உயிர்சுருட்டி என்னும் தலைப்பும், முன் அட்டைப்படமும், கதையை வாசிப்பதற்கு முன்பாகவே வாசகனை மிரட்டுகின்றன. சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் பாத்திரங்கள் பேசும்போது வட்டாரவழக்கைப் பயன்படுத்துவதுண்டு. முழுவதும் வட்டாரவழக்கில் மிகச்சிலர் சிறுகதை எழுதியிருக்கிறார்கள். முழுவதும் வட்டார வழக்கில் அமைந்த நெடுங்கதையை யாராவது எழுதியிருக்கக்கூடும். நான் அப்படி ஒரு நெடுங்கதை வாசித்ததில்லை.
ஆனால் ‘உயிர்சுருட்டி’ நெடுங்கதை எடுத்த எடுப்பிலேயே வட்டாரவழக்கில் தொடங்கி, எங்குமே தடம் பிறழாமல், முடிவு வரையிலும் ஒரே ஓட்டமாக ஓடுகிறது. கீழத்தஞ்சை மண்மணக்கும் மண்சார் பேச்சுவழக்கில் கதை நகரத்தொடங்கி, நகர்ந்து, முடிகிறது. என்னதான் படைப்பாளி கீழத்தஞ்சையைச் சேர்ந்தவர் என்றாலும் முற்றிலும் மக்கள் பேச்சுவழக்கில் கதைசொல்வது அப்படி ஒன்றும் எளிதல்ல. இலக்கிய நடையில் எழுதிவிடலாம். ஆனால் பேச்சுவழக்கில் கதைசொல்வது எளிதல்ல. காரணம் படைப்பாளிகள் அனைவருமே மக்கள் மொழியிலிருந்து விலகி வந்துவிடுகிறார்கள் என்பதுதான். என்றாலும் அப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதை சொல்லல் கனிமொழி செல்லத்துரைக்கு அவரது முதல் நெடுங்கதையிலேயே வாய்த்திருக்கிறது.
அட்டைப்படம் உணர்த்துவதுபோல, கதையானது புகையிலை பயிர் செய்தலை மையமாக வைத்தே நகர்கிறது. ஆனந்த் என்னும் சிறுவனை கதைநாயகனாகக் கொண்டு, கதையை நகர்த்திச் செல்வதே புதிய உத்தியாகத்தான் தெரிகிறது. முருகேசன், சீதா இணையருக்கு ஆனந்த்,பாலு என்று இரண்டு ஆண் மக்கள். அந்த ஊரில் புகையிலைக் கொல்லைகள் பணம் ஈட்டிக்கொடுத்தாலும், பலரும் பூந்தோட்டங்களை வைத்து, பூக்களைப்பறித்து விற்றுக் கிடைக்கும் அந்தப் பணத்தில் எளிய வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றனர். முருகையனுக்கும் பூந்தோட்டம் இருந்திருக்கிறது. அவனுக்கு புகையிலைக்கொல்லை வைக்கவேண்டும் என்னும் ஆவல் எழுகிறது. அதற்காகப் பணம் கடன் வாங்கி ஒரு புகையிலைக் கொல்லையை ‘வாரத்திற்கு’ எடுப்பதற்கு வேலுத்தாத்தா உதவுகிறார்.
முருகையன் குடிகாரன் மட்டுமல்ல, புகையிலை சுருட்டுப் புகைக்கும் வழக்கமும் உண்டு. முருகையன் குடும்பம், வேலுத்தாத்தா, ஊரில் பணக்காரனான அடாவடி கருப்பசாமி, அவன் மகன் ராஜு, ஊருக்குத் துணிவெளுக்கும் சலவைத் தொழிலாளி சித்திரம், அவனது மகள் பாப்பாத்தி, மகன் செம்பா, வாத்தியார் சின்னப்பன், பள்ளிக்கூடம், கலீத்தையா கோயில், கோயில் திருவிழா என்று கதை பின்னப்பட்டிருக்கிறது.
