றும் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் ஒப்படைக்கும் கொல்லப்பட்ட ஒரு இஸ்ரேலியரின் உடலுக்கு நிகராக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. காஸாவை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வெளியேறிய மக்கள் தங்களது வீடுகள் இருந்த இடத்திற்குத் திரும்பி வருகின்றனர். இடையே, இஸ்ரேல் வீரர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாகக் கூறி தொடர் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் மீண்டும் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்தது.

ஆனால், எத்தனை காலம் இந்த அமைதி நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், தங்களது வீடுகளுக்குள்ளே அச்சத்துடன் வாழ்கின்றனர் பாலஸ்தீனர்கள்.

ரஷிய - உக்ரைன் போர்!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்

2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2025 இல் 3 ஆண்டுகளை நிறைவு செய்தது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டால் உக்ரைனின் எல்லைகள் அங்கீகரிக்கப்படாது என ரஷிய அரசு நீண்டகாலமாக எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், 2022 பிப்ரவரியில் அந்நாட்டின் மீது போர்த்தொடுத்தது.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் காட்டிய ஆர்வமே இந்தப் போருக்கு முக்கிய காரணம் எனவும், நேரடி எதிரியான அமெரிக்கா இடம்பெற்றுள்ள நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் தங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவாகக் கூடும் என ரஷிய அரசு கருதுவதாகவும், நிபுணர்கள் கூறுகின்றனர்.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் துணை நின்றாலும், தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் ரஷியா இந்தப் போரையும் சமாளித்து வருகின்றது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளான இருபெரும் நாடுகளும் போரில் இறங்கியது உலகப் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்துள்ளது என்று சொல்லலாம்.

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது

கடந்த 2 ஆண்டுகளைப்போலவே நிகழாண்டிலும் இருநாடுகளும் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களைத் தொடர்ந்தன. 2025 மே 31 நிலவரப்படி இந்தப் போரால் உக்ரைனில் 13,341 மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்.

ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே மோதல்கள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூலை மாதத்தின் நிலவரப்படி உக்ரைனின் தென்கிழக்கு நகரங்கள் மற்றும் கிரிமியா பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷிய ராணுவத்தில் இதுவரை 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தலைநகர் கீவ் உள்பட பல முக்கிய நகரங்களின் மீது ரஷியா தாக்குதல் நடத்தி அந்நாட்டின் கட்டமைப்பையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் தகர்த்துள்ளது.

இந்தப் போரில், ரஷியாவின் எண்ணெய் வளங்கள் மற்றும் மாஸ்கோ நகரைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தினாலும், ரஷியா பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

இதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சுகளும் நடைபெற்றன. ஆனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி ஆகியோர் இதுவரை அதனை ஏற்க முன்வரவில்லை.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்

இத்துடன், இந்தப் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவின் படை வீரர்கள் சண்டையிட்டது உறுதியாகியுள்ளது. மேலும், ரஷிய ராணுவத்தில் இதுவரை 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், சிலரைக் கட்டாயப்படுத்தி ரஷிய ராணுவம் இணைந்துகொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரஷியா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பரிசாக உக்ரைன் மக்கள் புதினின் அழிவையே விரும்புகிறார்கள் என அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து உக்ரைன் மக்களின் வேதனையின் பிரதிபலிப்பா அல்லது இருநாடுகள் இடையிலான அரசியல் நோக்கமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

பஹல்காமில் கொல்லப்பட்டவரின் உடல் அருகில் அவர் மனைவி அமர்ந்துள்ள புகைப்படம் நாட்டு மக்களை கதிகலங்கச் செய்தது...

காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காம் பள்ளத்தாக்கில், ஏப்ரல் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் 26 அப்பாவிகளை அவர்களது மனைவிகள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கண்முன்னே படுகொலைச் செய்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்றும், அவர்களின் மதங்களைக் கேட்டறிந்த பின்னரே அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின. நாடே கொதித்தெழுந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்று தெரிவதற்குள் பயங்கரவாதிகள் பதுங்கிவிட்டனர்.

ஆனால், மே.7 அன்று இரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் திடீரென இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில், அங்கு அமைந்திருந்த லஷ்கர்-இ-தெய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டன. இதனால், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து வெளியிடப்பட்ட படம்...

அத்துமீறி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பூஞ்ச், பாரமுல்லா, உரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் தாக்குதலைத் தொடங்கியது.

இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. எல்லைகளில் படைகள் குவிக்கப்பட்டன. இந்தியாவின் முப்படைகளும் போருக்குத் தயாராகின. இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்களும், அந்நாட்டில் வசித்த இந்தியர்களும் தாயகம் செல்ல உத்தரவிடப்பட்டது.

எல்லையில் வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் தங்கவைக்கப்பட்டனர். இரவில், இந்தியாவின் பல்வேறு வட மாநிலங்களில் பாகிஸ்தானின் தாக்குதல்களைத் தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தைக் குறிவைத்து இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறந்தன. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் கட்டமைப்புகள்...

இந்தியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள அரபிக் கடல் பகுதியில் போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. இந்தக் கப்பல்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அஞ்சப்பட்டது. இந்தியாவில் பாகிஸ்தான் மேற்கொண்ட சைபர் தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் போராக உருவெடுக்குமா எனும் அச்சம் இருநாட்டு மக்களிடையே உருவானது. இத்தகையச் சூழலில், மே.10 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, அமைதிக்கான நோபல் பரிசை எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்தியாவின் மோதலில் சேதமடைந்த பாகிஸ்தான் கட்டமைப்புகள்..

மோதல்களைக் கைவிட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அரசுகள் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே மோதல்கள் கைவிடப்பட்டதாகவும்; இதில், மூன்றாவது நபரின் தலையீடு இல்லை எனவும், மத்திய அரசு கூறியது.

ஆனால், அணுசக்தி பலம் கொண்ட இருநாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை வைத்து மிரட்டி போர்நிறுத்தம் கொண்டு வந்ததாக, அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல மேடைகளிலும் விழாக்களிலும் பேசி வருகின்றார்.

இந்த மோதல்களில், 8 ராணுவ வீரர்கள் உள்பட 21 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானில் 40 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால், அசல் எண்ணிக்கை மேலும் அதிகம் என்பதே உள்ளூர்வாசிகளின் கருத்தாகவுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர்!

ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் பேரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது...

மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய நாடாகக் கருதப்படும் ஈரான், இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பல முக்கிய கிளர்ச்சிப்படையினரின் கூடாரமாக விளங்குகின்றது.

இதனால், நீண்டகால எதிரியான ஈரானின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதி “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் ஈரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. மேலும், அந்நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனால், சீண்டப்பட்ட ஈரான் இஸ்ரேல் மீதான தனது தாக்குதலைத் தொடங்கியதும் இருநாடுகளுக்கும் இடையில் போர் வெடித்தது. ஏவுகணைகளும், போர் விமானங்களும் யார் பலசாலி என்பதைக் காண்பிக்க ஏவப்பட்டன. இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

ஈரானின் தெஹ்ரான் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரங்களின் மீது குண்டு மழைகள் பொழிந்தன. அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேறத் துவங்கினர். இரவுகளில் வானத்தை வெளிச்சமாக்கிய குண்டுகள் பறந்து வரும் விடியோக்கள் வெளியானபோது பின்னணியில் மனித ஓலங்களே கேட்டன.

அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை...

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் சிந்து” எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், 3,400-க்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்.

இந்தப் போர் 12 நாள்கள் நீடித்த நிலையில், இருநாடுகளும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஆனால், அதற்கு முந்தைய நாள் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க அரசு ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளின் மீது அதன் அதிநவீன பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியிருந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, ஈரானில் 1,000-க்கு அதிகமான மக்களும், இஸ்ரேலில் 100-க்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆபரேஷன் சிந்து மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

இந்தப் போரில், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி மற்றும் ஏவுகணைகளின் தளபதி ஜெனரல். அமிர் அலி ஹாஜிஸாதேஹ் உள்ளிட்ட சுமார் 30 ராணுவத் தளபதிகள், 11 அணுசக்தி விஞ்ஞானிகளை ஈரான் இழக்க நேரிட்டது. இத்துடன், ஈரானின் 8 அணுசக்தி தளவாடங்கள் மற்றும் 720-க்கும் அதிகமான ராணுவ கட்டமைப்புகள் ஆகியவை தகர்க்கப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தளபதிகள், விஞ்ஞானிகள் உள்பட 60-க்கும் அதிகமானோருக்கு ஜூன்.28 அன்று தலைநகரில் மாபெரும் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில், பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரான் வீதிகளில் திரண்டனர்.