சின்னப்ப வாத்தியாருக்குப் பயந்த பையன்கள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவித் தப்பிக்கிறார்கள். அது எனது பள்ளிக்கூட வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டுவந்தது. எனது சிறு வயது முதற்கொண்டே எனக்கு மரம் ஏறவும், மலை ஏறவும் பிடிக்கும். விக்கிரமசிங்கபுரம் புனித மரையன்னை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, மதியம் சாப்பிட்ட உடன் விளையாட்டு மைதானத்திற்கு ஓடுவேன். அம்மைதானத்தின் வடக்கில் வரிசையாக இருபது தூங்குமூஞ்சி மரங்கள் நின்றன. ஒரு மரத்தின் கிளை அடுத்த மரத்தின் கிளையுடன் பின்னியிருக்கும். அதனால் மேற்கில் முதல் மரத்தில் ஏறி, கீழே இறங்காமல், அடுத்தடுத்த மரங்களுக்குத் தாவி, கிழக்கில் கடைசி மரத்தில் இறங்குவேன். இந்த நெடுங்கதையில் கமலா என்னும் பெண் அப்படி மரம்விட்டு மரம் தாவுவதாகச் சொல்லப்படுகிறது. சிற்றூர்களில் வயதுக்கு வரும் வரையிலும் ஆண், பெண் வேறுபாடின்றி கலந்து விளையாடுவதையே அது காட்டுகிறது.
ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாமல், ஆங்காங்கே நின்று வேறு சில குட்டிக் கதைகளைத் துணைக்கதைகளாக சொல்லி, மீண்டும் மூலக்கதைக்குத் திரும்புதல் என்னும் முறையில் கதையை நகர்த்திச்செல்கிறார் கனிமொழி செல்லத்துரை. சின்னப்பன் வாத்தியாரிடம் வம்பிழுத்த கருப்பசாமி வகையறாக்கள், அவரை அடித்துத் துவைத்ததோடு, பள்ளிக்கூடத்தில் படித்த சலவைத்தொழிலாளி சித்திரத்தின் மகள் பத்து வயது பாப்பாத்தியைக் கெடுத்துவிட்டதாக ஒரு பழியையும் சின்னப்ப வாத்தியார் மீது போட்டுவிடுகின்றனர். அது சின்னப்ப வாத்தியாரின் தற்கொலையில் முடிகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் தான் அந்தத் தவறைச் செய்யவில்லை என்பது சின்னப்ப வாத்தியாருக்கு மட்டுமல்ல, பெரிய வாத்தியாருக்கும், பழிபோட்ட கருப்பசாமிக்கும்கூட தெரியும். ஆனாலும் கடைசி வரையிலும் அது தெரியாமலேயே, உண்மையில் தனது மகள் கெடுக்கப்பட்டுவிட்டதாக நம்பிய சலவைத்தொழிலாளி சித்திரம் இறந்தும் போகிறான். இந்த உண்மையோ அல்லது அதற்கான எதிர்வினையோ கதையில் எங்குமே வெளிப்படவில்லையே என்று ஆதங்கப்பட்டால், கதையின் தொடக்கத்திலேயே கருப்பசாமியின் மகன் மனநிலை குறைந்தவனாக, குடிகாரனாக ஆனந்த் வரும் பேருந்தை மறிக்கும் நபராக அறிமுகம் செய்வது நினைவுக்கு வருகிறது.