கொல்லப்பட்ட ஈரானின் தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு தெஹ்ரானில் மாபெரும் இறுதிச் சடங்கு நடைபெற்றது..

போரில் பெரும் சேதங்களைச் சந்தித்தவுடன் அதன் கண்காணிப்புகளை அதிகரித்த ஈரான், இஸ்ரேலின் உளவாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட நபர்கள் அனைவரையும் தொடர்ந்து கைது செய்து தூக்கிலிட்டு வருகின்றது. ஈரான் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், அந்நாட்டு அரசின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சிக்குழுக்களின் நிலையும் கவலைக்கிடம்தான்!

தாய்லாந்து - கம்போடியா போர்

தாய்லாந்து - கம்போடியா எல்லையில்...

தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவின் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னையாம். இந்தக் கதை பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு புதிய தகவலாகவே இருக்கும். இந்திய மக்களிடையே பிரபலமான சுற்றுலா நாடுகளாக அறியப்படும் இந்த இரு நாடுகளும் அவர்களது எல்லையில் அமைந்துள்ள பழமையான கோயிலை மையமாக வைத்து பல காலமாக மனக் கசப்பில் உள்ளன.

இருநாடுகளின் எல்லையில் உள்ள டாங்ரெக் மலைப்பகுதியில் அமைந்துள்ளது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரே விஹார் எனும் ஹிந்து கோயில். இந்தக் கோயில் கம்போடியாவுக்குதான் சொந்தம் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், அவ்வப்போது எல்லையில் இருநாட்டு ராணுவங்கள் மோதிக் கொள்வதும் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேறுவதும் நீண்டகால துயரம்.

எல்லைப் பிரச்னையால் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்...

இந்தச் சூழலில், ஜூலை 24 ஆம் தேதி, எல்லையின் அருகில் 5 தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடித் தாக்குதலில் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தனக்கு சம்பந்தம் இல்லை என கம்போடியா விலக முயன்றாலும் தாய்லாந்து விடுவதாக இல்லை.

உடனடியாக, தனது போர் விமானங்கள் மூலம் கம்போடியாவின் மீது தாக்குதலைத் தொடங்கியது. இருநாடுகளின் எல்லையில் மீண்டும் சண்டை துவங்கியதால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெளியேறினர்.

இந்த மோதல்களில், 30-க்கும் அதிகமான உயிர்கள் கொல்லப்பட்ட பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில், கோலாலம்பூர் நகரில் கம்போடியா மற்றும் தாய்லாந்தின் பிரதமர்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த போர்நிறுத்தம் அமெரிக்க அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், வர்த்தகம் பாதிக்கும் என தான் எச்சரித்ததால் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதாக மீண்டும் தனக்குதானே அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டிக் கொண்டார்.

கம்போடியா - தாய்லாந்து இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது

இருப்பினும், 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் டிச.7 அன்று இருநாடுகளும் மீண்டும் மோதலில் குதித்தன. எல்லையில் தாக்குதல் நடைபெற்றதாக பரஸ்பரம் குற்றம்சாட்டின. மீண்டும் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மேற்கொண்ட முயற்சியால் டிச.27 அன்று இருநாடுகளுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புதிய மோதல்களால், தாய்லாந்தில் 26 வீரர்கள் மற்றும் 44 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டனர். கம்போடியாவில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், 30 பேர் பலியானதுடன் 90-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூடானில் நடைபெறுவது போரா? இனப்படுகொலையா?

சூடானில் வாழ்வாதாரம் இழந்து நிவாரண உதவிகளுக்காகக் காத்திருக்கும் மக்கள்...

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் அரசுப் படைகளுக்கும், ஆர்.எஸ்.எஃப். (ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்) எனும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அதிகம் கொல்லப்பட்டது அப்பாவி சூடானியர்கள்தான்.

எதிராளிப் படைகள் எங்குள்ளது எனத் தெரியாமல் நடக்கின்றதா அல்லது யாராக இருந்தாலும் செத்தொழிந்தால் போதும் என நடத்தப்படுகிறதா எனும் அளவிற்கு குவியல் குவியலாக சூடானின் நிலப்பரப்பில் மனிதப் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த நிலையில், சூடானின் டார்ஃபூர் பகுதியில் உள்ள எல்-ஃபாஷர் எனும் முக்கிய நகரத்தை, அக்டோபர் மாதம் துணை ராணுவப் படைகள் கைப்பற்றின. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதால், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் நடந்தே வெளியேறி வருகின்றனர்.