இறுதியில் புகையிலைச் சுருட்டு குடித்துகுடித்து முருகையன் தனது வாழ்வின் இறுதிப்பகுதிக்கு வருகிறான். தாளமுடியாத வலி காரணமாக யாரிடமும் சொல்லாமல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விடுகிறான். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பையனான ஆனந்த், தனது தந்தையைத் தேடி தனி ஒருவனாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறான். அங்கு அவன் தனது தந்தை முருகையனைச் சந்திக்கும் கதை சொல்லப்படுகிறது. அவனுக்குத் துணையாக முருகையனைத் தேடும் முதியவர் ஓர் அறையைச் சுட்டிக்காட்டி, “தம்பி ஒங்க அப்பா இங்க இருக்கக் கூடாதுண்ணு வேண்டிக்க. இந்த இடம் ஒரு ‘உயிர்சுருட்டி’ .. பனம்பாயி தெரியுமில்ல அதுமாதிரி இங்கக் கொண்டாந்து போட்டா அடுத்த நிமிசமே சுருட்டிக்கிட்டுப் போயிடும்‘ என்று சொல்கிறார்.
ஆக ‘உயிர்சுருட்டி’ என்பது மருத்துவமனையில் உள்ள ‘அவசர மருத்துவப்பிரிவு’ என்பதாக யூகிக்க முடிகிறது. காரணம் உயிர்போகும் அளவில் மிகவும் மோசமான நிலையில் வரும் நோயாளிகளே அந்த மருத்துவப்பிரிவில் சேர்க்கப்படுவர். அப்படி அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பலரும் உயிருடன் வீடு திரும்புவதில்லை என்பதால் அந்த அறை ‘உயிர்சுருட்டி’ என்பதாக முதியவர் சொல்கிறார். அதுவே கதையின் தலைப்பும் ஆகிறது என்றாலும், மருத்துவர் முருகையனிடம்‘ நீ பயன்படுத்திய புகையிலைச் சுருட்டுத்தான் உன் உயிரைக் காவு வாங்கப்போகிறது’ என்று சொல்வதிலிருந்து. புகையிலையும் மனிதர்களின் உயிர்குடிப்பதால் புகையிலையையும் ‘உயிர்சுருட்டி’ என்று கொள்ளலாம். அது நெடுங்கதையின் தலைப்பிற்கும் பொருந்திப்போகும். முன் அட்டைப்படமும் அதைத்தான் சுட்டுகிறது. அந்தவிதத்தில் இது ஒரு மக்கள் விழிப்புணர்வு கதையும் ஆகும்.
பூந்தோட்டத்தில் பூச்செடிகளைப் பதியம்போடுதல், பராமரித்தல், பூப்பறித்தல், பூக்களை விற்றுப் பணம் ஈட்டுதலும், புகையிலைக்கொல்லைகளைப் பராமரித்தலும் அவற்றின் நுணுக்கங்களையும் விவரித்திருப்பதைப் பார்க்கும்போது, அவை அனைத்துமே கதைசொல்லி கனிமொழி செல்லத்துரையின் நேரடி அனுபவமாகவும் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. என்னதான் பார்த்து, கேட்டு எழுதினாலும் நேரடி அனுபவம்போல் வராது.
முருகையன் உயிர்சுருட்டியில், உயிர்சுருட்டியால் இறந்தபிறகு, படித்துமுடித்த ஆனந்த் தனது சொந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவன் பல ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த ஊர் திரும்பியதும் தனது தாய் சீதாவிடம்‘ என்னுடன் வந்துவிடு என்று நான் எத்தனை முறை உன்னை அழைத்தேன். ஆனால் நீ வரவில்லையே அம்மா” என்கிறான். அதற்கு சீதா சொல்லும் மறுமொழியும் முதன்மையானதாக உள்ளது.