சூடானின் ராணுவப் படை...

துணை ராணுவப் படையின் தலைமையில் சூடானில் அமைக்கப்பட்டுள்ள தனி அரசு டாசிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த அரசின் கீழ் டார்ஃபூர் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஃப். ஈடுபட்டு வருகின்றது.

ஆனால், அங்குள்ள அப்பாவி சூடானியர்கள் மீதான அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெறத்தான் செய்கின்றது. சில வாரங்களுக்கு முன்பு, எல்-ஃபேஷர் நகரத்தைக் கைப்பற்றியதுடன் மக்களுக்கு எதிராக துணை ராணுவப் படைகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. குற்றம்சாட்டியது. அங்குள்ள மருத்துவமனைகளில் அத்துமீறி நுழைந்த துணை ராணுவப்படையினர் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என 400-க்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்டவர்களின் ரத்தத்தால் நிலமே சிவப்பு நிறத்தில் மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி இது மனிதர்கள் இடையிலான செயல்கள்தானா எனும் சந்தேகத்தை உருவாக்கின.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சூடானின் பிரதமர் கமில் இத்ரீஸ் ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இதனை துணை ராணுவப் படை ஏற்குமா எனத் தெரியவில்லை. சூடானில் உள்ள தங்கச் சுரங்கங்களைக் கைப்பற்றவே ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் துணை ராணுவப் படைகளுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமீரகம் மறுத்தாலும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சூடானில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உள்நாட்டுப் போரில், இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், 1.4 கோடி மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து இது உலகின் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி என ஐ.நா. அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

லட்சக்கணக்கான சூடானியர்கள் கொல்லப்பட்ட நிலையிலும், இந்தப் போரின் குற்றங்கள் மற்றும் துணை ராணுவப் படையின் அட்டூழியங்கள் குறித்து உலக அரங்கில் பெரும் கவனிப்பு கிடைக்கவில்லை என்பதே துயரமான உண்மை.

யாருக்காக இது?

இயற்கை வழங்கிய வளங்களுக்காக, ஒருவரையொருவர் அழிக்கும் மனிதர்களின் இந்தப் போக்கு ஏன் தொடர் கதையாகின்றது. சரி, நாடுகளுக்கு இடையிலான சண்டையில் அப்பாவிகள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? போருக்குச் செல்வதும், போரில் கொல்லப்படுவதும் ஏன் பெருமையாகின்றது?

இதுபோன்ற எத்தனையோ கேள்விகளுக்குப் பதிலில்லை. போரைத் தொடங்கவும் தலைவர்கள் வருவார்கள், போரை நிறுத்தவும் தலைவர்கள் வருவார்கள். ஆனால், கொல்லப்பட்ட உயிர்கள் திரும்பி வரப் போவதில்லை.

இங்கு ஆயுதங்கள் இருதரப்பின் கைகளிலும் உள்ளன என்பதும் அதை யார் முதலில் பயன்படுத்துகிறார்கள் என்பதும்தான் கவனிக்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் ஏவிய தோட்டாக்கள் யார் மீது பாய்ந்தன என்பது கவனிக்கப்படுவதில்லை. மேலே குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகள் வெறும் எண்களாக மட்டுமின்றி உயிர்களாகப் பார்க்கப்படுமாயின் போர்கள் எனும் இந்தச் செயற்கைப் பேரிடர்கள் காணாமல் போகுமா?

இறுதியாக, நடிகர் கமல்ஹாசன் எழுதிய ஒரு பாடலின் வரிகளை மட்டுமே நான் குறிப்பிட நினைக்கின்றேன்.

“போர் செல்லும் வீரன் - ஒரு தாய் மகன்தான்

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் - பாரடா”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல ஏடிஎம் மையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

கொடைக்கானலில் தொடரும் உறை பனி

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

உடையாா்பாளையம் அருகே தனியாா் மருந்தகத்துக்கு ‘சீல்’

உதவிப் பேராசிரியா் தோ்வு: கரூா் மாவட்டத்தில் 470 போ் எழுதினா்!

SCROLL FOR NEXT