“என்ன என்னையா செய்யச் சொல்ற, இந்த போயில சாகுபடிதான் எங்களுக்குக் கெதி. இந்த மண்ணோட சொகம் எங்க போனாலும் கெடைக்காது. ஒன்ன படிக்கவச்சி இந்த நெலமைக்கு ஆளாக்கினதுக்கு இந்தப் போயிலதான்யா கைகொடுத்தது. இது இல்லண்ணா சோத்துக்கே நாம சிங்கி அடித்திருக்கணும். நம்ம குடும்பத்த ஏத்திவிட்ட ஏணிய்யா இந்தப் போயில. தம்பிக்குப் படிப்பு வரல. அவன் போயிலக்கொல்லையில் பாடுபட்டு ஒன்னப் படிக்கவச்சான். அவன் பிள்ளைகளாவது படித்து ஒன்னையமாறி புத்திசாலியா இருக்கணும்ணு கலீத்தய்யாவ வேண்டிக்கிட்டு இருக்கேன்.” புகையிலை ஒருபுறம் மக்களைக்கொல்லும் உயிர்சுருட்டி என்றாலும், மற்றொருபுறம் அதுதான் ஏழைக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்னும் கசப்பான உண்மையையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
தொடக்கம் முதல் இறுதி வரையிலும் கீழத்தஞ்சை பேச்சு வழக்கில் நகரும் கதையில், போவாவோ, வருவாவோ, வாங்குவாவோ, கொடுப்பாவோ, சிரிப்பாவோ என்னும் சொல்லாடல்கள் என்னைக் கவர்ந்ததோடு சிந்திக்கவும் வைத்தன. நான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி மாவட்டம், பாபனாசம் மலை அடிவாரத்தில் அமைந்த ஊர்களிலும் அப்படித்தான் பேச்சுவழக்கு உள்ளது. மாத்திரமல்ல, ‘உயிர்சுருட்டி’ அறையைப் பற்றி முதியவர் ஆனந்திடம் சொல்லும்போது, ‘பனம்பாய்’ பற்றி குறிப்பிடுவார். பிணங்களை பனம்பாயில் வைத்துச் சுருட்டிப் பாடையில் வைத்துச் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லும் வழக்கத்தையே அந்தப் பெரியவர் குறிப்பிடுகிறார். இந்த வழக்கம் எங்கள் பகுதியிலும் உண்டு. வாய்ச்சொற்களால் சண்டையிடும்போது,’ டேய், பனம்பாயில சுருட்டிருவேன்’ என்று எச்சரிக்கை செய்வதும் உண்டு.
பாண்டிய நாட்டின் தென்மேற்கு மூலையில் மலை அடிவாரத்தில் வாழும் மக்களுக்கும், சோழநாட்டின் வடகிழக்கு மூலையில் கடற்கரைக்கு அருகில் வாழும் மக்களுக்கும் பேச்சுவழக்கும், வாழ்வுமுறையும் ஒன்றாக இருப்பது வியப்புத்தான். இரண்டு பண்பாடுகளையும் இணைக்கும் ஏதோ ஒரு வரலாற்றுக் கண்ணி இருந்து, இல்லாமல் ஆகியிருக்கவேண்டும். கனிமொழி செல்லத்துரை கீழத்தஞ்சையைச் சேர்ந்தவர். தஞ்சைக்கு அருகில் ஓர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிசெய்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டு இலக்கியப்பணி ஆற்றுபவர். முனைவர் பட்டம் பெற்றவர். களஆய்வாளர். நாகப்பட்டினம் கடற்கரைக் கிராமங்களுக்குத் தனி ஒருவளாக சென்று அங்குள்ளப் பெண்களிடம் பேசி மீனவ மக்களின் பேச்சுவழக்கில் இருக்கும் சொலவடைகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ஐயனார் கோயில்களிலும், சுடலைமாடன் கோயில்களிலும் அரிதாகக் காணப்படும் பட்டாணி ராவுத்தர் சாமி பற்றிய ஆய்வுகளை அந்தந்த ஊர்களுக்குச் சென்று மேற்கொண்டவர். அவரது முதல் நெடுங்கதையே (Novel) கொற்கைமுத்தாக மிளிர்கிறது. அந்த இளம் படைப்பாளியைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
உயிர்சுருட்டி - ஆம்பல் பதிப்பகம், சென்னை - 8, செல்லிடப்பேசி: 78689 34995
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.